உலகின் தலை சிறந்த 100 பெண்களில் ஒருவராக பாடகி இசைவாணி தேர்வு

இவள் பாரதி

பிபிசி ஆண்டுதோறும் உலக அளவில் தனது செயல்களால் கவனம் ஈர்த்த தலைசிறந்த 100 பெண்களைத் தேர்ந்தெடுத்து கெளரவிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த 100 பெண்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கானா இசைக் கலைஞர் இசைவாணி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

BBC தேர்ந்தெடுத்த 100 பெண்களில் 4 பேர் இந்தியர்கள். இவர்களில் பாடகி இசைவாணி தமிழகத்தைச் சேர்ந்தவர். 

பாடகி இசைவாணி: 

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவைச் சேர்ந்தவர் பாடகி இசைவாணி.  ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் இசைத்துறையில் அதிலும் கானா இசையில் தொடர்ந்து தனது பாடும் திறமையால் கவனம் ஈர்த்து வருபவர். ஆண்களோடு தொடர்ந்து ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பில் தனது தனித்துவத்தால் மிளிர்ந்துகொண்டிருப்பவர். 

பாடகி இசைவாணிக்குக் கிடைத்த புகழ் இசைக் கனவுகளோடு சாதிக்கத் துடிக்கும் பல பெண்களைக் கானா இசைக்கு பல தடை மீறி அழைத்து வரக்கூடும். 

பில்கிஸ் பனோ: 

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து 101 நாட்கள் ஷாஹின் பாக்கில் அறவழிப் போராட்டத்தில் ஊக்கத்துடன் கலந்து கொண்ட 82 வயதான பில்கிஸ் மிக பிரபலமாக பேசப்பட்டவர். போராட்டத்தின் கலந்துகொண்டிருந்த அவரை பேட்டி எடுத்த போது கூறிய வார்த்தைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. 


கடுமையான குளிர்கால இரவிலும் கூட காலை எட்டு மணிக்கு வந்து நள்ளிரவு கடக்கும்வரையிலும் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹின்பாக்கின் அடையாளமாக மாறியவர் பில்கிஸ். 

ரிதிமா பாண்டே:

13 வயது நிரம்பிய ரிதிமா பாண்டே  ஒரு காலநிலை ஆர்வலர். தனது ஒன்பது வயதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிற காரணிகளை நிறுத்தக் கோரி ஐ.நாவுக்குக் கோரிக்கை வைத்தவர். 
2019 ஆம் ஆண்டில் 15 குழந்தைகளுடன் ஐந்து நாடுகளுக்கு எதிராக ஐ.நாவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரியவர். 
 
மானஷி ஜோஷி:

மானஷி ஜோஷி இந்தியன் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர். பாரா பாட்மிண்டன் விளையாட்டின் உலக சாம்பியன். 
31 வயதான மானஷி தனது ஆறு வயதிலிருந்து பாட்மிண்டன் விளையாடி வருகிறார். 2010ல் நடந்த ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் தொடர்ந்து விளையாட்டில் பயிற்சி பெற்றார். ஆசியன் பாரா ஒலிம்பிக்கில் 2018ல் வெண்கலம் வென்றவர். இந்த ஆண்டு பிபிசியின் தலைசிறந்த நூறு பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கருத்துரையிடுக

0 கருத்துகள்