நடிகர் தவசிக்கு பாடலாசிரியர் ஏகாதசியின் உருக்கமான அஞ்சலி

அண்ணன் சீமான் அவர்களின் " வீரநடை " படப்பிடிப்பில் நாம் முதன் முதலாக சந்தித்தோம். சந்தித்த நாளின் இரவில் ஓர் அறையில் நீங்கள் நான் சிவமணி மாமா ஆகிய மூவரும் தங்கினோம். கட்டிலை எனக்குத் தந்து அன்று தரையில் தூங்கினீர்களே மாமா.. அடுத்த ஆண்டே (1999 ) நானும் சினிமாவில் பணிபுரிய சென்னை வந்துவிட்டேன். 

அதன் பின்னான ஒரு நாளில் உங்கள் அறையில் என்னிடம் 6 மணி நேரம் ஒரு கதை சொன்னீர்கள். நடிகராக மட்டுமல்லாது ஒரு கதைக்காரராகவும் அறிந்த நாள் அது. ரொம்ப வருசங்களாக இயக்குநராகவும் சாதிக்கப் போராடிக் கொண்டிருந்தீர்கள். ஒரு மண்ணின் கதையையும் அதற்கு " ரத்தக் கண் விருமாண்டி " என்ற தலைப்பையும் சுமந்தபடி போய்விட்டீர்களே மாமா. எனது சொந்த ஊரான மதுரை மாவட்டம்  பணியான் கிராமத்தில் உங்கள் தங்கை வாழ்க்கைப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் மகனுக்கும் எங்கள் ஊரில் தான் பெண் எடுத்திருந்தீர்கள். அங்கேயுள்ள எனது வீட்டு வாசலில் அமர்ந்து என் அம்மாவிடம் பேசிவிட்டுப் போனதை மறக்கமுடியவில்லை மாமா.  நீங்களும் நானும் ஓர் அறையில் தங்கி சினிமாவில் வேலை தேடிக் கொண்டிருந்த அந்த இரண்டாண்டுகள் நெஞ்சை அழுத்துகின்றன மாமா. அந்த ஈராண்டுகளும் நீங்களும் நானும் சமைத்துச் சாப்பிட்டோம். இனி என்றைக்கு மாமா உன்னோடு சேர்ந்து நான் சாப்பிடுவது.  

என்னை " மறுமகனே "  என்றும் " மாப்பிளே " என்றும் அழைக்கும் அந்த தொலைப்பேசியிலிருந்து இனி உன் குரல் கேட்குமா மாமா. நான் இயக்கிய " கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை " திரைப்படத்தில் நாயகியின் பெரியப்பா கதாபாத்திரத்தில் உங்களை நடிக்க வைத்து பெருமை சேர்த்துக் கொண்டேன். எனது இரண்டாவது படத்தில் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளாத வருத்தம் இன்றளவும் உண்டு உங்களை நகைச்சுவை நடிகராகத்தான் உலகம் அறிந்திருக்கிறது. 


நீங்கள் அற்புதமான குணச்சித்திர நடிகர் என்பதை நான் அறிவேன் மாமா. கடைசியாக எங்கள் வீட்டில் நடந்த விழாவிற்கு நீங்கள் வந்தபோது உங்கள் முகத்தைப் பார்த்தது. சில நாட்களில் மதுரை வந்து மருத்துவனையில் சந்திக்க திட்டமிட்டிருந்தேன் மாமா. ஆனால் அதற்குள் விடை பெற்றுச் சென்றுவிட்டீர்களே! என் இதயத்தை ஏமாற்றிவிட்டீர்களே. 

போய் வா மாமா.‌. இந்த சென்னை மாநகரின் தெருவெல்லாம் உன் கால்த்தடங்கள் கிடக்கின்றன கல்வெட்டுக்களாய் . உன் நினைவு வரும்போதெல்லாம் உன் தடங்களைத் தடவிப் பார்த்துக் கொள்கிறேன். 

இப்படிக்கு உன் மாப்பிள்ளை, 
ஏகாதசி

கருத்துரையிடுக

0 கருத்துகள்