அப்போது அவர் எஸ். கருணா - இல.சண்முகசுந்தரம்

அப்போது அவர் எஸ். கருணா,

உலக சினிமாக்களின் கதையை  எளிய தமிழில் எழுத்தாக்கியவர் அவர். சினிமாவைப் பற்றிய தொடரென்றாலும், அதன் மொழியிலும், எழுத்து நடையிலும் அவர் காட்டிய அக்கறையே அவரது எழுத்தின் தனித்துவமாகும்..

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சினிமாவைப் பற்றி எழுதுவார்.  எழுதும் சினிமாவைப் பற்றிய எல்லாவற்றையும் பேசிவிட்ட பிறகும், அவர் கட்டுரை பாதிதான் முடிந்திருக்கும். கட்டுரையின் துவக்கத்திலோ அல்லது முடிவிலோ அவர் அந்த சினிமாவை உள்ளூர் கதையாகவும் மாற்றி எழுதியிருப்பார். அவர் பார்த்த ஊரும், மனிதர்களும், வாழ்வும் அந்த மீதிக் கட்டுரையில் இருக்கும். புதுவகையாய் சினிமாவை எழுதிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாகும் இது.அன்பான மனிதர்களுக்கும், எளியவர்களுக்கும், ஏழ்மையில் உழல்வோருக்கும் உலகெங்கும்  வாழ்வு ஒரே மாதிரியாய்தான் இருக்கிறதென்பதை அவர் சொல்லிச் செல்கையில் நாம் பார்த்த மனிதர்களும் அக்கட்டுரைக்குள் வந்துபோயிருப்பார்கள்.

அவர் எழுத்தை வாசித்தவர்கள் அந்த சினிமாவை தேடியெடுத்துப் பார்ப்பார்கள். குழந்தைகளுக்கான சினிமாவைப் பற்றியும் நிறைய எழுதினார். தொடரை மின்னஞ்சலில் படித்த உடன் ஒரு முறை பேசுவேன்.  திரைப்படத்தைப் பார்த்த பின்னர் மறுமுறை பேசுவேன். தொடரில் எழுதாத வார்த்தைகளை பேச்சில் வடித்துக் கொடுப்பார். வாசிப்பில் ஒருமுறை, பார்ப்பதில் ஒருமுறை மற்றும் பேச்சில் ஒருமுறையென ஒரு திரைப்படத்தை மூன்று முறை பார்த்த அனுபவம் அது.

பொடம்கின் கப்பலும், போக்கிரி திருடனும், இதுதான் அவர் எழுதிய உலக சினிமாக்களின் கதை தொடர் முடிந்த உடன் வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பு. பாரதி புத்தகாலயம் சார்பாக 2014ல் வெளியிடப்பட்ட புத்தகம் அது.

அவருடனான முதல் சந்திப்பு அவர் வீதிநாடகக் கலைஞராய் இருந்தபோது நிகழ்ந்ததை இப்போது நினைவு கூர்கிறேன். அறிவொளி  இயக்கத்தில் வீதி நாடகப் பயிற்சியாளராய், கலைஞராய், அவர் சங்கரன்கோவில் நகருக்கு வந்தபோது நான் கல்லூரி மாணவன். அறிவொளி இயக்கத் தொண்டன். ஐந்து நாட்கள் அந்தப் பகுதிகளில் நாடகங்கள் நடக்கும்போது நானும் ஒரு ஏற்பாட்டாளன். ஆகவே, கூடவே பயணிப்பேன்.

அதன் பின்னர் சில சந்தர்ப்பங்களில் சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும், இளைஞர் முழக்கம் இதழுக்காக அவர் தொடர் எழுதிய இரண்டு வருடக் காலங்களில்தான் வாரந்தோறும் பேசிக்கொண்டோம். உணர்வுபூர்வமான பேச்சும், எழுத்தும் அவரது இயல்பு.

கருப்பு என்பதை ஒரு அரசியலாக்கி அவர் தனக்குக் கொடுத்துக்கொண்ட அடையாளமே அவரது தனித்துவமாகும். யார்க்கும் அஞ்சாமல் அரசியலை அன்றாடப் பேசுபொருளாய் இணையத்தில் அவர் கொடுத்த விதம் அவரின் சிந்தனைத் திறனுக்கு சிறந்த தீனியாகும்.ஆம். ஒரு தீனியைப் போன்றுதான் அந்த எழுத்திருக்கும். எள்ளலும், துள்ளலும் இழையோட எழுதும் அந்த எழுத்துக்கு பல்லாயிரங்களில் அவருக்கு இரசிகர்கள் உண்டு. 

இப்படி ஒரு அஞ்சலி நான் எதிர்பாராதது தோழரே..


தோழன்
இல.சண்முகசுந்தரம்
மேனாள் ஆசிரியர். 
இளைஞர் முழக்கம் மாத இதழ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்