எழுத்தாளர் ம.காமுத்துரையின் ‘குதிப்பி’

சமையலுக்கு இவ்வளவு கூலி கேட்கிறார்களே என்று ஒவ்வொரு விசேஷ வீடுகளிலும் தவறாமல் கேட்பதுண்டு. அவ்வளவு வாங்கினாலும் வீடு போய் சேர்கிறதா என்பதையும்,

குடி, புகைப்பழக்கம், சீட்டாட்டம், லாட்டரி, என அவர்கள் வரும்படியை வேட்டு வைக்கும் பழக்கங்களும் இவற்றால் ஏற்படும் பணப் பற்றாக்குறையை நீக்க வாங்கும் கடன் போன்றவை இவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சூறாவளியையும் ஒன்று விடாமல் அங்குலம் அங்குலமாக நம்முன் வைக்கிறது நாவல்.

 திருமணத்திற்கு பெண் கொடுக்க தயங்கும் அளவுக்கு மோசமான வாழ்வியலில் சமையல் கலைஞர்கள் இருப்பதை இந்த நாவல் மூலம் படிப்பவர்கள் அறிய முடியும். அதையும் மீறி பெண் கிடைக்கிறதென்றால் அந்தப் பெண் வீட்டார் நிலையையும் நாம் புரிந்து கொள்ளச் செய்கிறது நாவல். 
    
இவர்கள் தானும் குடியில் மூழ்கி தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தையும் துன்பத்தில் மூழ்கடித்து விடுவதையும்,. பணம் வந்ததும் கூடாத செலவுகள் எல்லாம் செய்து விட்டு அது தீர்ந்ததும் புலம்புவதுமாக அவர்களின் முரண்பட்ட வாழ்க்கையை நம் முன் காட்சிப்படுத்துகிறார்.
 


 நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை கதாபாத்திரங்களோடு நாமும் இணைத்தே பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கதை நடக்கும் பகுதி பற்றியும் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் விவரிக்கும் பாங்கு விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது.

அவர்களுக்குள் இருக்கும் நட்பை, பகையை, காதலை, கோபதாபங்களை என்று அத்தனையையும் ஒருசேர நாவலில் படைத்ததோடு  படிப்பவர் சோர்வுறா வண்ணம் எளிய நடையிலும் படைத்திருக்கிறார்.


குடிப்பதிலும், கூத்தடிப்பதிலும் இருக்கும் ஒற்றுமை சங்கமாக இணைவதில் இருக்கவில்லை என்பதும். அதிலும் அடிதடி தகராறு என்று ஏற்படுத்தி ஏற்பட்ட சங்கங்களையும் கலைத்து விட்டு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையும் செயலும் அற்று இருக்கும் அவர்கள் வாழ்க்கையை தோழர் சண்முகம் மூலம் மாற்றும் முயற்சி சற்று ஆறுதல். அதற்காக தோழர் சண்முகம் படும்பாடு பெரும்பாடாகிப்போகிறது.

சமையல் கலைஞர்களை நம்பி நடக்கும் பாத்திரக் கடைக்காரர்களின் இன்றைய சூழலையும் பதிவு செய்து இருக்கிறது நாவல். ஒரு கடை இருந்த ஊரில் பல கடைகள் வந்ததும் மளமளவென பெருகிய மண்டபங்களும்  அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும், சமையல் கலைஞர்கள் ஒரு கடையில் பாத்திரம் வாடகைக்கு எடுத்து அதற்கான பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்து விட்டு வேறு கடையில் பாத்திரம் எடுப்பதும் அவற்றை பாக்கி தரவேண்டிய கடைக்காரர் பறிமுதல் செய்வதும். நிகழ்ச்சி நடக்கும் வீட்டாரிடம் வாங்கும் கடனுக்கு கடைக்காரர்களின் பாத்திரங்கள் அடகு போய்விடுவதும், அது சம்பந்தமாக  நடக்கும் சம்பவங்களும் என அவர்களின் போராட்ட வாழ்வையும் படம் பிடித்து காட்டுகிறது.

சமையலுக்கு உதவும் வேலையில் இருக்கும் பெண்களும் சரி சமையல் கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களும் சரி அந்த வேலைத் தளத்தின் பக்கம் தன் பிள்ளைகளை தலை வைத்தும் படுப்பதை விரும்பாத அளவிற்கு அந்தத் துறை குடியினால் புரையோடி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

செய்த வேலைக்கான கூலி வீடு வந்து சேராததால் மனைவியும் கூட சேர்ந்து வேலைக்கு போனால் அதையும் குதர்க்கம் செய்து கலகம் செய்யும்  சக கலைஞர்களின் சூதையும் பதிவு செய்கிறது.

சீசன் இல்லாத சமயங்களில் வாழ்க்கையை ஓட்ட சபரிமலையில் டீ விற்பதும் அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் மனதை கனக்க வைக்கிறது. வரும்படி இல்லாத போது இவ்வளவு சிரமப்படும் இவர்கள்  வரும்படி வரும்போது கொஞ்சம் உணர்ந்தால் கூட  திருந்தி விடுவார்களே என்று படிக்கும் நம்மை ஏங்கச் செய்கிறது.

கதையை முடித்த விதமும் அருமை. சமையல் கலைஞர்கள் வாழ்வை இதைவிட சிறந்த முறையில் எழுத முடியாது என்கிற வகையில் ஒரு சிறப்பான நாவல். .‌

ஜெகநாதன்
சாத்தூர்

நாவல்: குதிப்பி
ம. காமுத்துரை (ஆசிரியர்)
பக்கம்: 352
விலை: 400
டிஸ்கவரி வெளியீடு‌‌

கருத்துரையிடுக

0 கருத்துகள்