யார் இந்த தரம்பால் குலாத்தி?

சிவப்பு கலர் டர்பன், தங்க நிற குர்தாவில் MDH மசாலா விளம்பரத்தில் தோன்றும் இவர் மிகப் பெரும் தொழிலதிபர். MDH மசாலா நிறுனத்தின் உரிமையாளர். இவர் இன்று காலை காலமானார். இவருக்கு வயது 97.MDH மசாலா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தரம்பால் குலாத்தி வட இந்திய மசாலா நிறுவனத்தின் ஐகானாக திகழ்பவர். இவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்கள்...

மார்ச் 27ல் 1923 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்தவர் தரம்பால் குலாத்தி. Mahashian Di Hatti என்ற மசாலா நிறுவனம் தரம்பால் குலாத்தியின் தந்தை மகசே சன்னிலால் குலாத்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.


இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அதே பெயரில் டெல்லி வந்து மீண்டும் நிறுவனத்தைத் துவங்கினர். தரமான மசாலா நிறுவனமாக வளரத்துவங்கிய போது தந்தைக்கு தொடர்ந்து தொழிலில் உதவிகரமாக இருந்தார் தரம்பால்.

இப்போது இந்தியா மற்றும் துபாயில் 16 இடங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் குதிரை வண்டி ஓட்டுநராகக் கூட இருந்திருக்கிறார் தரம்பால் குலாத்தி. வட இந்தியாவில் 62 தயாரிப்புகள் மற்றும் 80 சதவீத மார்க்கெடி ஷேர் உள்ள நிறுவனம் இவருடையது.

தினமும் ஏதாவது ஒரு நிறுவனத்திற்காகவது நேரடியாக சென்றுவிடுவது தரம்பாலின் வழக்கமாம். அவருக்கு ஆறு மகள்களும் ஒரு மகனும் உண்டு. இத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமான அவரது வாழ்க்கைமுறைக்கு காரணம் உடற்பயிற்சி என்று சொல்கிறார்.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து நேரு பூங்காவில் நடக்கச் சென்றுவிடுவார். யோகா செய்வதும் அவரது வழக்கம். எளிய காலை உணவாக எடுத்துக் கொள்வார். இரவு உணவிற்குப் பிறகும் சிறிது நடப்பாராம். தினமும் வாட்சப்பில் செய்திகளை அப்டேட் செய்துகொள்வாராம்.

இவரது மசாலா நிறுவனத்தின் டிவி விளம்பரத்தில் தாத்தாவாக நடிக்க வேண்டிய போது இவரே நடித்தால் பணமும் மிச்சம் என்று இயக்குனர் கூற இவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார். டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் நேர்காணலில், ‘ஷாரூக்கான், அமிதாப் பச்சன் ஆகியோரை உங்கள் மசாலா தயாரிப்பு விளம்பரங்களில் நடிக்க வைத்து பிரபலப்படுத்தலாமே என்று கேட்கின்றனர். நான் இந்த நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமானவன், நான் ஏன் எனது தயாரிப்பைப் பிரபலபடுத்தக்கூடாது’ என்று கேட்டிருக்கிறார்.

ஸ்பைஸ் கிங் என்றழைக்கப்படும் தரம்பால் குலாத்தி 2018ல் 25 ஆயிரம் கோடி சம்பளம் பெற்ற சி.ஈ.ஓ. இவர் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு தொழிலதிபராக மட்டுமின்றி நிறைய சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்தவர். மிகவும் பின் தங்கிய மக்களுக்கான 250 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை மற்றும் 4 பள்ளிகள் ஆகியவற்றை நடத்திவருகிறார்.


கொரோனா காலத்தில் 7500 பிபிஈ கிட்டுகளை மருத்துவமனை ஊழியர்களுக்காக வழங்கியவர்.

2019 ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்மபூஷன் விருதை ப் பெற்றவர். பத்ம பூஷன் பெற்றவர்களில் அதிக வயதுடையவராக இருந்தவர் இவர். 

சிவப்பு நிற டர்பன் மற்றும் வெள்ளைத் தாடியுடன் தங்க நிற குர்தாவில் 
MDH விளம்பரம் இன்று திரும்ப திரும்ப பலரால் பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்