விவசாயிகளின் போராட்டத்திற்கு பண உதவி செய்வது யார்?

இசை பிரியா

போராட்டம் என்று வந்துவிட்டால் அது எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இதோ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டமும் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது.

விவசாயிகளுக்கான வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதமான நிலையில் அது குறித்து பல்வேறு ஊடகங்களில் மட்டுமல்லாது கொரானா காலகட்டமாக இருந்ததால் சூம் உள்ளிட்ட இணைய வழி தொடர்புகளில் தொடர் கலந்துரையாடலும் விவாதங்களும் நடந்து வந்தன. 
அப்போது விவசாயிகள் வீதிக்கு வந்து போரிடுவதற்கான வாய்ப்பையும் அரசு எளிமையாக பயன்படுத்திக் கொள்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வந்தது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகவே விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் நடந்துவருகிறது.
 
பஞ்சாப், உத்திர பிரதேசம், தமிழ்நாடு,மகாராஷ்டிரா என இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தலைநகரை நோக்கித் திரள இவ்வளவு நாள் தாமதம் ஏன் என்பதையும், இப்போது இந்த போராட்டம் இவ்வளவு வீரியத்துடன் நடப்பதற்குமான காரணத்தை ஆராய வேண்டியிருக்கிறது.

எந்த ஒரு போராட்டமும் எப்போது ஆரம்பிக்கும்? எப்போது முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம். போராட்டத்தில் ஈடுபடுவர்களைத் தடுக்கவும், தாக்கவும் அரசு எப்போது தயார் நிலையில் இருக்கும். பேரிடர் மேலாண்மைக்குக் கூட அத்தனை தற்காப்பாகவும், தயாராகவும் இருக்குமா? என்பது கேள்வியே. இந்த போராட்டத்தின்போது உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு யாரை நம்பிச் செல்வது? யாரை நம்பித்தான் செல்ல முடியும்? இந்த தேசத்தில் எதிர்க்கட்சி ஒன்று இருந்தாலும் அது செயல்படுகிறதா? என்பதைக் கடந்தும் கட்சி எல்லாம் கடந்து ஒன்றுபட்ட நிலையிலேயே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதோ ஒருவார காலம் ஒன்றரை கோடி மக்கள் தலைநகரில் திரண்டிருக்கும் நிலையில் இந்த தேசத்தின் காவலர் தீர்வுக்கு வரவில்லை. தொடர்ந்து இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் மத்திய அரசு எந்த ஒரு முன் நகர்வையும் எடுக்கவில்லை.

இப்படியான கால கட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த பேச்சு வார்த்தையின்போது அதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவையே சாப்பிட்டு திரும்பினர். இதற்கு சலுகையை எதிர்பார்க்காத மனப்போக்கு என்று மட்டுமல்ல தன்மானத்தை எந்த சூழலில் இழக்காத வைராக்கியம் என்பதையும் நினைவுபடுத்துகிறது. 

ஏதோ போராட்டம், ஒன்று திரண்டோம், இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த நிலையை நீட்டித்திருப்பது என்கிற கேள்வி விவசாயப் போராளிகளுக்கும் தெரியாமலா இருந்திருக்கும்? அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு உணவு சமைக்கத் தேவையான பொருட்களோடு திரண்டிருக்கின்றனர்.


அது சரி, இதற்கான பொருளாதாரத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? என்ற கேள்வி எல்லா தளங்களிலும் இருந்து சாதாரணமாகவும், அசாதாரணமாகவும் எழக்கூடியதே.  Indian Farmers Union (BKU - Bharathiya Kissan Union) இந்திய விவசாயிகள் சங்கமானது 1400 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமும் நிதி உதவி பெற்றுள்ளனர். 

ஒவ்வொரு கிராமமும் ஆறு மாதத்திற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பெரிய விவசாயிகளிடம் நிதியுதவி பெற்றுள்ளனர். 

இது குறித்து தேசிய ஊடகமொன்றில் ஜனதாசிங் அளித்த பேட்டியில், ‘மக்கள் எங்களுக்கு காலிஸ்தானிலிருந்து நிதி வந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். யாராவது ஒருவர் இதை நிரூபித்தாலும் இந்த போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம். நாங்கள் விவசாயிகளிடம்தான் நிதி உதவி பெற்றிருக்கிறோம் என்பதற்கு கணக்கு விவரங்களைக் காட்ட முடியும்’ என்று கூறியிருக்கிறார்.

‘நாங்கள் கடுமையாக உழைத்த பணத்தையே இந்த போராட்டத்திற்காக செலவு செய்திருக்கிறோம். இவை எல்லாமே எங்கள் பணம். நாங்கள் யாரிடமும் கொள்ளை அடிக்கவில்லை.’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஒரு ரூபாய் நாங்கள் காலிஸ்தானிடமிருந்தோ வேறு அமைப்புகளிடமிருந்தோ பெறவில்லை என்கின்றனர்.

 கடும்குளிரில் குழந்தைகள், பெண்கள், வயதான தாத்தா, பாட்டிகள் என திரண்டு போராடுவது அவர்களது கோரிக்கைக்காக மட்டுமில்லை, இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான் என்பதை உணர வேண்டும்.

விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறட்டும்; துணை நிற்போம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்