“எஞ்ஜாயி எஞ்சாமி” மாற்றத்துக்கான பாட்டு - அ. குமரேசன்


மரபுச் சொற்களும், நவீன இசையும் கலந்து கொண்டாட்டம் போடுகிற பாட்டு அது. பாசியாய்ப் பச்சையைப் பூசும் இயற்கையின் இனிமையையும், நல்லபடி வாழச்சொல்லி பூமியைக் கொடுத்த பூர்வகுடிப் பெருமையையும் புதிய ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு நயங்களோடு பேசுவதால் இது மாறுபட்ட பாட்டு. அவற்றோடு கலந்துறவாடும் உணர்வாக. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பூமியில் பரிணமித்திருக்கும் சக உயிர்களுக்கான சமத்துவத்தைப் பேசுவதால் இது மாற்றத்துக்கான பாட்டு.

சாதியும் மதமும் இனமும் மொழியும் என பாகுபாட்டு வன்மங்கள் வளர்க்கப்படுவது கண்டு மனம் கொதிக்கவைக்கும் சொற்களைக் கோர்த்தளித்திருப்பதோடு, தனக்கே உரிய விலங்குடைத்துப் பறக்கும் வேட்கையைக் குரலாலும் ஆட்டத்தாலும் பொது லட்சியமாக்குகிறார் அறிவு. 

கொதித்திருக்கும் மனதைக் குளிர்விக்கும் குரலையும் கூடியாடும் கலையையும் கொடுத்து, அட இவங்க நம்ம வீட்டுல பொறந்திருக்கக்கூடாதா என்று எண்ண வைக்கிறார் தீ.

ஒளி / ஒலிப்பதிவின் நேர்த்திக்கும் சேர்த்துதான் ஒரே மாதத்தில் இத்தனை கோடிப்பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற உலகளாவிய கீர்த்தி. காட்சிப்பதிவும் தொகுப்பும் படைப்பாக்கத்தில் பங்கேற்பதை நிறுவுகின்றன பல இடங்கள். கடைசியில் ஊன்றிய கோலைப் பற்றியிருக்கும் முதிய கையின் மீது தீ தனது இளம் கையை வைக்கிற   உருவகத்திற்காகவே இயக்குநர் அமித் கிருஷ்ணா சிறப்புப் பாராட்டுக்கு உரியவராகிறார்.  


 காணொளிப் பதிவில் பாட்டைக் கேட்கக்கேட்க, அசைவுகளைப் பார்க்கப்பார்க்க இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், தொகுப்பாளர்… ஏன், இதற்கு விளக்குப் பிடித்திருக்கக்கூடிய தொழிலாளி உட்பட அனைவரையும் நேரில் சந்தித்துக் கைகுலுக்கப் பேராவல் கொள்கிறது உள்ளம்.

சுதந்திரக் கலைஞர்களைத் திக்கெட்டும் கொண்டுசெல்லும் மாஜா தளத்தை உருவாக்கியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தொகுப்பைத் தயாரித்திருக்கும் சந்தோஷ் நாராயண் இருவரின் இந்த முயற்சியில் இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. நெடுங்காலமாக இந்தியாவின், தமிழகத்தின் சங்கீதம்/நாட்டியம் என்றால் வெளிநாடுகளில் குறிப்பிட்ட வகையறாக்கள் (அவற்றின் கலைச்சிறப்பைப் புறக்கணிப்பதற்கில்லை என்றாலும்) மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த ஆதிக்கங்களையும் மீறி எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாத்துப் பராமரித்து வந்திருக்கிற உயிர்ப்பான கலைகளின்பால் புவிப் பரப்பின் கவனத்தை ஈர்ப்பதில் இதுவும் ஒரு தலையாய பங்களிப்பாகிறது.

இதைப் புரிந்துகொள்வது மனதைச் சுதந்திரமாக விசாலப்படுத்த உதவும்.  நான் சொல்வதன் உண்மையை அனுபவிக்க, இந்தப் புதிய “குக்கூ குக்கூ” அட்டகாசத்தை…

எஞ்ஜாய் எஞ்ஜாய் எஞ்சாமிகளே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்