தோழர் கருப்பு கருணா குடும்பத்திற்கு தோழமை நிதி வழங்குவோம் - தமுஎகச மாநிலக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் அமைப்பின் முழுநேர ஊழியருமான தோழர்.எஸ்.கருணா என்கிற 'கருப்பு கருணா' உடல்நலக் குறைவு காரணமாக திங்களன்று (21.12.2020) இயற்கை எய்தினார் என்பதை அறிவீர்கள். 


1963 மார்ச் 13 ஆம் தேதி பிறந்த அவர் 1984இல் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவராக தனது பொதுவாழ்வைத் தொடங்கினார். பின்னர் தமுஎகச அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு முற்போக்குச் சிந்தனைகளை கலை இலக்கிய வடிவங்களில் பரப்பும் ஆளுமையாக பரிணமித்தார். 

1990களில் தீட்சண்யா நாடகக்குழுவை உருவாக்கி முற்போக்கு நாடகச் செயல்பாடுகளை முன்னெடுத்தார். கவனிக்கத்தக்கதாக "ஏழுமலை ஜமா" என்ற குறும்படத்தினை  இயக்கியுள்ளார். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் ஆகியவற்றில் முனைப்புடன் செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலாளராகவும் சிலகாலம் பொறுப்பு வகித்தவர்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்காக அவர் வடிவமைத்த கலை இரவு என்கிற நவீனப் பெருநிகழ்வு இன்றைக்கு எல்லை கடந்து எங்கும் பரவி நிகழ்கிறது. 

தமுஎகசவின் "திரை இயக்கம்" பிரிவின் பொறுப்பாளராக இயங்கி புதுவை பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து உலகத் திரைப்பட விழாக்களை  ஒருங்கிணைத்தவர். 

உலகத் திரைப்படங்கள் குறித்து "பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்" நூலை எழுதியவர். 

ஏற்கனவே "விழித்திரு" படத்திலும் வரவிருக்கும் "கண்டதைச் சொல்கிறேன்" படத்திலும் நடித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பாசிச மதவெறி சாதிவெறிச் சக்திகளை விமர்சிப்பதில் முன்னின்றவர். நித்தியானந்தா கும்பலின் மிரட்டலையும் அஞ்சாமல் எதிர்கொண்டவர். 

கொரோனா காலத்தில் அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர். 

இத்தகைய பன்முக ஆற்றலுடன் இயங்கிய தோழர் கருணா தனது இறப்புக்குப் பிறகும் சமூகத்திற்குப் பயன்படும்விதமாக தனது உடலை எவ்வித இறப்புச்சடங்குகளுமின்றி மருத்துவ ஆய்வுகளுக்காக ஈந்துள்ளார். 

தோழர் கருணா தன் திறமைகளை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்லாமல் தான் நம்பிய கருத்துகளைப் பரப்புவதற்கும் அமைப்பை வலுப்படுத்தவுமே பயன்படுத்தியவர். அந்தளவிற்கு சுதந்திரமாகச் செயல்பட அவரை அனுமதித்த அவரது குடும்பத்தினரின் பரந்த மனப்பான்மையும் பங்களிப்பும் மதித்து பின்பற்றத்தக்கவை. 

பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் கருணாவை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தை தமுஎகச தன் குடும்பமாக ஏந்திக்கொள்கிறது. முதுகலை படித்துவரும் மகள் சொர்ணமுகி, இளங்கலை படித்துவரும் மகன் சீனு ஆகியோரின் கல்விச்செலவுகள் உள்ளிட்டு குடும்பத்தைப் பராமரிப்பதற்கு கருணாவின் இணையர் தோழர் செல்வி அவர்களுக்குரிய பொறுப்புகளை நாமும்  பகிர்ந்துகொள்வது அவசியம்.

இதன்பொருட்டு நம் தோழமையை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்றாக அவரது குடும்பத்திற்கான தோழமை நிதியைத் திரட்டுகிறோம். கருணாவின் அன்பர்களும் தோழர்களுமாகிய உங்களது பங்களிப்பு இந்த நோக்கத்தை நிறைவுசெய்யும். 

அன்புடன் 
மதுக்கூர் இராமலிங்கம் 
Mathukkur Ramalingam
மாநிலத்தலைவர் (பொறுப்பு) 

ஆதவன் தீட்சண்யா 
Aadhavan Dheetchanya
பொதுச்செயலாளர் 

நிதியனுப்ப: 

Trust for the Welfare of Tamilnadu Progressive Writers Artists Association, Bank of Maharashtra, Puducherry, 
Account no  6034 349 5676, 
IFSC MAHB 0000458. 

நிதியனுப்பிய விவரங்களைத் தெரிவிக்க:

சு.இராமச்சந்திரன்
மாநிலப்பொருளாளர்
9443069075

கருத்துரையிடுக

0 கருத்துகள்