பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.ப.வின் மறைவு தமிழ் பண்பாட்டு உலகிற்கு ஏற்பட்ட வெற்றிடம்

 எழுத்தாளர்  இரா.நாறும்பூநாதன்

" நம்ம ஊரு அம்மன் கோவில்களை உற்று நோக்கி இருக்கிறீர்களா  நாறும்பூ "
என்றார் தொ.ப.ஒருமுறை. எதற்காக இதைக்கேட்கிறார் என்று முதலில் புரியவில்லை.

" அம்மன் எப்போதும் வடக்கு நோக்கியே இருக்கும் என்பதை கவனித்திருக்கிறீர்களா என்பதைத்தான் கேட்டேன் " என்றார். பிறகு அவரே தொடர்ந்தார் : " தமிழகம் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி. எனவே பகைவர்கள் வந்தால் " வடக்கில் " இருந்தே வரவேண்டும்.

வடக்கில் இருந்து வரும் பகைவர்களிடம் இருந்து நம்மை காக்கவே அம்மன் ஆயுதங்கள் ஏந்தி வடக்கு திசை நோக்கி இருக்கிறது " என்று முடித்தார். இது தான் தொ.ப. தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர்.
ரொம்ப சாதாரண வார்த்தை என்று நாம் நினைக்கும் ஒரு சொல்லின் முழுமையான அர்த்தத்தை அவர் விளக்கி சொல்லும்போது, அதன் பின்னால் உள்ள செய்திகள் நம்மை பிரமிக்கச்செய்யும்.

" குளித்தல்" என்ற சொல்லிற்கு உடம்பை தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள். சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை " குளிர்வித்தல் " என்பதே அதன் பொருள். " குளிர்தல் " என்ற சொல்லையே நாம் குளித்தல் என்று தவறாக பயன்படுத்துகிறோம் என்று விளக்கம் தருவார் தொ.ப.

தமிழகத்தில்  உள்ள உழைப்பு சாதியார் மாலை நேரத்தில் குளிர்விக்கும் வழக்கமுடையவர்கள். மாடு மேய்த்து மாலையில் வீடு திரும்பும் கண்ணனை, யசோதா " நீராட்டமைத்து வைத்தேன். ஆடி அமுது செய் "என்று பெரியாழ்வார் பாடுவதை மேற்கோள் காட்டி சொல்லும்போது அட.. இது கூட தெரியாமல் நாம் இருந்திருக்கிறோமே என்று தோணும்.

" நீராடுதலை " ஒரு கொண்டாட்டமாக கருதியவர்கள் தமிழர்கள். உலகில் வேறு எங்கும் நீராடுதல் பற்றி இலக்கியங்களில் பதிவு செய்ததாக தெரியவில்லை. நீராடற்பருவம் என்பதை இலக்கியத்தில் வைத்துள்ளனர் தமிழர்கள். மாதவி நீராடும்போது, அவள் குளித்த நீரில்என்னென்ன நறுமணப்பொருட்கள் இருந்தன என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் என்பதை பாருங்கள்.

பூவந்தி,திரிபலை,கருங்காலி,நாவல் முதலிய பத்து பொருட்களை ஊறவைத்து ஆடுமகளின் தோல் வனப்பிற்காகவும், கோட்டம், அகில்,சந்தானம் போன்ற பொருட்கள் உடல் நறுமணத்திற்காகவும், இலவங்கம்,கச்சோலம், இலாமிச்சம் போன்ற முப்பத்தி இரண்டு மூலிகைகள் ஊறிய நீர் நோயற்ற உடல் நலத்திற்காகவும் மாதவி பயன்படுத்தினாள் என்பதைப்பார்க்கும் போது, நீராடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது.உலகில் வேறு எந்த இனத்திலும், குளிப்பதை இப்படி கொண்டாடி இருக்கிறார்களா பாருங்கள் " என்று தொ.ப. சொல்லும்போது நாம் வியப்பின் உச்சிக்கே செல்வோம். இறுதியில் ஒரு முத்திரைச்சொல்லோடு முடிப்பார் "  ஒருகாலத்தில், தமிழகம் முழுவதும் பரவியிருந்த சமண மதம் கரைந்து போனதற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று, சமணத்துறவிகள் நீராடுவதில்லை என்பது.

தமிழக நாட்டார் தெய்வ வழிபாடு பற்றி அவர் ஆய்வு செய்து கூறிய கருத்துக்கள் முக்கியமானவை. தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே அம்மன் வழிபாடு என்பதை எடுத்துரைத்தவர் தொ.ப.

ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமாகவே அவர் இருந்தார். ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்போதும் புதுப்புது விஷயங்களை சொல்வார்.
எழுதுவதைக்காட்டிலும் சாவகாசமாக பேசுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிகாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு கடை வீதியில் உள்ள தேநீர் கடையருகே இதற்கென்றே ஒரு கூட்டம் கூடும். தேநீர் குடித்தபடி பேசுவதற்காகவே ஒரு அறையை வாடகைக்கு பிடித்துப்போட்டிருந்தார் என்றால் நீங்கள் வியப்படைவீர்கள். ஆனால் உண்மை. அந்த அறையில் தொ.ப.வை சுற்றி பத்து,பதினைந்து பேர் சூழ்ந்து உட்கார்ந்து அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பார்கள். பெரியாரிய கருத்துக்களை உயிர்மூச்சாய் கொண்டிருந்த தொ.ப.அவர்கள், பெரியார் நினைவு நாளிலேயே காலமானது நினைவில் கொள்ளத்தக்கது.

ராமர் பாலம் குறித்த சர்ச்சை ஏற்பட்டபோது, சேதுக்கரை என்பது வட இந்திய புராண கதைகளில் பாரத தேசத்தின் தெற்கு எல்லை என்று கருதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கன்னியாகுமரியை தெற்கு எல்லை என்பதை ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள். எனவே ராமர் பாலம் இருந்ததா அல்லது மணல் திட்டா என்பதை விஞ்ஞான ஆய்வுகள் மூலமே ஏற்க முடியுமே தவிர, புராண கருத்துக்களின் மூலம் ஏற்க இயலாது என்று மதவாதிகளுக்கு பதில் கொடுத்தார் தொ.ப.

அழகர்கோவில், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், பாளையங்கோட்டை, தெய்வம் என்பதோர், நான் இந்து அல்ல,நீங்கள் ?,
செவ்வி,விடு பூக்கள்,மரபும் புதுமையும் உள்ளிட்ட 20  நூல்களை எழுதியவர் தொ.ப.

பாளையங்கோட்டையை " மாணவர்களின் நகரம் " என்று அழைத்தார் இவர். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று பாளையங்கோட்டையை ஏன் அழைத்தார்கள் என்பதற்கு அவர் விளக்கமும் தருவார். ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருப்பதால் இப்படி அழைக்கவில்லை. பார்வை இழந்தோர்க்கு ஒரு பள்ளி, வாய் பேச இயலாதோருக்கு ஒரு பள்ளி, பெண்கள் பயில தனியாக ஒரு பள்ளி என்று சமூகத்தின் அனைத்து மக்களுக்காகவும் இங்கே கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்டன. அதனாலேயே தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்பட்டது என்பார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய பேரா.தொ.ப.விற்கு குருநாதர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அவர் வீட்டில் இருந்து நூறு அடி தூரத்தில் இருந்த தமிழறிஞர் சி.சு.மணி அவர்களே இவருக்கு வழிகாட்டி.

" சிவஞான மாபாடியத்திற்கு " விளக்கம் எழுதிய தமிழறிஞர் சி.சு.மணி அவர்களிடம் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொண்டேன், சிகரெட் புகைப்பது உட்பட " என்று சிரித்தபடியே சொல்வார் தொ.ப.

நேற்று(டிசம்பர் 24 ) மாலை 4 மணியளவில் நெஞ்சு சளி அதிகம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு ஏழே முக்கால் மணியளவில் காலமானார் தொ.ப.

தமிழ் பண்பாட்டு உலகிற்கு ஏற்பட்ட வெற்றிடம் என்றே சொல்லலாம்.கருத்துரையிடுக

0 கருத்துகள்