’இதோ வந்துட்டேன்னு சொல்லு’ - முடியல

இசை பிரியா

’இதோ வந்துட்டேன்னு சொல்லு’ என்று எப்போது படத்தில் டயலாக் பேசினாரே அது அப்படியே நிலைத்துவிட்டது போலும். 

இதோ வர்றேன்.. வந்துட்டேன்.. என்று அவர் சொல்லும் ஒவ்வொரு முறையும் பல கிண்டல்களும், கேலிகளும் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் இப்பவாவது வர மாட்டாரா? என்ற நிஜமாகவே எதிர்பார்க்கும் அவரது ரசிகர்களுக்கும் பஞ்சமில்லை.
ஆலோசனைக் கூட்டம்,  நிர்வாகிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்களுக்குப் பேட்டி என வருடம் நான்கைந்து முறை ஊடகங்களுக்கு செய்தி சேவை வழங்குவதைத்தவிர வேறெந்த போக்கும் தெரியவில்லை. 

இதில் அவர் இதற்கு ஏன் கருத்துக் கூறவில்லை, அதற்கு ஏன் இப்படிக் கருத்து தெரிவித்தார் என்று நெட்டிசன்கள் பொரிந்து தள்ளிவிடுகின்றனர். 

ஒரு பிரபலம் எவ்வளவுதான் தாங்குவார். இதோ அவரோ என் உயிரைப் பற்றி கவலை இல்லை என்று சொல்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அவருக்கு உடல்நிலை நலமாக இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனைகள் எப்போதும் ரசிகர்களிடத்தில் இருக்கிறது. 

நான் என்ன முடிவெடுத்தாலும் இவர்கள் உடனிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்; நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று அவரும் கதறக் கதறப் பதிலளிப்பதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. 

அவர் ஒரு திரைக் கலைஞனாக ஒரு எண்டர்டெயினராக ஈரேழு தலைமுறைக்கும் நிலைத்து நிற்பார். மீண்டும் மீண்டும் வாருங்கள், வாருங்கள் என்று கூறுவதும், பதிலாக இதோ வர்றேன், வந்துடறேன் என்று அவர் கூறுவதும் உண்மையிலேயே ஆளில்லாத கடையில் யாருக்கு டீ என்பதா? கிளம்பு கிளம்பு காத்துவரட்டும் என்று கலகக்காரன் வடிவேலுவின் டயலாக்கைத் துணைக்கு அழைப்பதா? ஒன்றுமே புரியவில்லை. 

ஒண்ணுமே புரியலை உலகத்துல.. என்ற பாடல் மட்டுமே இப்போதைக்கு ஆறுதல். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்