இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன்  சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகச் செயல் இழப்பு காரணமாக இன்று காலை அவர் காலமானார். 

அவரது உடல் அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 

பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்படும் என்று கூறப்படுகிறது.1932ல் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப் பட்டியில் பிறந்தவர். பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும் சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்பத்தில் அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இதுவரை 8 நூல்கள், 5 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி இருக்கிறார். 

ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் பின்னர் விலகிவிட்டார். 
ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி 1983 முதல் 2000 வரை அதன் செயலாளராக இருந்தவர். 1989. 1991 என இரண்டுமுறை வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். 

1991 மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர். அந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர்பிழைத்திருக்கிறார். 

2000ம் ஆண்டு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 2005 முதல் 2015 வரை அதன் மாநில செயலாளராக இருந்தார். 

தா.பாண்டியனின் மறைவுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்