ஜெயலலிதா எனும் அதிகாரம்


இரும்புப் பெண்மணி என்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர். சிறு வயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வமிக்கவர். விரும்பியோ விரும்பாமலோ திரையுலகில் நுழைந்து  உச்ச நடிகையாக வலம் வந்தவர். 

எல்லா பெண்களையும் போலவே திருமணம், குழந்தைகள் என்று வாழ விரும்பிய அவரை காலம் அதிகாரத்தையும், ஆட்சியையும் கொடுத்து அழகும் பார்த்தது; ஆட்டியும் வைத்தது. அவர் அரசியலில் நுழைந்ததற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருந்தபோது அவர் எந்தளவுக்கு மக்களுக்கு நன்மை செய்ய முடிந்தது என்று பார்த்தோமானால் அது விமர்சனத்திற்கு உட்பட்டதே.

ஒரே கையெழுத்தில் சாலைப் பணியாளர்கள் அத்தனை பேரின் வாழ்வையும் நிலைகுலையச் செய்தது அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அதே நேரத்தில் கலைஞர் கொண்டு வந்த 64 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அரசிடமிருந்து சிக்கல் வந்தபோது ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். ஜெயலலிதாவின் ஆதரவால் அந்த இடஒதுக்கீட்டை தமிழகம் இத்தனை ஆண்டுகாலம் தக்க வைத்திருந்தது என்பதும் மறந்துவிடக்கூடியது.

ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா நினைத்திருந்தால் அப்போதே நிறைவேற்றியிருக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தும் அது அவரின் கடைசிக் காலம் வரைக்கும் நிறைவேற்றப்படாமலே போனது. அது சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்திற்குரியதாகவே இருந்தது.அதே சமயத்தில் நீட் தேர்வுக்கு எதிராக செயல்பட்டதும், கண்மூடித்தனமாக மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.க்கு ஆதரவு தெரிவிக்காத போக்கும், மாநிலை உரிமைகளை விட்டுக் கொடுக்காத தன்மையும் அவரிடம் இருந்தது. இந்த காரணங்களே அவர் உயிருக்கு ஆபத்தானது என்றும் அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கவே செய்கிறது. 

ஆனால் ஒருவர் இறந்துவிட்டதாலேயே அவரைப் புனிதராக கொண்டாட வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி சமூகத்தில் இருந்தாலும் ஒரு பெண்ணாக அரசியலில் அவர் நீடித்திருந்ததும்; மக்களின் அபிமானம் பெற்றிருந்ததும் அத்தனை சாதாரணமல்ல என்பது இன்றைய அரசியலைப் பார்க்கும்போது பலரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றே. 

அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக காலடிகளில் கவிழ்ந்து கிடக்கக் காத்திருக்கும் இன்றைய கட்சித் தலைவர்கள் எங்கே? மோடியா? ; லேடியா? என்று எதிர்த்து நின்ற ஜெயலலிதா எங்கே? ஜெயலலிதாவின் அடியொற்றி வந்தவர்கள், அவர் புகழைப் பாடுவதாக அவர் படத்தை எல்லா இடங்களிலும் வைத்துக் கொண்டார்களே தவிர அவரது கடைசி நேரத்தில் அவர் எடுத்திருந்த நிலைப்பாட்டை உறுதியை சற்றும் நினைவிற்கொள்ளாமல் நடந்துகொள்வது வேதனைக்குரியது. 

அம்மா என்ற வார்த்தையைத் தனக்கென தாரை வார்த்துக் கொண்ட  ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்