விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய கங்கனாவுக்கு நோட்டீஸ்

எல்லாருக்கும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனாலும் எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்ல வேண்டுமா? அப்படியே சொன்னாலும் அந்த கருத்து சமூகத்தில் கவனிக்கப்பட்டு விவாதமாகுமா? அது எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடுமா? என்றெல்லாம் பார்க்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் முக்கியம். நடிகை கங்கனா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லியில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் ஒரு வயதான பாட்டியின் படத்தைப் பதிவிட்டிருந்தார். ’அதில் 100 ரூபாய் கொடுத்தால் எந்த போராட்டத்திலும் கலந்துகொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார். 


அவர் குறிப்பிட்டப் பாட்டி யார் தெரியுமா? சமீபத்தில் டைம்ஸ் ஆப் இண்டியாவிலும், அதன்பின்னர் பிபிசியிலும் சிறந்த பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த பில்கிஸ் பானு. ஆனால் விவசாய போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றது வேறொரு பாட்டி.

இந்த ட்வீட் போட்டதும் பில்கிஸ் பானு பாட்டி, ‘நான் அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள செல்லவில்லை என்றும், நாளைதான் கலந்துகொள்ளச் செல்வதாகவும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பதில் சொல்லியிருந்தார்.

அப்படி அவர் கூறியபின்பு அவரைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் காவல் துறை அவரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது தகவல். 

இது ஒரு புறமிருக்க அவர் தவறுதலாக பதிவிட்ட புகைப்படத்திலுள்ள பாட்டி, கங்கனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பாட்டியின் பெயர் மொஹிந்தர் கவுர்.

‘பாலிவுட் நடிகை கங்கனா என் வீட்டிற்கு வந்திருக்கிறாரா? என்னைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? எனக்கிருக்கும் 12 ஏக்கர் விவசாய நிலத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? அனைவருக்கும் 500 ரூபாய் சம்பளம் தருகிறேன். நான் ஒரு விவசாயி. அதனால் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். இவை எதுவுமே தெரியாமல் என்னைப் பற்றிக் கருத்துச் சொல்ல எப்படி முடியும்?’ என்று பேசியிருக்கிறார். 

இதைத் தொடர்ந்து பஞ்சாப் வழக்கறிஞர் ஹக்கம் சிங், ‘ஒருவரைப் பற்றி அவதூறாக பேசுவது மட்டுமின்றி விவசாய போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் அத்தனை பெண்களையும் இதனால் காயப்படுத்தி உள்ளார். இதனால் ஒருவாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  

இதனை அடுத்து தனது ட்வீட்டை டெலிட் செய்தார் கங்கனா. கங்கனா சமீபகாலமாக பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக அவரது பேச்சிலிருந்தும், கருத்துக்களிலிருந்தும் தெரிகிறது. அவர் விரைவில் பிஜேபியில் சேரப்போகிறார் என்ற கருத்தும் நிலவி வருகிறது. 

வாய் இருக்கிறது, வார்த்தை இருக்கிறது என்று எதுவும் யாரும் பேசிவிட முடியாது. கருத்து என்றாலும் காயப்படுத்தாமல் சொல்ல முடிந்தால் சொல்லலாம். அல்லது வாயை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து சொல்லிவருகின்றனர். 


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்