சமீபத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவரை அந்த வழியே சென்ற ஆட்டோக்காரர் ஆட்டோவில் வரும்படி அழைக்க ’எங்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா?’ என்றவரை சரி என்று ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு அவர் முன்னாள் எம்.எல்.ஏ என்பது தெரிந்திருந்தது. இப்படி இன்றும் சிற்சில மனிதர்களைக் காண்பது அரிதிலும் அரிது.
எழுத்து, பேச்சு என இரண்டிலும் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்து மக்களைக் கவர்ந்தவர். பதவியில் இருந்த போதும் பேருந்தில் பயணம் செய்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்.
கன்டக்டராக இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராகி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2001, 2006 என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா இவருக்காக வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோற்றத்தில் எளிமையும், பேச்சில் வீச்சும் உள்ள அரிய பண்பாளரான மக்கள் தொண்டரான இவரைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் கூட தகவல்கள் இல்லாதது சோகம்.
தற்போது ஆரப்பாளையத்தில் தனது மனைவியுடன் மதுரையில் வசித்து வருபவருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் குணசேகரன் வங்கியிலும், இளைய மகன் ராஜசேகரன் அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணியிலும் உள்ளனர். இப்போது படிப்பதும், எழுதுவதும், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதும், சிறுபான்மை பணியாளர்களுக்கு உதவி செய்வதுமாக இருக்கிறார்.
மேடைக்கலைவாணர் என்றழைக்கப்படும் நன்மாறன் மிகப்பெரிய உலக அரசியலையும், உள்ளூரில் இருக்கும் ஒரு சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எள்ளலும், நையாண்டியுமாய் பேசக்கூடியவர்.
எத்தனையோ தலைவர்கள் அவர்கள் இருக்கும்போது கொண்டாட மறந்துவிடுகிறோம். முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறனின் ஆசை என்ன தெரியுமா? இந்த வீடியோவைக் கேட்டுப்பாருங்கள்.
0 கருத்துகள்