BBC யின் சிறந்த நூறு பெண்களில் ஒருவரான பில்கிஸ் டாடி


பிபிசி ஆண்டுதோறும் உலக அளவில் தனது செயல்களால் கவனம் ஈர்த்த தலைசிறந்த 100 பெண்களைத் தேர்ந்தெடுத்து கெளரவிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் BBC தேர்ந்தெடுத்த 100 பெண்களில் 4 பேர் இந்தியர்கள். இவர்களில் ஒருவர்தான் பில்கிஸ் பனோ. 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக்கில் தொடர்ந்த போராட்டம் இந்தியாவின் கடைக்கோடி வரைக்கும் தொடர்ந்தது. கொரோனாவுக்கு முன் வரைக்கும் எழுச்சியுடன் நடந்த போராட்டத்தை எளிதில் மறந்துவிட முடியாது. 

டெல்லி ஷாகின் பாக்கில் போராட்ட ’பில்கிஸ் டாடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பில்கிஸ் பனோவும் கலந்து கொண்டார். இவருக்கு 82 வயது. இவர் டைம் இதழின் 100 தலைசிறந்த பெண்களின் பட்டியலில் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து 101 நாட்கள் ஷாஹின் பாக்கில் அறவழிப் போராட்டத்தில் ஊக்கத்துடன் கலந்து கொண்ட 82 வயதான பில்கிஸ் மிக பிரபலமாக பேசப்பட்டவர். போராட்டத்தின் கலந்துகொண்டிருந்த அவரை பேட்டி எடுத்த போது கூறிய வார்த்தைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. 

முகச் சுருக்கங்களுடன் கண்களில் தீர்க்கமான ஒளியுடன் பிரகாசிக்கும் புன்னகையுடன் ஷாஹின் பாக்கில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டடி பத்திரிகையாளர்களின் எந்த கேள்வியையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருந்தார்.




இந்த ஆண்டு ஜனவரியில் ’மோடிக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். இங்கே வந்து எங்களுடன் நான்கு நாட்கள் உட்கார்ந்திருக்க முடியுமா? பிரியாணிக்காகவும், 500 ரூபாய் பணத்துக்காகவும் கூட்டம் கூடியதாக பிரதமர் மோடி கூறுகிறார். பிரியாணி தினமும் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஷாஹின் பாக் மக்களுக்கு பிரியாணி ஒன்றும் புதிய உணவல்ல.’ என்றவர். 

அதே போல பிப்ரவரியில்,  ‘நான்கு மாத குழந்தை இறந்து போனதற்கு வருத்தப்படும் பிரதமர் 40 குழந்தைகள் காயப்பட்டபோது வருத்தப்பட வில்லையே, அது வலியாக இல்லையா? நான்கு மாத குழந்தை இறந்துபோனது, நீங்கள் மட்டும் பல காலம் வாழ்வீர்கள். நானும்கூட ஒருநாள் இறந்துபோவேன்’ என்று தைரியமாக பேசியவர்.

கடுமையான குளிர்கால இரவிலும் கூட காலை எட்டு மணிக்கு வந்து நள்ளிரவு கடக்கும்வரையிலும் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹின்பாக்கின் அடையாளமாக மாறியவர் பில்கிஸ். 




பில்கிஸ் குறித்து பிரபல ஊடகவியலாளர் ராணா அயூப் இவ்வாறு குறிப்பிடுகிறார்.   “நான் தொடர்ந்து இங்கு உட்கார்ந்திருப்பேன் எனது இரத்த ஒட்டம் நரம்புகளுக்குள் செல்ல தடை ஏற்படும் வரை; ஏனெனில் இந்த நாட்டின் குழந்தைகள் சுதந்திர காற்றையும், சம உரிமையையும் பெற வேண்டும்” என்று பில்கிஸ் கூறினார்.  ஒரு கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக விளங்கும் பில்கிஸ் உலக அளவிலான அங்கீகாரத்தை பெற தகுதியானவர்.” என்கிறார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்