யாருக்காக யாரை எதிர்ப்பது? - விவசாயிகள் போராட்டமும் அடக்கும் அரசும்

இசை பிரியா 

ஒரு அரசு கண்ணீர் புகைகுண்டுகள், போலீஸ் தடியடி என முன்னறிவிப்பின்றி அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தீவிரவாதத்துக்கு எதிராகவா? சாதாரண விவசாயிகளுக்கு எதிராக, தனது மக்களுக்கு எதிராக ஒரு அரசு அதிகாரத்தை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும்குளிரையும், போலிஸின் அடக்குமுறையையும் பொருட்படுத்தாது பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், தமிழகம் என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 12 மில்லியன் விவசாயிகள் தலைநகரை நோக்கித் திரண்டிருக்கின்றனர். ஆனால் தமிழக செய்திகளில் அது நிவர் போலவே, அல்லது வரப்போகும் புரவி போலவே எந்த ஒரு சின்னஞ்சிறு அசைவையும் ஏற்படுத்தவில்லை என்பது வருத்தத்ததுக்குரியது மட்டுமல்ல வெட்கத்துக்குரியதும் கூட. 

கொரோனா காலகட்டத்தில் எல்லோரையும் வீடுகளுக்கு அடையவைத்து போராட்டத்துக்கு மக்கள் வெளியே வரமுடியாத நிலையை உருவாக்கி தனக்கேற்ற பல சாதகமாக திட்டங்களை சட்டங்களாக மாற்றி அறிவிப்புகளாக மட்டும் அறியத் தரும் ஒரு அரசு உலகத்தில் இருக்கிறதென்றால் அது இந்தியாவில் மட்டும்தான். 
சில வருடங்களுக்கு முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒருமுறைகூட பிரதமர் விவசாயிகளை சந்திக்கவே இல்லை என்பது வரலாறு. 

’பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது; போராட்டம் செய்ய வேண்டாம்’ என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் கேட்டுக்கொண்டதும் வெறும் பேச்சளவிலேயே உள்ளது. 

டெல்லியில் விவசாயிகள் நுழையக்கூடாது என்று முள்கம்பி வேலிகளை அமைத்தது, மணல் மூட்டைகள் ஏற்றப்பட்ட வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியது என பல படுபாதக முயற்சிகளில் ஈடுபடுவதற்கு காட்டு முனைப்பை விவசாயிகளைச் சந்தித்து பேசவோ, டெல்லிக்குள் போராட்டத்துக்கு அனுமதிக்கவோ மறுப்பது மீண்டும் மீண்டும் கட்டவிழ்க்கப்பட்ட அதிகாரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விவசாயிகளுக்கு ஆதரவான செய்திகளே சான்று.

ஐந்து நாட்களைக் கடந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி இரவு பகலாக தன்னுரிமைக்காகவும் மண்ணுரிமைக்காகவும் போராடும் விவசாயிகளுக்குத் துணை நிற்போம். 

அதிகாரத்தின் மெளனத்தால் 
அத்துமீறும் அடக்குமுறையால்
துவளாது திமிர்ந்து சென்று
எதுவரினும் கைபார்க்கலாமென 
களமிறங்கிய சேற்றுக்கால்காரர்கள் 
நமது தலைமுறையின் மிச்சங்கள்
இவர்களின் வீழ்ச்சியைக் கண்முன்னே 
கண்டு கடந்துபோவது 
நமது சந்ததிகளின் எரியூட்டு நிகழ்ச்சிக்கு 
விறகு சேகரிப்பதற்கு ஒப்பாகும்
மெளனம் உடைத்து வெடித்தெழு
இனி ஒருவிதி செய்வோம்
அதை இந்த நாளே செய்வோம்
 
- பாடினி


யாருக்காக யாரைப் பகைப்பது? 
யாருக்காக யாரை அழிப்பது? 
எந்த ஒன்றுக்காக எந்த ஒன்றை இழப்பது? 
எதற்காக எதை எதிர்ப்பது?
விவசாயிகளுக்கு ஆதரவாக திரளாத யாரும் 
நாளை உணவுக்குக் கையேந்தும் நிலைவரும்போது
அந்த கைகளில் காய்த்தும்போன 
பொய்த்துப்போன ஒவ்வொரு ரேகையிலும்
இன்றைய மெளனத்தின் பேரிடி விழுந்தததின் தடமிருக்கும்

- இசை பிரியா 

#iamwithfarmers 
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்