இசையாய் மலரும் எஸ்.பி.பியின் சகாப்தம்

இவள் பாரதி


தாலாட்டு கேட்டு வளராத தலைமுறை கூட இருக்கும். இவர் பாடல் கேட்காமல் வளராத தலைமுறையே இல்லை என்பதே உண்மை. கவசகுண்டலத்தோடு பிறந்த கர்ணன் போல..காந்தக்குரலோடு பிறந்த  மாயக் குரல் மன்னன்
இசை உலகின் பொக்கிஷம்..  என்றென்றும் இளமை மாறாத இசைப்பூங்காற்று..

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக குரலெனும் இசையால் பல கோடி இதயங்களை தன் வசப்படுத்தியவர். எஸ்.பி.பி தனது படத்திற்கு முதல் பாடலை பாட வேண்டும் என்கிற கனவோடு திரைத்துறைக்குள் கால் பதித்து வெற்றிபெற்றவர்கள் ஏராளம்.

கொரோனா தொற்றால் ஐம்பது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி இன்று தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். 

எல்லோரது வாட்சப் ஸ்டேட்டஸிலும் அவரது ஒருசில பாடல்கள் திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன. 

போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் 
நீ நீந்த வா

இந்த தேகம் மறைந்தாலும் 
இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் 
இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே

என்கிற வரிகள் அவருக்காக எழுதப்பட்டதுபோல் இருக்கிறது. அதுதான் ஒரு படைப்பின் உன்னதம். எழுதப்பட்ட காலத்தில் இருந்த நோக்கத்தைவிட பின்னொரு காலத்தில் மிகப் பொருத்தமாக அந்த வரிகள் அந்த சூழலுக்குப் பொருந்திப் போகும். அப்படியான படைப்புகளின் வரிசையில் மேற்குறிப்பிட்ட பாடலும் ஒன்று. 

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி 

என்கிற பாடலுக்கும் அந்த வரிசையில் இடமுண்டு. 

45000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி 6 தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள் என பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது குரலால் மனச் சோர்வுற்றிருக்கும் யாரோ ஒருவர் வாழ்தலுக்கான உந்துதலோடு மீண்டு வந்து தனது இயல்பு வாழ்க்கையை வாழத் துவங்கியிருப்பார் எனில் அதுவே அந்த படைப்பின் வெற்றி. 

அப்படியான பல நிகழ்வுகளை இளையராஜாவும், எஸ்.பி.பியும் சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஒரு நேர்காணலின் போது அவர் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. எஸ்.பி.பி.க்கு ஐஸ்க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் குரலுக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதென பல பிரயத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால் பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி அதே சமயத்தில் பிடித்ததையும் செய்யக்கூடியவர். ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டி வந்தபோதுதான் எஸ்.பி.பியின் சாயலைப் போல குரல் கொண்ட மனோ இசையுலகில் அறிமுகமாகிறார். அந்த ஆறு மாதத்தில் எஸ்.பி.பி பாட வேண்டிய பல பாடல்கள் மனோவுக்கு கிடைத்திருக்கிறது. இயற்கை ஒரு விஷயத்தை செய்கிறபோது அதில் ஏதோ ஒரு நன்மை இருக்கும் என்று நம்பியவர் எஸ்.பி.பி. அதனால் மனோவுக்கு கிடைத்த வாய்ப்புகள் பெரிது.

அதேபோல அமராவதி படத்தில் அஜித் அறிமுகமாவதற்கும் எஸ்.பி.பி.யே காரணம். எஸ்.பி.பி சரன் மூலம் வீட்டுக்கு வந்து சென்ற அஜித்தை ஆசை படத்திற்கான கதாநாயகர் தேடலின்போது எஸ்.பி.பி பரிந்துரைத்திருக்கிறார். ஒரு அறிமுகம் கிடைக்காமல் திரைத்துறையில் தனது சாதனைகளை நிகழ்த்த முடியாமல் அலையும் கோடிக்கணக்கானவர்கள் தனது கனவுகளோடு மட்டுமே வாழ்ந்துவருவதைக் கண்கூடாக காண முடியும். ஒரே ஒரு அறிமுகம் ஒருவரது வாழ்க்கையை உச்சத்தில் கொண்டு சென்றதையும் காணமுடியும்.

இப்படி சின்ன சின்ன தனது செயல்கள் ஒவ்வொன்றாலும் பல சாதனைகள் செய்தவர். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ஜி.வி.பிரகாஷ் வரை எஸ்.பி.பி பல தலைமுறை நாயகர்களுக்கு குரலால் அழகு செய்தவர். பல மொழிகளில் பாடிய ஆச்சர்ய குரலோன். 


மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது அவரது இறந்துபோன புகைப்படத்தை பலரும் காண மறுத்து காரணமொன்று சொன்னார்கள். அவரை நாங்கள் இதுவரை நேரில் பார்த்ததில்லை. அவருடைய காணொளிகள் மூலம்தான் எங்களுக்கு அவர் அறிமுகம். அவர் காணொளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவர் உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறோம் என்றனர்.

அதுபோலவே எஸ்.பி.பி. யை நேரில் காணாத பலர் இருக்கின்றனர். அவருடைய பாடல்கள் மட்டுமே பலருக்கும் ஆதாரம். ஆகாரம். அவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே அவர் இருப்பதாக நினைத்துக் கொண்டே இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். 

எஸ்.பி.பி. பாடல்களால் அறிமுகமானார்
எஸ்.பி.பி பாடல்களால் ஆசுவாசப்படுத்துகிறார்
எஸ்.பி.பி. பாடல்களால் ஆள்கிறார்.
எஸ்.பி.பி பாடல்களால் வாழ்ந்திருப்பார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்