உலகமே ஒரு நாடக மேடைதான், ஆனால்… அ.குமரேசன்

காலில் சலங்கை கட்டிக்கொண்டு தெருவில் ஆடிக்கொண்டிருந்தோம். பாட்டு முடிந்ததும் “நம்ம பொழப்பு இப்படி இருக்கே…. பேசாம விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தாக்கூட கௌரவமா இருக்கும்,” என்கிறார் கூட்டாளி,


சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. “இவெய்ங்களுக்கு எங்களைப் பத்தி என்ன தெரியும்னு இப்படிப் பேசுறாய்ங்கெ,” என்று சிலம்பிக்கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் ஒரு விவசாயி என்று சொல்லாமலே புரிகிறது. மற்றவர்கள் சமாதானப்படுத்தியும் அடங்காமல் அவர் தொடர்ந்து ரகளை செய்ய, எங்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டிருந்த போலீஸ்காரர் அவரை நெருங்க, உடனே நாங்கள், “சார் சார் அவரு எங்க ஆளுதான், இது நாடகத்திலே வர்ற சீன்தான்,” என்று சொல்கிறோம். காவலர் நம்ப மாட்டாமல் நிற்க, அந்த “விவசாயி” எழுந்து “போலீசு என்னை ஒரு போடு போடுறதுக்குள்ள நான் யாருன்னு சொன்னீங்களே, நல்லா இருங்கப்பா,” என்று சொல்லிக்கொண்டே எங்கள் பக்கத்தில் வந்து நிற்கிறார். எங்களோடு சேர்ந்து தானும் பாடுகிறார், கும்மாங்குத்து ஆடுகிறார். “விவசாயி பொழப்பைப் பத்தி உங்களுக்கு என்னா தெரியும்,” என்று கேட்டு தன் துயரங்களை அடுக்குகிறவர், “ஏதாச்சும் மில்லுல வேலைக்குச் சேர்ந்தாக்கூட மாசாமாசம் சம்பளத்தோட கௌரவமா வாழலாம்,” என்கிறார்.


கூட்டத்திலிருந்து மறுபடி சத்தம் கேட்கிறது. “ஏம்பா எங்களை இழுக்கிறீங்க… நீங்களாச்சும் சுதந்திரமா ஆடுறீங்க, பாடுறீங்க… நாங்க எப்ப வேலைய விட்டுத் தூக்குவானுங்கன்னு தெரியாம நித்திய கண்டம் பூர்ண ஆயுசுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.” தோளில் துண்டு, மடித்துக் கட்டிய வேட்டிக்கு வெளியே தெரிகிற காக்கிக் கால்சட்டை, ஒரு கையில் தூக்குப்போணி. ஒரு மில் தொழிலாளி எனத் தெரிகிறது. “நல்லாப் படிச்சிருந்தா கவர்மென்டு வேலைக்குப் போயிருப்பேன், ஆபீஸ்ல ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்திருப்பேன். வேலை நடந்தாலும் நடக்காட்டியும் மாசம் பொறந்ததும் சம்பளம் வந்திடும்,” என்கிறார்.


ஆம், நீங்கள் ஊகித்தது சரிதான். அடுத்து உள்ளே வருகிறவர் ஒரு அரசு ஊழியர். அதற்குப் பிறகு ஓர் அறிவுஜீவி. 

ஒவ்வொருவரும் இந்த அமைப்பில் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை சில செய்திகளும் நடிப்புமாகச் சொன்ன பிறகு, எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து போராடுவதுதான் நிலையான தீர்வு,” என்ற பின்னணிக் குரல் ஒலிக்க, ”சொல்லுறதைச் சொல்லிப்புட்டோம், செய்யுறதைச் செஞ்சிடுங்க,” என்ற பாட்டை சேர்ந்து பாடுகிறோம். பார்வையாளர்களோடு கலந்திருக்கிற, அந்தத் தெருவில் அந்த நாடகத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களும் இணைந்து பாடுகிறார்கள். ஒரு பெண்மணி தனது முந்தானையில் முடிந்திருந்த பத்து ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்தார் (இது நாடகக் காட்சி அல்ல). பின்னர் ஆளுக்காள் சில்லறைகளைப் போட்டார்கள். “தோழா, எல்லாரும் டிபன் சாப்பிட்டுட்டு, இவங்களை பஸ் ஏத்திவிடுற அளவுக்கு வசூலாயிடுச்சு,” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.


வீதி நாடகம் என்பது முற்றிலும் புதிய வடிவம் என்று சொல்வதற்கில்லை. தெருக்கூத்தின் பாரம்பரியக் கதைகளிலிருந்து விலகி, சமூக அரசியல் பிரச்சினைகளை, அதிக ஒப்பனைகள் இல்லாமல் சொல்கிற வகையில் புதியது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உருவாகிய ‘செம்மலர் கலைக்குழு’ மேலும் புதிதாக என்ன செய்தது என்றால், வீதி நாடகத்தை உண்மையிலேயே வீதி வீதியாகக் கொண்டு சென்றது. எம்.பி. ராமச்சந்திரன் ஒருங்கிணைப்பில், மதன் இயக்கத்தில் பலரும் ஆர்வத்தோடு தெருவில் இறங்கிப் புழுதியில் ஆடினோம். மருத்துவர் செல்வராஜ் எழுதிய ‘சொல்லுறதைச் சொல்லிப்புட்டோம்’ நாடகத்தை மதுரை வீதிகளிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் எத்தனை தடவை நடத்தியிருப்போம் என்று கணக்கில்லை.


ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சற்றே சோர்ந்திருந்த ’பீப்பிள்ஸ் தியேட்டர்’ குழுவை உசுப்பிவிட்டார்கள் இயக்கத்தின் மூத்த தோழர்கள். அப்போது என்னை அந்தக் குழுவில் செயல்படக் கேட்டுக்கொண்டார்கள். தோழர்கள் காஸ்யபன், ராஜகுணசேகரன், வேலாயுதம், மாணிக்கம், நாராயண்சிங் போன்ற மூத்தவர்களோடு வேலாயுதம் உள்ளிட்ட இளையோரும் இணைந்து ‘வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்’ உள்ளிட்ட நாடகங்களைப் பல பகுதிகளில் நிகழ்த்தினோம். அரங்க நாடகம் பற்றிய புதிய புரிதல்களோடு, மார்க்சியக் கண்ணோட்டத்தில் கலை இலக்கியம் தொடர்பான விரிந்த தெளிதல்களும் அந்தக் குழுவின் ஒத்திகையில் கிடைத்தன.


அந்த நாடகங்களில், ராஜாமணி, சுந்தரி என்ற இரண்டு தொழில்முறைக் கலைஞர்களும் ஒத்திகைக்கு இவ்வளவு, நாடக நிகழ்வுக்கு இவ்வளவு என்ற ஊதிய அடிப்படையில் பங்களித்தார்கள். ஒரு வெளியூர் நிகழ்ச்சி முடித்து தனிப் பேருந்தில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது சுந்தரி கண்கலங்கியிருந்தார். என்னவென விசாரித்தபோது, “எங்களை இவ்வளவு கௌரவமா நடத்துறதை இப்பதான் நாங்க அனுபவிக்கிறோம்,” என்றார். ஆம், செங்கொடி நிழலில் தழைக்கும் கலைக்குழுக்கள் நாடக நேர்த்தி, அரசியல் கூர்மை, சமூக அக்கறை ஆகியவற்றோடு பாலினப் பாகுபாடற்ற சமத்துவ உணர்வையும் உள்வாங்கிக்கொள்ளச் செய்தன/செய்கின்றன.


சிறு வயதிலிருந்தே என்னைப் பரவசப்படுத்தி வருகிற கலை நாடகம். சினிமாக் கலைஞர்களை விடவும் நாடகக் கலைஞர்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். தெருக்கூத்து, அதன் பரிணாமமாகிய வீதிநாடகம், மேடை நாடகம், அரங்க  நாடகம் என எந்த வகை நாடகமானாலும் அதன் கலைஞர்களைக் கை தொட்டுப் பார்க்கவும், மனம் தொட்டுப் பேசவும் ஆசைப்படுவேன். இன்றளவும் இயக்க நிகழ்வுகளிலும், சபாக்களிலும், கலாச்சாரக்கூடங்களிலும் நடிக்கப்படுகிற நாடகங்களில் பங்களிப்போரைப் பொறாமையோடுதான் பாராட்டுகிறேன்.


தொடர்ந்து நாடகங்களில் நடிக்க முடியாமல் போனதால் ஏற்படும் அந்தப் பொறாமை உணர்வை, காணும் நாடகங்கள் பற்றி எழுதுவதன் மூலம் புத்துணர்வாக மாற்றிக்கொள்கிறேன்.  


“அனைத்து உலகமும் ஒரு நாடக மேடை,

ஆண் பெண் அனைவரும் வெறும் நடிகர்களே,

அவர்களுக்கான வெளியேற்றங்கள் அவர்களுக்கான நுழைவுகள் இருக்கின்றன,

ஒருவர் தனக்கான நேரத்தில் பல பாத்திரங்களை ஏற்கிறார்,

ஏழு பருவங்களில் தனது நடிப்பை வழங்குகிறார்.”


-இது மனிதர்களின் மிக விரிவான வாழ்க்கையைச் சுருக்கி மேடையில் நிகழ்த்த வைத்தவர் என்று போற்றப்படும் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘அஸ் யூ லைக் இட்’ நாடகத்தில் ஜாக்குயிஸ் என்ற கதாபாத்திரம் பேசுகிற புகழ்பெற்ற வசனம். “உலகமே நாடக ஒரு நாடக மேடைதான். நீயும் நானும் அதில் நடிகர்கள்தான்,” என்று தமிழிலும் அது ஒரு திரைப்படத்தின் வசனமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.


உலகத்தை நாடக மேடையாகவும், மனிதர்களைக் கதாபாத்திரங்களாகவும் சித்தரிக்கிற கற்பனை நயமானது. ஆயினும் நாடக மேடைக்கும் உலக அரங்கிற்கும் வேறுபாடு இருக்கிறது. மேடையில் தொடங்குகிற ஒரு நாடகக் கதையின் முடிவு நடிகர்களுக்குத் தெரியும். பார்வையாளர்களுக்கும் தெரிந்துவிடும். எழுதப்பட்ட வசனங்களும் திட்டமிடப்பட்ட காட்சிகளும் பல ஒத்திகைகளுக்குப் பின்பே நிகழ்த்தப்படுகின்றன. உலகக் கூத்துக்களத்திலோ கதையின் முடிவு ஊகிக்கப்படலாம், உறுதியாவதில்லை. ஒவ்வொருவரும் ஒத்திகையின்றி அந்நேரத்து வசனங்களைத் தாங்களே பேசுகிறார்கள். காட்சிகளை நகர்த்துகிறார்கள். அத்தனையிலும் மையக்கருவாய் இருந்து இயக்குகிறது உலகளாவிய பொதுநலம்.


சுயநல நோக்கத்திற்குக் கதையை மாற்றவும் வசனங்களைத் திணிக்கவும் மனிதர்களை இயக்கவும் உலகச் சுரண்டல் கும்பல்கள் இனவாத, மதமோக, சாதிரோக, ஆணாதிக்க ஒப்பனைகள் சூடிக்கொண்டு மேடையைக் கைப்பற்றச் சுற்றிவருகின்றன. அரங்கத்தை மீட்கவும் காக்கவும் துடிக்கிற சக்திகள் அன்பும் அக்கறையும் சூடிக்கொண்டு, எதிர் வசனங்களோடு, நேச லட்சியங்களோடு சூழ்ந்துநிற்கின்றன.


நாடக அரங்கில் பார்வையாளர் வரிசைகள் இருக்கும். உலக மேடையில் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட முடியாது. இந்த உண்மை நம்மைப் பங்கேற்பாளர்களாக்கட்டும். நாம் யார் பக்கம் என்று நாமே முடிவு செய்து பேசுகிற, நடிப்பின்றி இயங்குகிற சுதந்திரம் நமக்கு இருக்கிறது. எந்தப் பக்கம் நின்றால் அந்தச் சுதந்திரம் நிலைத்திருக்கும் என்ற தெளிவோடு இணைந்திருப்போம். அவரவர் பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருப்போம்.

(மார்ச் 27 உலக நாடக தினம்)


கருத்துரையிடுக

0 கருத்துகள்