சாலிகிராமம் பூங்காவில் இலவச சிலம்ப பயிற்சி

சென்னை சாலிகிராமத்தில் ஸ்டேட்பாங்க் காலனி பூங்காவில் இலவசமாக சிலம்பம் கற்றுத்தருகிறார்கள். கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிலம்பம் கற்றுக்கொள்கிறார்கள். வயது வாரியாகவும், வகுப்பில் சேர்ந்த நாட்களின் படிநிலை வாரியாகவும் குழந்தைகளுக்குச் சிலம்பம் கற்றுத் தரப்படுகிறது. 
இந்த பயிற்சியை அளித்து வரும் சிலம்பம் மாஸ்டர் ரவீந்திரன் பேசும்போது, 'நான் சாலிகிராமத்தில் 40 வருடமாக வசித்து வருகிறோம். எனது தாத்தா, பாட்டன், பூட்டன் என ஐந்து தலைமுறையாக சிலம்பம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். எனது குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க ஸ்டேட் பாங்க் காலனி பூங்காவிற்கு வந்து சொல்லிக் கொடுத்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலரும் ஆர்வமாக வந்துக் கற்றுக் கொண்டனர். அதனால் அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொடுத்தேன். கற்றுக்கொண்டிருந்த குழந்தைகள் அவர்களின் நண்பர்களுக்கும், அருகில் இருந்தவர்களுக்கும் சொல்லி அவர்களையும் அழைத்துவந்தனர்.


இப்படியாக இந்த ஒரு மாதத்தில் 75க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிலம்பம் கற்றுக் கொள்கின்றனர். இதனை நான் இலவசமாகக் கற்றுத் தருகிறேன். பணம் கொடுத்துக் கற்றுக்கொள்ள முடியாத பலருக்கும் இது மிக பயனுள்ளதாக சொல்கிறார்கள்’ என்று புன்னகையோடு கூறினார்.

இவரிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களில் சிலரை புதிதாக சேரும் மாணவர்களுக்குக் கற்றுத் தரச் செய்கிறார். இப்படியாக எட்டு வயது வரைக்குமான ஒரு குழு, 10 வயது என்கிற பிரிவும், பயிற்சிக்கு சேர்ந்த நாட்களின் அடிப்படையிலும் குழு குழுவாகக் கற்றுத்தரப்படுவது சிறப்பு. 
இதனால்தான் இத்தனை மாணவர்களைச் சமாளிக்க முடிகிறது. 

இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ‘என் பெயர் ஜெயந்தி. என்னுடைய மகனும், மகளும் இங்கே சிலம்பம் கத்த்துக்கிறாங்க. அவங்க சிலம்பம் வகுப்புக்கு வர்றதுக்காக காலையில ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காலைக்கடன்களை முடிச்சிட்டு பயிற்சிக்கு வர்றாங்க. நைட்ல சீக்கிரம் தூங்கிடுறாங்க. நாள் முழுக்க உற்சாகமாக இருக்காங்க. இந்த மாதிரி ஒரு வாய்ப்புக் கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’ என்று கூறுகிறார் ஜெயந்தி.


இன்னொரு மாணவரின் பெற்றோரான அழகேசன், ‘இங்க இவ்வளவு மாணவர்கள் இலவசமாக கத்துக்கிறாங்க. அவர் கத்துக்கொடுக்கிறது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு’ என்றார். 


சத்யா எனபவரிடம் பேசினோம். ‘என் பசங்க இங்க சிலம்பம் கத்துக்கிறாங்க. அவங்க சீக்கிரம் எந்திரிச்சிடுறாங்க. ரொம்ப ஆக்டிவா இருக்காங்க’ என்றார்.


இலவசமாக கற்றுத் தருவதற்கு இன்னொரு காரணம் இடம். ஏனெனில் திறந்தவெளியாக இருக்கும் இதுபோன்ற பூங்காங்கள் சென்னையில் அதிகம். அதில் சில பூங்காங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அதில் ஸ்டேட்பாங்க் காலனி பூங்காவும் ஒன்று. 

இதற்கு முன்னர் இந்த பூங்காவில் குழந்தைகள் அதிகம் வருவதில்லை. ஆண்கள் சிலர் மட்டும் இறகுப்பந்து விளையாடிச் செல்வர். இப்போதும் விளையாடி வருகின்றனர். இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய அனைத்து பொருட்களும் பழுதுபட்டிருக்கும் நிலையில் சிலம்பம் கற்றுக்கொள்வதற்காக மட்டுமே இப்போது குழந்தைகள் வருகின்றனர். 

சென்னை மாநகராட்சியின் சிறப்பான திட்டங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காங்களை அமைத்து பராமரிப்பதும் ஒன்று. ஆனால் பராமரிக்கப்படாமல் இருக்கும் பூங்காங்களை மாநகராட்சி குழந்தைகள் விளையாடும் இடங்களாக மாற்றுமானால் சிலம்பம் கற்றுக்கொள்ள மட்டுமல்லாமல் இன்னும் மிகச் சிறிய குழந்தைகள் விளையாடவும் இந்த பூங்காவிற்கு வருவார்கள். 

சாலிகிராமத்தில் பாஸ்கர் காலனியில் இருக்கும் பூங்காவில் குழந்தைகள் மாலையானால் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாடுவதைக் காண முடிகிறது. இப்போது ஸ்டேட்பேங்க் காலனி பூங்கா சிலம்பம் பூங்காவாக அடையாளப்பட்டிருக்கிறது. 

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் மாஸ்க் அணிந்துகொண்டு தனிமனித இடைவெளியைப் பின்பற்றி சிலம்பம் கற்றுக்கொள்ள இத்தனை ஆர்வம் காட்டுவது பாராட்டுக்கிரியது. அதனை இலவசமாகக் கற்றுத் தரும் ரவீந்திரன் மாஸ்டருக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பாராட்டைச் சொல்லியே ஆக வேண்டும். 

அதே சமயத்தில் மாநகராட்சி நினைத்தால் நமது பாரம்பரிய கலையைப் பூங்காக்களில் இலவசமாகக் கற்றுத்தரலாம். மதிப்பூதியத்தில் பாரம்பரியக் கலையைக் கற்றுக்கொண்ட கலைஞர்களை நியமித்தால் பெரு நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. திரு. ரவீந்திரன் மாஸ்டரை பல ஆண்டுகளாக அறிவோம்! இவர் மிக ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிலம்ப பயிற்சி அளிக்கிறார்! அனைவரும் பயன் பெற வேண்டும்

    பதிலளிநீக்கு