விஜய் சேதுபதியின் 800 படமும், கொஞ்சம் குஷ்பூவும்

எப்போதெல்லாம் போராட்டம் தலைதூக்குகிறதோ அல்லது அதிகமான போராட்டங்கள் நாடு முழுவதும் நடக்கிறதோ அப்போதெல்லாம் கதைக்கு உதவாத செய்திகளே பரபரப்பாக பேசப்படுகின்றன. 

இதோ மற்றுமோர் உதாரணம்தான். விஜய் சேதுபதியின் 800 படமும்,  பாஜகவில் குஷ்பூவும். 

விவசாயிகளுக்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்கள் போராட்டத்தைக் கையில் எடுக்கிறார்களா? அதனால் ஒன்றுமில்லை. இருக்கவே இருக்கிறது. விஜய் சேதுபதியின் படமும், நகைக்கடை விளம்பரமும். இதுவும் போதவில்லையா? களமிறக்குகிறோம் கோவில் கட்டி ஆராதனை செய்யப்பட்ட நடிகை குஷ்பூவை. 

சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை எனஅரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறார்களா? அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது.  கொஞ்சம் கிரிக்கெட், நிறைய பிக்பாஸ். 

எப்போதும் போராட்டம் போராட்டம் என்றால் எப்போதுதான் வாழ்க்கையை வாழ்வது? தினசரி வாழ்வில் கொஞ்சம் பொழுதுபோக்கு வேண்டாமா? என தனது கைப்பேசிக்குள் நுழையும் ஒருவனை இங்கே வா பிக்பாஸ் அனிதா ட்ரெண்டிங், இங்கே பார் தோனி - ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் அடிக்கலாமா? இங்கே பார் குஷ்பூ கட்சி மாறுகிறார், இதோ நகைக்கடை விளம்பரத்தை ஏன் திடீரென எதிர்க்கிறார்கள்? அட விஜய் சேதுபதி தமிழனுக்கு விரோதியா? இப்படியாக கவனத்தை திசை திருப்ப எக்கச்சக்க யுக்திகள் எப்போதும் ஏவப்படுகிறது.

இதையெல்லாம் ஊடகங்கள் பெரிதாக்கி பேசினால்தான் ரிபப்ளிக் டிவியுடன் மூன்று சேனல்கள் செய்த டி.ஆர்.பி. ஊழல் கவனிக்கப்படாமல் போகும். உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளும், கொடூரச் செயல்களும் கவனத்தில் இருந்து மறையும். 


சரி, எதையுமே கவனிக்கக் கூடாதா? கருத்துச் சொல்லக்கூடாதா? என்றால் அப்படி யாரும் யாரையும் சொல்லப்போவதில்லை.

விஜய் சேதுபதி படத்தை எடுத்துக் கொள்வோம். முத்தையா முரளிதரன் என்கிற கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது. ஏனெனில் இன அழிப்பைச் செய்த ஒரு நாட்டின் தேசியக்கொடியை அணிந்து மக்கள் செல்வன் நடிப்பது தமிழின துரோகம் என்று ஒரு பக்கம்; படைப்பைப் படைப்பாக பார்க்கும் பக்குவமில்லை; துரோகங்களை செய்த பலரும் ஈழ விஷயத்தில் அப்போது குளிர்காய்ந்தவர்களே என்ற கருத்து ஒரு பக்கம். 

சொல்லப் போனால் மக்கள் தனது கருத்துக்களைத் தெரிவித்து விட்டு அடுத்த செய்திக்கு நகர்ந்துபோகலாம். அடுத்த செய்தி வரும் வரைக்கும்தான் விஜய்சேதுபதியின் 800 பற்றிய அலசல். இதோ வந்துவிட்டது குஷ்பூ குறித்த செய்திகள்.

நேற்று காங்கிரஸ்; இன்று பாஜக. கேட்கவே வேண்டாம். இன்றைய காலத்தில் நேற்று பாஜகவுக்கு எதிராக அவர் பேசிய பழைய வீடியோக்களை மீண்டும் பரபரப்பாக்குவது; இன்று அவர் காங்கிரஸை விமர்சிப்பதையும், நேற்று அவர் பாஜகவை விமர்சித்ததையும் சேர்த்து எடிட் செய்து மீம்ஸ் உருவாக்கலாம்.அட அந்தப் பக்கம் ஒரு சத்தம் கேக்குதே... ஆமாம்... ஐந்து வருடத்திற்கு முன்னால் உருவாக்கப்பட்ட ஒரு பாடலை இன்றைக்கு ட்ரெண்ட் செய்து மீம்ஸ் உருவாக்குவது என நமக்குத்தான் ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டி நிற்கிறதே.

ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எது ட்ரெண்ட் ஆக வேண்டும்; எதைப் பற்றி மக்கள் பேச வேண்டும்? எதை மக்கள் மறக்க வேண்டும்? எதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்? என எல்லாமும் இங்கு திட்டமிடப்பட்ட ஒன்றுதான்.

8500 கோடிக்கு வாங்கிய சொகுசு விமானத்தை மறந்தோம்; மாநிலங்களுக்கு 12000 கோடி நிதி தருவதாக நிதியமைச்சர் கூறியதில் தமிழகத்திற்கு முன்னர் வர வேண்டிய 5000 கோடி ஜி.எஸ்.டியும் உள்ளடக்கமா என்பதைக் கேட்க மறந்தோம். 85 கோடி குடும்பங்கள் என்று பிரதமர் சொன்னபோதும் அதுகுறித்த எந்தவித அலட்டலுமின்றி ஒரு மீமோடு கடந்து போகிறோம். ஒரு பிரதமர் டிவியில் பேசுகிறார். அதுவும் வீட்டிலிருந்து பேசுகிறார். அதற்கு 800 கோடி செலவாகிறது. அதுகுறித்து கேள்வி எழுப்ப இங்கு அவசியமில்லை. 

சீனா எல்லை, காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் என நாம் என்ன சிந்திக்க வேண்டுமென நமக்கு கீவேர்டுகள் மாற்றிக் கொடுக்கப்படும் நிலை எப்போதோ உருவாகிவிட்டது. கொரோனா ஊழலும், கொரோனா காலச் சட்டங்களின் மாறுதலும், வேலை இல்லாத் திண்டாட்டமும், பொருளாதாரச் சரிவும் என எதுகுறித்தும் இப்போது பேசத் தேவையில்லை.  

இதோ அடுத்த செய்திகள் நீங்கள் எதுகுறித்துப் பேச வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி நிரல்கள் உருவாகி இருக்கும். தயாராகலாம்; ஒரு கையில் ட்விட்டரும், மறுகையில் மசால் வடையுமாக.

பாரத் மாதா கீ சே!

இவள் பாரதி,
ஊடகவியலாளர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்