ஆலிஸ் வாக்கர் அன்புள்ள ஏவாளுக்கு - எதிர் வெளியீடுஒவ்வொரு நாடும் தேசமும் மனிதனை ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்துகிறது. மனிதனும் கூட தனக்கு கிடைத்த அதிகாரத்தில் மற்ற மனிதனை அடிமையாக நடத்திக் கொண்டிருக்கிறான். ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்களுக்கும், அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகளையும், வேற்றுமைகளையும் இன்றுவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்தக் காலகட்டத்தில் வெள்ளை இனத்தவர்கள் கறுப்பினத்தவர்களை ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைச் சங்கிலியால் கட்டிக் கப்பலில் அழைத்துச் சென்றனர். இன்று நம் கண் முன்னே வல்லரசாக காட்சியளிக்கும் அமெரிக்க, ஐரோப்பா நகரங்கள் இந்தக் கருப்பின ஆப்பிரிக்க மக்களால் உருவாக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

கருப்பினத்தவர்கள் அவர்களின் சகோதர சகோதரிகளால் விற்கப்பட்டிருக்கின்றனர். ஆப்பிரிக்க பழங்குடி மக்களுடைய மரபுகள், கடவுள், பெயர்கள் என  அவர்களுடைய அடையாளங்கள் முழுவதுமாக சிதைக்கப்பட்டு வேறு கடவுளை வணங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிமையாக வேலை வாங்கியும் மிகக் கொடூரமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். 

இந்த நாவலில் கருப்பின பெண்களின் வாழ்க்கையும், அவருடைய குடும்பத்தில் நடைபெறும் ஆணாதிக்கம் மரபுகள் அதிகாரம் ஆகியவை எப்படி நடக்கிறது எனவும் சொல்லியிருப்பார்.

பெண்ணாகப் பிறந்தவள் ஆணுக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டாள் என்ற மரபுகள் ஆப்பிரிக்க மக்களுக்கு உண்டு. அப்படி ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் கதையே இந்நாவல்.
சீலி என்கிற பெண்ணின் தாய் நோயினால் இறந்து போகிறார். மகளான சீலியை தந்தை தவறாகப் பயன்படுத்துகிறார். தன் தந்தையின் மூலம் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க அந்தக் குழந்தைகளை அவரே வேறொருவரிடம் விற்று விடுகிறார். சிலீக்கு தன் தங்கை நெட்டி என்றால் உயிர். நெட்டியை விவாகரத்தான ஒருவர் திருமணம் செய்வதாக அவளுடைய தந்தையிடம் கூறுகிறார்.

நெட்டி படித்துக் கொண்டிருக்கிறாள், சீலி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வாள் என அவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். தனக்குப் பிறகு தன்னுடைய தந்தை நெட்டியையும் தன்னைப் போலவே பயன்படுத்திவிடுவாரோ எனப் பயப்படுகிறாள் சீலி.

சீலியின் கணவனுக்கு எப்படியாவது நெட்டியை அடைந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களிடம் இருந்து தப்பித்து நெட்டி ஊரை விட்டுச் செல்கிறார். ஒரு பெண் இந்த ஆணாதிக்க சமூகத்தால் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாகிறாள். கணவனாக பார்க்கப்படும் ஆணுக்கு உணர்ச்சிகளற்ற மரக்கட்டையாக வாழ்ந்து குடும்பம், குழந்தைகள் என சிறிய வட்டத்துக்குள் வாழ்க்கை முடிந்து போகிறது.
தன்னுடைய தங்கை எங்கே இருக்கிறாள்? உயிரோடு இருக்கிறாளா? என்று சீலி வருத்தத்துடன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. தான் அதிகம் நேசித்த தன் தங்கை ஒருவேளை உயிரோடு இருந்தால் கடிதம் எழுதி இருப்பாள். எந்தத் தொடர்பும் இல்லாதநிலையில் தன் கணவனிடமும் அவளைப்பற்றி கேட்க முடியாமல் அடிமை மனைவியாகவே வாழ்கிறாள்.

ஒரு முறை அவளது கணவனின் பழைய காதலியான ஒரு பாடகி சீலியின் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். அவள் ஒரு பிரபல பாடகி, உடல் நலம் சரியில்லாமல் உடனிருந்து கவனித்துக் கொள்ள வீட்டிற்கு கூட்டி வருகிறார் சீலியின் கணவன் . அந்தப் பாடகிக்கும் சீலிக்கும் அழகான நட்புறவுடன் நெருக்கம் ஏற்பட்டு சீலியின் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கிறது.
தன்னைக் காதலிக்கும்போது அவன் எப்படி இருந்தான் என்பதைப் பற்றியும் திருமணத்திற்குப் பிறகு அவனுடைய மாற்றங்கள் தான் ஒரு ஆண் என்கின்ற கர்வத்துடன் இருப்பதையும் சீலியிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இருவரும் அதிகமாக உரையாடிக் கொள்கின்றனர். 

சீலி தன்னுடைய தங்கை நெட்டியைப் பற்றி அந்தப் பாடகியிடம் கூறுகிறாள். சீலியின் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து ஓர் இரும்புப் பெட்டியில் நெட்டி எழுதிய கடிதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கைப்பற்றுகின்றனர். பொறுத்துக் கொள்ள முடியாத சீலி என் தங்கையிடம் இருந்து என்னை இவன் பிரித்தது மட்டுமல்லாமல் அவள் எழுதிய கடிதங்களைக்கூட எனக்கு காட்டாமல் இத்தனை வருடம் மறைத்து வைத்திருக்கிறான் எனக் கூறி அவனைக் கொலை செய்யப்போவதாக ஆத்திரப்படுகிறாள்.

பெண் எப்போதும் கணவனுக்கு அடிபணிந்தவள் என்று ஆண்கள் நினைத்துக் கொண்டாலும் தான் விரும்பிய ஒரு உறவை இழக்க நேரிடும்போது அவள் எந்த முடிவுக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள் என்பதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும். அதன் பிறகு நெட்டி எழுதிய அந்தக் கடிதங்களின் மூலமாக கதை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகரும். அவள் சந்தித்த பயணத்தின் மற்ற நாடுகளில் கருப்பினத்தவர்களை எப்படி நடத்துகின்றனர். நேரடியான கடவுளை வைத்து நடக்கும் இன வேறுபாடுகள் என நிறைய சம்பவங்கள் பேசப்படும். 

ஒவ்வொரு கடிதங்களாக சீலி எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறாள். நெட்டி தான் ஒரு குடும்பத்தில் வேலை செய்வதாகவும் அந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லி இருப்பாள்.  அந்த தம்பதிகள் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களைச் சந்தித்து  கிறிஸ்தவ மதத்தை பரப்புகின்றனர்.  ஆப்பிரிக்காவிற்கு என்னையும் கப்பலில் அழைத்துச் சென்றனர்.

அப்படி ஒரு முறை காட்டிற்குள் வாழ்கின்ற ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்து  பழைய மரபுகளை மாற்ற சென்றதைப் பற்றி அங்கு அவர்களுக்கு என்னவிதமான பிரச்சினைகள் அனுபவங்கள் நடந்தது என கடிதங்களில் எழுதி இருப்பாள்.

அவர்களுடன் காடுகளில் தங்கியிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததாலும் தங்களின் பழைய மரபுகளில் இருந்து அவர்கள் எதையும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. இந்தக் கிராமத்தின் வழியே தார்ச் சாலை அமைத்த அரசு அந்த மக்களை அங்கிருந்து அடித்து விரட்டியது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் அங்கிருந்து வந்துவிட்டோம் எனவும் எழுதி இருப்பாள்.

கடவுளைப் பற்றியும் சக மனிதன் கடவுளைப் பார்க்கும் விதத்தையும் ஏதோ ஒரு சக்திக்கு பயந்தே வாழ்ந்து பழகும் மனதையும், கடவுளுக்குக் கொடுக்கும் உருவங்கள் எப்போதும் அதிக தலைமுடியுடன், வயதான தோற்றத்துடன் ஒரு ஆணாகவே இருக்கிறது எனவும் கடிதங்களில் எழுதியிருப்பாள். 
பல ஆண்டுகளாகத் தன் அக்காவிற்கு நெட்டி எழுதிய கடிதங்களை வாசிப்பதின் வழியே இந்த கதை பயணிக்கிறது.  அதில் ஒரு கடிதத்தில் அந்த தம்பதியினரில் மனைவி இறந்து விட்ட பின்பு என்னை இவ்வளவு ஆண்டுகள் நல்ல முறையில் பார்த்துக்கொண்ட அந்த நபரைத் திருமணம் செய்து விட்டதாக எழுதி இருப்பாள்.

தன் தந்தையின் மூலமாக சீலிக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்களிடம் தான் இருந்ததாகவும் தன் தந்தையிடம் பணம் கொடுத்துதான் இந்த தம்பதி குழந்தைகளை எடுத்து வளர்த்ததாகவும் இப்போது என்னுடைய பிள்ளைகளாக அவர்களை வளர்த்து வருகிறேன் என நெட்டி தெரிவித்து இருப்பாள்.
இந்த விஷயத்தைத் தன் குடும்பதிற்கு தெரிவித்துவிட்டதாகவும், விரைவில் உன்னை வந்து குழந்தைகளுடன் சந்திக்கிறேன் எனவும் நெட்டி சொல்லி இருப்பாள்.

இந்த நாவல் பெண்களையும், அவர்களை சுற்றியக் கதைகளாகவும் அமைந்திருக்கும். இறுதியாக சீலி தன் தங்கையுடனும் குழந்தைகளுடனும்  சேர்ந்தாளா? தன்னுடைய கணவனை அவள் எப்படி எதிர்கொண்டாள்? பெண்களின் வாழ்க்கை ஆண்களுடைய வெறுப்பினால் எந்த மாதிரியான நிலைமைக்கு தள்ளப்படுகிறது என வேறொரு கோணத்தில் நாவலில் சொல்லியிருப்பார்.

கணவன் திருந்தி மனப்பூர்வமாக சீலியிடம் வாழ நினைக்கும்போது அதை சீலி ஏற்றுக் கொள்கிறாள். ஏதோ ஒரு சூழ்நிலையில் மனிதர்களை உறவுகளை வெறுத்தாலும்கூட நாம் அவர்களால் நேசிக்கப்பட்டது உண்மையானால் நாமும் அவர்களை நேசித்து விடுகிறோம். அவர்களுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எல்லாவிதமான சூழலுக்கிடையில் இடைவிடாத நேர்கோடு போல உறவுகளைப் பின்னி மிக நேர்த்தியாக இந்த கதை சொல்லப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்