தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா காலமானார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா இன்று காலை மாரடைப்பால் காலமானார்.கொரோனா காலத்தில் தமுஎகச தொடர் கூட்டங்களை சூம் வழியாக  இடைவிடாமல் நடத்துவதற்கு காரணமாக இருந்தவர். 

அவர் கடைசியாக பதிவிட்ட முகநூல் பதிவு இது. 

’’எல்லா கேரக்டரும் கனகச்சிதமான பொருந்துகிற ஒரே நடிகன் சிவாஜிகணேசனுக்கப்புறம் நீங்கதான் ஜி!’’ என்று மோடியின் படத்தை பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து களத்திலும் எழுத்திலும் சமூகத்தின் அவலங்களைக் கேள்விக்குள்ளாக்கிய கருப்பு கருணாவின் இறப்பு தமிழ் சமூகத்தின் பேரிழப்பு.

அவரது இறப்பு செய்தி குறித்த பதிவொன்றில்  இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

’’செய்தியை முந்திச் சொல்வதாகப் பெருமைப்படுகிற தகவலா இது கருணா?

உனக்குப் பிடித்த பறையடி, ஜமா போலவே அதிரடியாகப் பேசி நீ ஏற்படுத்திய அதிர்வலைகளின் நோக்கமெல்லாம் சமத்துவ சமூக மாற்றம் அல்லவா? அதை நோக்கிச் செல்வதில் இன்றைய காலத்தின் சவால்களை எண்ணியா இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டாய்?

அடையாளம் கருப்பு. அடித்தளம் சிவப்பு. எம் கண்ணீரின் நிறம் என்ன கருப்பு கருணா?’’

கவிஞர் முத்துநிலவன் தன் இரங்கற்குறிப்பில், ’’என்னிலும் இளையவன். ஆனால் எனக்கும் வழிகாட்டி. திருவண்ணாமலை தமிஎகச செயல்வீரன். 

தமிழ்த்திரை உலகில் தமுஎகசவின் முகமே இவன் தான். கொரோனா காலத்தில் எத்தனை இணைய அரங்குகளை ஒருங்கிணைத்தான். குறும்படங்களால் தமுஎகசவுக்கே வழிகாட்டியவன். 

சமூக மாற்றத்திற்கான சமரசமற்ற போராளி அறிவொளி இயக்கத்திற்கு ஆள் உயரச் சுடரை வரைந்து கொடுத்த பெரும் ஓவியன். பல்லாண்டு காலம் வாழ்ந்து வழிகாட்ட வேண்டியவன். மூச்சுத் திணறலால் முடிந்து போனானா.. அவன் நினைவுகள் என்றும் அழியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடலாசிரியர் கு. உமாதேவி தன் இரங்கற்குறிப்பில், கண்ணீர் நிற்கவில்லை, தொண்டை அடைக்கிறது. நீங்கள் எங்களோடு இல்லை என்ற துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தோழர் கருப்பு கருணா.  அமைப்பை ஒரு கையிலும், சுயத்தை ஒரு கையிலும் என ஏந்திக் கொண்டிருக்கும் எங்கள் மத்தியில் அமைப்புக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த உங்களை இழந்துவிட்டோம் அன்பின் தோழமையே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 தமுஎகச அமைப்பு மட்டுமின்றி முற்போக்கு அமைப்புகள் பலவும் கருணாவின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றன. 

தோழர் கருப்பு கருணாவின் நல்லடக்கம் நாளை காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும்.

முகவரி: கரையான் செட்டித் தெரு, சாரோன், திருவண்ணாமலை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்