புனைப்பெயர் தந்த மூன்று பாம்புகள்! - அ.குமரேசன்


எழுத்தாளர்கள் பலருக்கும் புனைப்பெயர் உண்டு. மூலப்பெயர் என்னவென்றே வெளியே தெரியாத அளவுக்கு அவர்களது புனைப்பெயர் பரவி “பெயர்”பெற்றிருக்கும். பத்திரிகையின் எழுத்தாக்கம் சார்ந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் புனைப்பெயர் ஒரு கட்டாயத் தேவை. ஒரே இதழில் ஒருவரே இரண்டு மூன்று பகுதிகளை எழுத நேரிடுகிறபோது புனைப்பெயர்கள்தான் கைகொடுக்கும்.


என்னுடைய புனைப்பெயர் அசாக். மதுரையில் இயக்கத் தோழர்களுக்கு அசாக் என்றால்தான் தெரியும். அந்தப் பெயரின் பொருள் என்ன என்று கேட்பவர்களிடம், “நான் எதற்கும் ஷாக் ஆக மாட்டேன், ஆகவே அஷாக் – அசாக். அப்புறம் நான் சாக்குச் சொல்வதில்லை. அதனாலும் அசாக்,” என்று விளக்கமளித்து, ஏன்தான் இவனைக் கேட்டோமோ என்று யோசிக்க வைப்பேன்! ஆனாலும் பெயர்க்காரணம் போலவே புனைப்பெயர்க்காரமும் உண்டு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரத்தின் பி.கே.என். உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம். அருணாசலம் ஆங்கில இலக்கணம் கற்பிப்பதற்கென்று பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு தானே தயாரித்த பயிற்றுவிப்பு முறையில் வாரமொரு சிறப்பு வகுப்பு நடத்துவார். அவருடைய ஒரு சராசரி மாணவனாகக் கற்ற அடிப்படை ஆங்கிலம்தான் செய்திகள் வாசிப்பு முதல் புத்தக மொழிபெயர்ப்பு வரையில் துணையாக இருக்கிறது.


முதல் நாள் வகுப்பில் வருகைப் பதிவு செய்தவர் ஒவ்வொரு பெயராகச் சொல்லி அழைக்க மாணவர்கள் எழுந்து அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்ந்தார்கள். “சங்கர ஆறுமுக குமரேசன்” என்று அழைத்தார். நான் எழுந்தேன், “என்னப்பா நீ மட்டும்தான் நிக்கிற? மத்த ரெண்டு பேரும் எங்கே,” என்று கேட்டார். மாணவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.


அவரும் சிரித்தாரென்றாலும், “இப்படிப் பெயர் வச்சிருக்காங்கன்னா அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும். உங்க அம்மா, அப்பாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லு,” என்றார்.


வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருந்த குடும்ப நண்பர்களுக்கும் சேர்த்து என் பெயர்க் காரணத்தை அம்மா கோமதி, அப்பா அருணாசலம் இருவரும் விளக்கினார்கள்.


அம்மா வயிற்றில் நான் இருந்தபோது, தாத்தாவின் ஆறுமுகம் என்ற பெயரைச் சூட்டுவது பற்றி விவாதம் நடந்ததாம். ஒரு நாள் வீட்டின் பின்பக்கம் வைத்திருந்த சிமென்ட் தொட்டியிலிருந்து குளியலறைக்குக் கொண்டு செல்வதற்காகத் தண்ணீர் எடுத்தபோது, உள்ளே ஒரு பாம்பு விழுந்து நெளிந்துகொண்டிருந்ததை அம்மா பார்த்தாராம். பக்கத்துவீட்டார் உதவிக்கு வந்து வெளியே எடுத்துப்போட, அது வேகமாகச் செடிகொடிகளுக்குள் பாய்ந்து மறைந்துவிட்டதாம். தாத்தாவின் பெயரைக் கண்டிப்பாகச் சூட்டுவதென்று அப்போது முடிவு செய்தார்களாம்.


வயிற்றிலிருந்து வெளியே வருவதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலையில் எழுந்து வாசல் கதவைத் திறந்திருக்கிறார் அம்மா. படிக்கட்டில் இறங்கப்போனவர், வழுவழுவென்று பாதம் உணர்ந்ததால் சட்டென்று காலை எடுத்துவிட்டார். அவருடைய குரல் கேட்டு வந்த அப்பா, அதற்குள் படிக்கட்டு அருகிலிருந்த கல்லுக்கடியில் பதுங்கிக்கொண்ட பாம்பை ஒரு நீண்ட கழியால் தள்ளிவிட்டார் – அது முன்பக்கச் செடிகொடிகளுக்குள் நுழைந்து மறைந்துவிட்டதாம்.


அன்று காலையில் சாமிப்படங்களுக்குப் பூவைத்து வழிபட்டபோது, பிறக்கிற குழந்தைக்கு சங்கரன் அல்லது சங்கரி என்ற பெயரையும் சேர்க்க முடிவு செய்தார்களாம்.


வயிற்றிலிருந்து வெளியே வந்த பின், ஒருநாள் வீட்டின் முன்னறைத் தரையில் என்னைப் படுக்கவைத்துவிட்டு, வீட்டுக்குள் பல நாட்களாகத் தள்ளிப்போட்டு வந்த சமையலறை ஒழுங்குபடுத்தல் வேலையை முடித்துவிட்டு வந்த அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியடைந்தார்களாம் – படுத்திருக்கும் குழந்தையின் தலைமாட்டில் ஒரு பாம்பும் தலைவைத்து அமைதியாகப் படுத்திருப்பதைப் பார்த்தால் அதிர்ச்சியடைய மாட்டார்களா என்ன? இவர்களுடைய காலடி அரவம் உணர்ந்த அந்த அரவம் எந்தத் தீங்கும் செய்யாமல் ஓடிவிட்டதாம். அதன் பின் எடுத்த முடிவுதான்  குமரேசன் என்ற பெயரையும் இணைப்பதென்பது.


பெயர் சூட்டும் சடங்கு வந்தபோது, பெரியவர்களின் மடியில் என்னைக் கிடத்தி, சங்கர ஆறுமுக குமரேசன் என்று மூன்று முறை உச்சரித்துவிட்டார்கள். அந்தச் சடங்கு நாள் தள்ளிப் போயிருந்தால், மேலும் சில பாம்புகள் எட்டிப் பார்த்திருக்கக்கூடும், குமரேசன் என்ற எஞ்ஜினோடு மேலும் சில பெட்டிகள் இணைக்கப்பட்டு பெயரே பாம்பு போல நீண்டிருக்குமோ என்னவோ! அப்போது எங்கள் குடும்பம் குடியிருந்தது, அப்பா வேலை செய்த பாபநாசம் மின்சார நிலையக் குடியிருப்பில். பாம்புகள் நடமாட்டம் சர்வசாதாரணம்.


அடுத்த ஆங்கில இலக்கண வகுப்பில் பெயர்க்காரணக் கதையைச் சொன்னேன். இப்படிச் சூட்டப்பட்ட வேறு சில மாறுபட்ட பெயர்கள், சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், பாம்புகளின் இயல்புகள் பற்றி ஒரு கால் மணிநேரம் பேசிய பிறகுதான் பாடத்திற்குள் நுழைந்தார், பகுத்தறிவாளரான அருணாசலம் சார். அந்தப் பாம்புகளை அடித்துக்கொல்ல எண்ணாமல் அப்புறப்படுத்தியதற்காகப் பெற்றோரைப் பாராட்டுவதாகவும் கூறினார்.


வகுப்பறையில் இவ்வாறு பாடப்புத்தக முன்னட்டை, பின்னட்டை மதில்களைத் தாவுகிற, மாணவர்களையும் தாவத் தூண்டுகிற ஆசிரியர்கள் வசீகரமானவர்கள், வணக்கத்திற்குரியவர்கள்.


நடைமுறையில் என்னை யாரும் அந்த மூன்று பெயர்களையும் சேர்த்து அழைப்பதில்லை. ஆயினும், பெயருக்கான முன்னொட்டாக ஆங்கிலத்தில் அப்பா பெயரின் முதலெழுத்து, எனது மூன்று பெயர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்ததில் அசாக் (ASAK) என்ற புனைப்பெயர் எனக்குக் கிடைத்தது!


மாதர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பேச அழைத்த, கலைத்துறையில் இருந்து கட்சி வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவரான அருமைமிகு தோழர் கே.பி. ஜானகியம்மாள், “அடுத்து அசோக் பேசுவார்,” என்று அறிவித்தார். “நான் அசோக் இல்லை, அசாக்,” என்று சொல்லிவிட்டு என் பேச்சைத் தொடங்கினேன். மறுநாள் சந்திப்பில் அவர், “அசோக்குதான் பேரு, அசாக்குன்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு நினைச்சிட்டேம்பா,” என்றார். அவருக்கும் பெயர்க் கதையைச் சொன்னேன்.


இப்போதைய புரிதல் அப்போதே இருந்திருக்குமானால் முதலில் வருகிற எழுத்துக்கு முன்பாக அம்மா பெயர் முதலெழுத்தையும் முன்னொட்டாகச் சேர்த்து கசாக் (GASAK) ஆகியிருப்பேன். இன்று சட்டமே அப்படிப் பதிவு செய்ய வழி செய்கிறது என்றாலும், பலர் இப்போதும் அப்பா பெயர் முதலெழுத்தை மட்டுமே சேர்க்கிறார்கள். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் முதன் முதலில் அம்மா பெயர், அப்பா பெயர் இரண்டின் முதலெழுத்துகளையும் பிள்ளைகளின் முன்னொட்டாகச் சேர்த்தவர்கள் தீனன் என்ற தீன தயாளன், ஜோதியக்கா என்ற சிவகாமி. உணர்வுப்பூர்வமாக இப்படிச் செய்கிறவர்களுக்கெல்லாம் ஒரு வந்தனம்.


பின்னொட்டு: இது வாழ்க்கை வரலாற்று தொகுப்பு அல்ல. வாழ்க்கையின் வழியாக வரலாற்றுத் தேடலின் பகிர்வு.


கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. 35 வருச பழக்கம் இருந்தாலும் இன்றுதான் பெயர்க்காரணம் அறிய வாய்த்தது.சுவையான பகிர்வு.

    பதிலளிநீக்கு