நிவர் புயலால் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கும் வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கணிப்பின்படி நிவர் புயலின் பாதையும் பயணமும் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். இதற்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை இருவிதமாக கடப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. 

* ஒருவேளை புயல் வலுவிழந்தால் டெல்டா பகுதியில் கரையைக் கடக்கலாம்
* ஒருவேளை புயல் வலுப்பெற்றால் காரைக்கால் சென்னை இடையே கரையைக் கடக்கலாம்

புயல் வலுவிழந்தால்:

* ஒருவேளை புயல் வலுவிழந்தால் டெல்டா பகுதியில் வேதாரண்யம் - காரைக்கால் இடையே நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் கரையைக் கடக்கக் கூடும்.  


* புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சராசரியாக 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். புயல் வலுவிழந்து நிலப்பகுதியில் கரையைக் கடக்க  20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. 

* ஒருவேளை நிலப்பகுதியில் நிவர் கரையைக் கடக்கும்பட்சத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்காலில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது* திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், புதுச்சேரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

புயல் வலுப்பெற்றால்:

* ஒருவேளை புயல் வலுப்பெற்றால் காரைக்கால் - சென்னை இடையே கரையைக் கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது. அதனால் நவம்பர் 24 - 25 தேதிகளில் கனமழை பெய்யும். 25ம் தேதி புயல் கரையைக் கடக்கும். 
* புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சராசரியாக 120 - 140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். 

* இதன்படி கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும். * கள்ளக்குறிச்சி, நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மிக கனமழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பில்லாத மாவட்டங்கள்:  

புயல் வலுப்பெற்றாலும், வலுப்பெறாவிட்டாலும் தென் மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறைவு. இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அரிது. இது முதல் கட்ட கணிப்புதான். புயல் நெருங்கும் நேரத்தில் கணிக்கும்போது இந்த தெளிவு  கூடலாம். 

புயல் வடக்கு நோக்கி வரக் காரணம்:

புயல்கள் பெரும்பாலும் பசிபிக் கோடுகள் மூலம் நகர்த்தப்படுவதால் மேல்நோக்கித்தான் புயல் நகரும். மேல் நோக்கி நகரும்போது புயல் எளிதாக கரையைக் கடக்கும்.

புயல் கீழ் நோக்கி நகரும் வாய்ப்பு குறைவு.  அப்படிச் செல்லும்போது அதிக அளவு வலு இருக்காது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் கஜா புயல் அரபிக்கடல் நோக்கி நகர்ந்தது. விதிவிலக்காக வலுவாகவும் இருந்தது. 

டெல்டா மக்களுக்கு வேண்டுகோள்:

டெல்டா பகுதி மக்கள் புயலின் தாக்கத்திலிருந்து மரங்களைக் காக்கும் நோக்கத்தில் மரங்களின் கிளைகளை வெட்டுகிறார்கள். நிவர் புயலால் டெல்டா பகுதி மக்களுக்கு பலமான காற்று வீசுவதற்கு வாய்ப்பு குறைவு. எனவே அச்சப்பட வேண்டாம். மரங்களை வெட்டவும் வேண்டாம். 

இலங்கையைத் தவிர்க்கும் புயல், ஏன்?

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இலங்கைக்குச் செல்லாமல் தமிழகக் கடற்கரையோரங்களையே கடக்கிறது. இதற்கு முன்னும் சில புயல்கள் இலங்கையைத் தவிர்த்து தமிழகக் கரையோரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. 

2008ல் நிஷா, 2012ல் நீலம் இலங்கையைத் தொடாமல் தமிழகம் வந்தது. இந்த புயல்கள் அனைத்தின் பெயரும்  என் எனப்படும் ஆங்கில எழுத்தில் ஆரம்பித்திருப்பது ஒரு ஒற்றுமை. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 

தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இந்த புயலைத் தொடர்ந்து மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இருக்கலாம் என்பதால் ஆழ்கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கூடுதல் தகவல்:

இப்போது வரும் புயல்களின் உயரம் 20 / 30 கி.மீ அதிகமான உயரத்தைக் கொண்டிருக்கிறது. நேற்று அரபிக்கடலில் கட்டி புயல் கடும்புயலாக மாறிப்போனது. அதன் தீவிரமும், வேகமும் மணிக்கு 200 கி.மீ வரை இருந்தது. அதனால் நிவர் புயல் சாதாரணமாக இருந்தாலும் நூறு சதவீத மழைக்கு வாய்ப்புள்ளது. இன்னும் அருகில் வரும்போது துல்லியமாகக் கணிக்கலாம். 


இவ்வாறான விஷயங்களை பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்