படிங்க..படிங்க.. மனிதர்களையும் படிங்க - மானுடவியல் பேராசிரியர் தொ.பரமசிவன்

பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி தமிழக வரலாற்று பக்கங்களில் தனது தடத்தை மிக அழுத்தமாக பதித்திருக்கும் மானுடவியல் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவனின் கடைசி நேர்காணல் மனு ஸ்மிருதி பற்றி உங்கள் கருத்து?
அது ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாதது. சமநீதியற்றது, சமூக நீதிக்கு எதிரானது. பரிமேலழகரையே நிராகரிக்க இதுவும் ஒரு காரணம். 

பிக்பாஸில் கமல் உங்கள் நூல் குறித்து பேசியதால் அந்நூல் கவனம் பெற்றது என்று சொல்லப்படுவது பற்றி..
அது ஏற்கனவே இரண்டு பதிப்புகள் ஓடி முடிந்துவிட்டது. இப்போது மூன்றாவது பதிப்பில் இருக்கிறது. கமல் பேசியதால் என்னூல் கவனம் பெற்றது என்பதெல்லாம் இல்லை. அடுத்தது அந்த நூலை விற்று நான் காசு பார்க்க போவதில்லை. யுனிவர்சிட்டிதான் காசு பார்க்கும். எனனைப் பொறுத்தவரை அந்த நூலை எல்லாரும் படித்தால் சரி என்றுதான் நினைக்கிறேன். 

உங்கள் இளமைக்காலத்தில் நடந்த இன்றும் உங்களைப் பாதிக்கும் விஷயம் என்ன? 
இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் என்னைப் பாதிக்கும் விஷயம். 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட திராவிட கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி தெரியும் என்கிற கூடுதல் தகுதியால் மத்திய அரசில் பதவி வகித்தது விமர்சனத்துக்குள்ளாகிறதே?
அதிகாரத்துக்கு நாக்கைத் தொங்கப்போட்டால் அவ்வளவு தப்பையும் பண்ணித்தான் ஆக வேண்டும்.

மண்சார்ந்த படைப்புகளைத் தருவதில் உங்களைக் கவர்ந்தவர்?
பா.ஜெயப்பிரகாசம். தஞ்சாவூரை ஜானகிராமனும், திருநெல்வேலியை புதுமைப்பித்தனும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள். சோ.தர்மனையும் சொல்கிறார்கள். நான் இன்னும் படிக்கவில்லை. 

பெண் படைப்பாளிகள் இங்கே குறைவாக இருக்க காரணம் என்ன?
ஆண்கள் வாய்ப்புத் தரவில்லை. அல்லது முன்னேறவிடவில்லை.  திருநெல்வேலியில் பெண் படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால் சொல்லிக்கொள்ளும்படி யாருமில்லை. தமயந்தி அக்கக்கா குருவிகள் எழுதியிருக்கிறார். ராஜம் கிருஷ்ணனுக்கு ஆனந்தவிகடனும், கலைமகளும் கொடுத்ததுபோல் இப்போது பத்திரிகைகள் பெண்களுக்கு அதிக வாய்ப்புத் தருவதில்லை. 

குழந்தை இலக்கியம் தேங்கிப் போயிருப்பதாக பார்க்கிறீர்களா?
தேங்கிப் போயிருக்கிறதா? இன்னும் பொறக்கவே இல்லை.குழந்தை இலக்கியத்தில் அழ.வள்ளியப்பா, கவிமணிக்கு பிறகு பெரிதாக குழந்தை இலக்கியம் வளரவில்லை.

நம் சமூகத்தின் முக்கிய உளவியல் சிக்கலாக இருப்பது எது?
பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது. ஆண்களும், சமூகமும் மட்டுமின்றி பெண்களே கூட பெண்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றனர். 

இந்த சமூகத்தின் மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைப்பது? 
மூட நம்பிக்கை இல்லை. பயனற்ற நம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நீங்க இந்த சமூகத்துக்குச் சொல்லக்கூடிய விஷயம் என்ன?
படிங்க..படிங்க.. மனிதர்களையும் படிங்க. 

- இவள் பாரதி

நேர்காணலின் காணொளி வடிவத்தைக் காண - https://youtu.be/ebH89oRd_Es 


கருத்துரையிடுக

0 கருத்துகள்