உலகப் புகழ்பெற்ற பிரபல இயக்குனர் கிம் கி டுக் மரணம்

தென்கொரிய இயக்குனர் கிம் கி டக் (kim ki duk) கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. இன்னும் ஒரு வாரத்தில் அவரது 60 வது பிறந்த நாளைக் கொண்டாட இருந்தார். டிசம்பர் 20 அவரது பிறந்தநாள். இந்நிலையில் கொரோனா தொற்றால் இன்று அதிகாலை உயிரிழந்த அவருக்கு உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இவரது படங்களின் கதைக்களங்களும், எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரங்களின் தனித்தன்மையும், வித்தியாசமான திரையாக்கமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தனிக் கவனம் பெற்றன. அதுமட்டுமின்றி இவரது பல படங்கள் மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

1996 ஆம் ஆண்டு குரோக்கடைல் என்ற படத்தில் ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டு டிசால்வ் வரை இவரது பயணம் மிக நீண்டது. ஸ்பிரிங், சம்மர், ஃபால், விண்டர் அண்ட் ஸ்பிரிங்,  டைம், பேட் கை என முப்பது படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் இவருக்கென்று தனி ரசிகர்மன்றம் இருக்கிறது. 

குரோக்கடைல் திரைப்படமானது கேன்ஸ், வெனிஸ், பெர்லின் என மூன்று மிகப் பெரிய ஐரோப்பிய திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படி மூன்று திரைப்பட விழாக்களிலும் தேர்வு செய்யப்பட்ட கொரிய இயக்குனர் இவர் மட்டுமே.  

கருத்துரையிடுக

1 கருத்துகள்