எஸ்.பி.பி பற்றி 10 சுவாரசியமான விஷயங்கள் - இவள் பாரதி


1. யேசுதாஸ் பாடிய' உன்னிடம் மயங்குகிறேன்’ பாடல் எஸ்.பி.பி. பாட வேண்டியது. ஆனால் அவர் ரொம்ப சிறப்பாக பாடியிருந்தார் என்று எஸ்.பி.பி பாராட்டி இருக்கிறார்.

2. சிறந்த இசையமைப்பாளர் சிறந்த பாடகராக இருக்கமுடியாது.. சிறந்த பாடகர் சிறந்த இசையமைப்பாளராக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறர் எஸ்.பி.பி. ஆனால் எஸ்.பி.பி  சிறந்த இசையமைப்பாளராகவும், ஆகச் சிறந்த பாடகராகவும் பரிணமித்தவர்.  

3. பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமில்லாமல் எம்.ஆர்.ராதா, சுருளிராஜன், கவுண்டமணி, ஜனகராஜ் என  சிறந்த குணச்சித்திர நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடிய பெருமை எஸ்.பி.பிக்கு உண்டு. குரலை மாற்றி அவர்களுக்கேற்றபடி பாடுவதில் திறனுடையவர். 

4. ஒரு கேரக்டர் என்ன தொணியில் அல்லது மாடுலேஷனில் பேசுகிறதோ அதே பாணியில் பாடி அந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பவர். ஜனகராஜ் நடித்த ஏஞ்சோடி மஞ்சக்குருவி பாடல், ரஜினிக்கு ஆடிமாசம் காத்தடிக்க பாடல், சிவகுமார் நடித்த உச்சிவகுந்தெடுத்த பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

5. 'ஐஸ்வாட்டர், ஐஸ்க்ரீம் இல்லாம எனக்கு இருக்க முடியாது’ என்று ஒருமுறை சொல்லிருக்கிறார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் புகைப்பழக்கம் கூட  யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். இத்தனை விஷயங்களையும் கடந்து எஸ்.பி.பியின் குரல் இன்று வரைக்கும் கிறங்கடிக்கிறது..  குதூகலிக்கச் செய்கிறது..  மழைசாரலின் ஈரப்பதமாக இழையோடுவது என்ன மாயமோ..

6. எஸ்.பி.பி பயங்கர கிரிக்கெட் ஃபேன்.. நிறைய பேட் அவரது வீட்டு சேகரிப்பில் இருக்கிறது. 

7. உலக நாயகன் கமல்ஹாசன் படங்களால் இரண்டு விருது கிடைத்ததாக எஸ்.பி.பி. சொல்லி இருக்கிறார். தேரேமேரே பீச் ஹை என்கிற ஹிந்தி பாடல். உன்னை நெனைச்சேன்.. பாட்டு படிச்சேன் என்கிற வாலியின் வரிகளடங்கிய தமிழ்பாடல். 

8. எஸ்.பி.பி.  இசையமைத்த சிகரம் படத்தின் பாடல் அத்தனையும் உச்சம்.   இதில் ’அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ பாடல் எப்போது கேட்டாலும் தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்.

9. எஸ்.பி.பி. சரணின் பள்ளி நண்பர் அஜித். அவரை அமராவதி படத்தில் அறிமுகப்படுத்தியது எஸ்.பி.பி.தான்.

10.ஒரு பாடகராக அறிமுகமாகி நடிப்பு, இசை, நடனம், இயக்கம், பாடல் என திரைத்துறையில் அத்தனை பிரிவிலும் சிறப்பான செயல்பாடுகளால் பேசப்படுபவர். இப்படியான ஒரு சிறப்புமிக்க கலைஞனை இனி காண்பதரிது. 

கலையால் பலரது உள்ளங்களை அழகு செய்த எஸ்.பி.பி என்கிற அந்த மூன்றெழுத்து எப்போதும் இசையின் மூச்சோடு கலந்தே இருக்கும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்