’யாத்வஷேம்’ - யூதர்களின் மறுபக்கம்

இலக்கியங்களை நாளும் ஒரு சுவையென சுவைக்கும் நாட்களாக எனது நாட்கள் மாறிப் போயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒவ்வொரு இரவைக் கடந்து வரும் போதும் நம் உடல் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது, அதைப்போல் ஒவ்வொரு புத்தகத்தைக் கடந்து வரும் போதும் நம் மனது புதுப்பிக்கப்படுகிறது என்பது நான் உணர்ந்த விடயம். ஒவ்வொரு புத்தகத்திற்குள்ளான பயணம் நம் வாழ்க்கை பயணத்தையே திசை திருப்பிக் கொண்டு தான் இருக்கிறது. அப்படியாய் யாத்வஷேம் புத்தகத்திற்குள் நான் சென்ற வாசிப்பு பயணம் என் வாழ்க்கையையும், அதோடு இணைந்த என்னையும் திசைதிருப்பி இருக்கிறது.

வாசித்தோம், கடந்தோம் என்று இந்த நாவலை கடந்துவிட முடியாது. நாவலும், அதன் பேசு பொருளும், உயிரோட்டம் மிக்க கதாபாத்திரங்களும் நம் மனதை கொய்து தான் போடுகிறது. யூதர்களின் வரலாற்றின் பக்கங்களை இதுகாறும் ஆழமாய்ப் புரட்டாதவர்களுக்கு வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.

ஹிட்லரின் கொடூர கரங்களில் சிக்கிய யூதர்களின் வரலாற்றையும், அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதையும் எந்த ஒளிவு மறைவுமின்றி அப்பட்டமாய் பேசுகிறது நாவல். வரலாற்று நிஜங்களை ஒரு புனைவாக மிகவும் காத்திரமாய் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

ஒரு வரலாற்றைக்கொண்டு புனைவை‌ படைக்க எத்தனை மெனக்கெடல்களும், வரலாற்று தரவுகளும் தேவைப்பட்டிருக்கும். மிகுந்த கவனத்தோடு படைக்கப்பட்டிருக்கும் படைப்பிது என்பதை அதன் ஓட்டத்தில் எந்த பிசிருமின்றி தெளிந்த நீரோடையாய் சென்று, அந்த ஓட்டத்தோடு நம்மையும் இழுத்துச்செல்லும் விதத்திலிருந்து உணரமுடிகிறது. அப்படியாய் தரவுகளை சிறுக சிறுக சேகரித்த உழைப்பை எழுத்துக்களின் ஆழத்திலிருந்து உணரமுடிகிறது.

ஒரு புனைவின் இலக்கு, தான் சொல்லவரும் கருப்பொருளை பசுமரத்தாணியாய் நம்முள் பதித்து, அந்த கதாபாத்திரங்களையும் நம்முள் புகுத்தி நம்மோடு உலாவ விட வேண்டும். அப்படி அந்த புத்தகத்தில் புனையப்பட்ட கதாபாத்திரமான ஹ்யானா என்ற அனிதா இந்த புத்தகத்தை தொடங்கிய சில மணித்துளிகளில் என்னோடு உலாவ ஆரம்பித்துவிட்டாள்.

கோரிப்பாளையத்தில் உள்ள கல்லறை தோட்டத்தின் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட அந்த கல்லறை, ஆசிரியரின் கண்ணில்பட்ட நாளிற்கு நன்றிகள் பல சொல்ல வேண்டும். ஒரு பெரிய வரலாற்று பொக்கிஷம் நம் கண்முன் விரிய காரணமான நாள் அல்லவா அது!புத்தகத்தில் ஆங்காங்கே தத்துவங்களையும், கவித்துவ வரிகளையும் கண்டிருக்கிறேன். ஆனால் இப்புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் தத்துவங்களும், கவித்துவ வரிகளும் தோன்றி எழுத்தாளரின் எழுத்து புலமையை பறைசாற்றுகின்றன. அவை வாசிக்கும் மனதிற்குள் ஊடுருவிச் செல்வதை ஒவ்வொரு பக்கத்தை கடக்கும்போதும் உணர முடிந்தது.

ஹிட்லரின் கொடுங்கோள் ஆட்சியில் லட்சோப லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டும், சித்திரவதைகளை அனுபவித்தும், நாட்டைவிட்டு துரத்தப்பட்டும் என சொல்லொணா துயரங்களை அனுபவித்தார்கள். அந்த சூழலில் இருந்து தப்பி வந்த யூதர்களான ஹ்யானாவும், அவள் தந்தை ஆரன் மோசசும் இந்தியாவிலுள்ள பெங்களூரை தேர்ந்தெடுக்கிறார்கள். தன் குடும்பம், வீடு, நாடு என அனைத்தையும் இழந்த நிலையில் அவர்களின் நிற்கதியான சூழலில் கதை விரிகிறது.

பெங்களூரின் சாம்ராஜாபேட்டையில் குடியேறியவர்களுக்கு, சுமி குடும்பத்தோடு நெருங்கி பழகும் வாய்ப்பும்,  அன்யோன்யமான நட்பும் கிடைக்கிறது. தன் தாய், சகோதரி, சகோதரன் என மூவரின்  பிரிவால் வாடும் ஹ்யானா தன் தந்தையோடு மிகவும் நெருக்கமாகிறாள். நாட்டில் தன் கண்முன்னால் நடந்த கொடூரங்களையும், அச்சுறுத்தல்களையும் நாளும் அசை போட்டுக்கொண்டு வலியோடு வாழ பழகிய ஹ்யானாவிற்கு, வாழ்க்கை  பிரிவின் வலிகளோடு வேகமாய் சுழல்கிறது.

ஒரு கட்டத்தில் தன் உறவு என ஒட்டிக்கொண்டிருந்த அவள் தகப்பனையும் காலம் அவளிடமிருந்து கத்தரித்து போட்டது. இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற  வெறுமையின் உச்சத்தில் நிற்கிறாள் ஹ்யானா. மொழி, இனம், நாடு என எல்லாவற்றிலும் வேறுபட்ட இடத்தில் ஹ்யானாவை நிற்கதியில் நிற்க வைக்கிறது காலம். "ஹ்யானாவின் துன்பத்தின் உச்சியில் அதிர்ஷ்டத்தின் சின்ன இழை ஒன்று இருந்தது" எத்தகைய கவித்துவம் நிறைந்த வரிகள் இது. ஆம், சுமியின் குடும்பம் தகப்பனை இழந்த ஹ்யானவை தங்களுள் ஒருத்தியாய் ஏற்றுக்கொள்கிறது. ஹ்யானா அனிதாவாக மாற்றப்படுகிறாள். வாழ்வின் பிடியில் சிக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன? சில நொடிகளில் ஒட்டுமொத்த வாழ்வே தலைகீழாய் மாறித்தான் போகிறது. நானும் தலைகீழான மாற்றங்களை பல முறை கடந்திருக்கிறேன். மாற்றங்களை ஏற்று கொண்டு "வலியது வெல்லும்" என்ற புரிதலோடு மாற்றங்களை சந்திக்க எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். மாற்றங்கள் தானே வாழ்வின் அடிநாதம், எது நிலை இங்கு. சில நேரங்களில் வாழ்க்கை புதிராய் தான் தோன்றுகிறது.

அனிதா சாமராஜாபேட்டை வந்ததிலிருந்து தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கிறாள், சாதி, மதம் எவ்வாறு ஊடுருவி இருக்கிறது என்றும், பிராமண சாதிகளோடு போட்டிபோட்டுக் கொண்டு குஞ்சிடிகர்களான சுமி குடும்பம் சடங்குகளை கருத்தாய் செய்வதையும், இந்திய நகரங்களில் சாதி மதத்தின் அழுத்தம் சற்று குறைந்து தான் போய் இருக்கிறது என்றும், இவை எல்லாவற்றையும் தாண்டி மனிதர்கள் நடுவே பிண்ணிய வலை ஒன்று  இருப்பதும் என அனிதா ஒவ்வொன்றாய் உணருகிறாள்.

ஒரு யூதப் பெண்ணாய் இந்தியாவில் சுதந்திரமாக இருந்தது, இந்திய மக்கள் அவளை ஏற்றுக் கொண்டது என அவள் ஆறுதல் அடைந்திருந்தாள். இருப்பினும் தன் நாட்டையும், முக்கியமாக தன் குடும்பத்தையும் பிரிந்த துயர் அவளை வாட்டிக் கொண்டே இருந்தது, சுமி வீட்டில் சுமையாய் போனோமோ என்ற உறுத்தல், போர் எப்போது முடியும் தன்னவர்களை காண வேண்டும் என்ற ஆவல் என நீண்டு கொண்டே இருந்தது அனிதாவின் மனக்குமுறல்கள்.  வாழ்வில் அனைத்தும் கிடைத்திருந்தாலும் தாகம் நிறைந்த மனம் வேறு ஒன்றிற்காய் ஏங்கித் தவிக்கும். அது அந்த உயிரின் தேவை.  அந்த உணர்வை  நம்மை உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். அப்படியாய் நல்ல குடும்பம், பாதுகாப்பான சூழல், அன்பை பொழியும் உறவுகள் என அனைத்தும் கிடைத்தும் அனிதாவின் மனம் அதிருப்தியான உணர்வால் நிறைந்திருந்தது. அவளின் முகம் வெளிச்சத்தை  இழந்திருந்தது.

காட்டு மரமானது தன் தாகத்தேடலால் நீண்ட தூரத்திற்கு வேர் பரப்பி தன் தாகத்தை தணிக்க முயற்சிக்கும். அப்படியாய் அனிதா தன் தீராத்தேடலால் வரலாற்றை குடைந்து தேடுகிறாள். தேடித்தேடி வாசிக்கிறாள், சுமியின் சித்தப்பாவிடம் போரைப் பற்றி நாளும் விசாரித்து தெரிந்து கொள்கிறாள். விடை தெரியாத நூறு கேள்விகளை சுமந்து திரிகிறாள்.

அவள் ஒரு யூதப் பெண்ணாக இருந்தும், உருவமில்லாத கடவுளை தொழும் பழக்கத்திலிருந்தாலும், சுமி வீட்டு  விக்கிரகங்கள் தன் பழக்கவழக்கத்திற்கு நேர்மாறானதாக இருந்தாலும், தன்னை அரவணைத்த குடும்பத்திற்குமுன் அவளுக்கு எதுவும் பெரிதாய் தெரியவில்லை. அவர்களின் பழக்கவழக்கங்கள் அத்தனைக்கும் தன்னை விட்டுக்கொடுக்கிறாள். புஷ்ப விலாசத்தில் அனிதாவோடு நானும் சுற்றித்திரிந்து, அம்மா மொச்சைக்காய் உரித்துக்கொண்டே  சொன்ன கதைகளை அருகில் இருந்து கேட்பதை போன்ற உணர்வு என்னுள். நான் இருந்த இடத்தை சற்று சுற்றிப் பார்த்து நிதானித்து விட்டு புத்தகத்தைத் தொடர்ந்தேன்.

உன்னுடைய கடவுளை பூஜையறையில் வைத்துக் கொள் என்று அம்மா சொன்னது அனிதாவை சிந்திக்க வைத்தது. தாங்கள் விக்கிரகங்களை தொழமாட்டாதவர்கள்தான், ஆனாலும் அம்மா கூறியதிலிருந்து பல மதங்களையும், சாதிகளையும் மனித சங்கிலியால் கட்டி வைத்த நாடாக இந்தியா இருக்கிறது என்ற புரிதல் அவளை ஆறுதல் அடையச் செய்தது. அம்மாவிற்கு எந்த தெய்வமும் அந்நியமாக படவில்லை என்ற வரி ஆழமாய் சிந்திக்கச் செய்தது. வேறு, வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றாய் வாழும் தேசம், இந்த மண்ணிற்கு வெறுக்கத் தெரியாது என்று நம் தேசத்தைப் பற்றிக் கூறுகையில் நம் தேசத்தின் மீதிருந்த பாதுகாப்பற்ற உணர்வு மறைந்து ஒரு பாதுகாப்பான உணர்வு என்னை நிறைத்தது.

சுமியின் அம்மா கதாபாத்திரம் நிறைய விடயங்களை கற்பித்தது, இரண்டு எழுத்து படிக்காத அம்மாவின் முந்தானை நிறைய நூற்றியொரு கதைகள். இந்த கதைகளின் வழியாக வாழ்வின் சாரத்தை உணரமுடிந்தது.  போர் அச்சுறுத்தலால் குழந்தைமையை தன் அம்மா மடியில் வீணாய் தொலைத்த ஹ்யானாவிற்கு, பால்யத்தின் பின்பகுதி கதைகளால் நிறைந்திருந்தது, அதற்கு காரணம் சுமியின் அம்மா.

"சுமி, ஹிட்லர் யார், என்று கேட்டவுடன் சுமியின் பால்யத்தை எண்ணி பொறாமை கொண்டேன்" என்று ஹ்யானா சொல்லும் நொடி, மனதின் ரணம் கூடி வலித்தது. நம் பாதுகாப்பான நிம்மதியான நாட்டுச் சூழலலை எண்ணி மனம் ஆறுதல் அடைந்தது. இன்னும் எத்தனை ஹ்யானாக்கள் பால்ய வயதின் பேரானந்தத்தை தொலைத்து திரிகிறார்கள் என்று கலங்கினேன்.

போர்களால் திடீரென முளைத்த விமான தொழிற்சாலை ஆயிரமாயிரம் பேருக்கு வாழ்க்கை கொடுத்து, போர்முடிந்ததும் அவர்களின் வாழ்க்கையை பறிக்கிறது. உங்கள் சேவை எங்களுக்கு தேவையில்லை என்ற ஒற்றைவரியால் பலரின் வாழ்க்கையும் திசைமாறுகிறது. வாழ்ந்து காண்பிப்பேன் என்று நகரம் வந்த திம்மண்ணா தோற்று போனதாய் எண்ணி ஊர்திரும்புவது மனதை வருத்தினாலும், நிலையாமை தானே வாழ்வின் முக்கிய தத்துவம் என்ற‌ புரிதல் அந்த வருத்தத்திலிருந்து என்னை மீட்டது.

வலிகளுக்கு மத்தியில் வளர்ந்தது விவேக், அனிதாவின் உறவு. நண்பர்கள், காதலர்கள், தம்பதியர்கள் என்று எந்த பெயர்களுக்குள்ளும் அடங்காத பெயரிட முடியாத மென்மையான உறவு அது. தன் வாழ்வினூடே ஹ்யானாவின் வாழ்விற்கு அர்த்தமூட்டியவன். அவளின் தேடல்களுக்கு துணையாய் இருந்து தன் வாழ்நாளில் முன்பகுதியையும், பின்பகுதி முழுவதையும் அவளோடு இணைத்துக் கொண்டவன். அவளின் தேடலை

தன் தேடலாய் ஆக்கிக் கொண்டவன். எத்தனைபேருக்கு தெரியும் தன் இணையரின் தவிப்பு, தாகம், இலக்கு. அவர்களின் இலக்கை அடைய எத்தனை பேர் வாய்ப்பளிக்கிறோம். அவர்களைப்பற்றி சற்றும் சிந்திக்காத நிலையில்தானே பலரும் இருக்கிறோம். அவர்களாய் முன்னேறினாலும் அவர்களின் இலக்கைவிட்டு விலக வைப்பதில் முனைப்பாய் திரிகிறோம். ஆனால் ஹ்யானாவின் இலக்கை தனதாக்கிக் கொண்டு, அவள் வாழ்வின் புதிர்களுக்கு விடை தேட முழுதும் துணையாய் இருக்கும் விவேக் மனதை தொட்ட முக்கிய கதாபாத்திரம். தன் பெற்றோர்களின் பயணங்களை குறித்த எந்த விபரமும் அறியாமல், பெற்றோர்களின் பயணங்களுக்கு குறுக்காக நிற்காமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் மகன் விசுவின் அன்பு அளப்பரியது.

அனிதாவின் கதாபாத்திரம் போன்றே ரெபேக்காவும் மனதை ஊடுருவி சென்றாள். அவள் தன் துயர் மிகுந்த நாட்களை பகிரும் போது என் அங்கமெல்லாம் வலியும் வேதனையும் நிறைந்திருந்தது.  ரெபேக்காவின் பசிப் போராட்டம், வன்புணர்வு வேதனை, மரணபயம் என அனைத்தையும் கேட்க கேட்க ரெபேக்காவை கட்டி அழ துடித்தது  மனம். 'உயிர் பிழைத்திருப்பது மட்டுமே ஒவ்வொரு நாளும் குறிக்கோளாக இருந்தது' என்ற வரிகளின் ஆழத்தில் விழுந்த நான் சுய உணர்வு பெற்று எழ வெகு நேரம் பிடித்தது.  சில மாதங்களுக்கு முன்னால் 'ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்'  எனும் திரைப்படத்தில் பார்த்த நாஜிகள் முகாமின் காட்சிகளும் என் நினைவலைகளில் சுழன்று, ரெபேக்காவின் துயரங்களை இன்னும் ஆழமாய் காட்சிப்படுத்தி என்னை   வேதனைக்குள் ஆழ்த்தியது.

நாஜிகளின் முகாமில் ரெபேக்கா  அனுபவித்த அத்தனை துயரங்களையும், அங்கு நடந்த விஞ்ஞான கொலைகளையும், மனிதர்களை உயிரோடு எரிக்கும் அக்கிரமங்களையும், வன்புணர்ந்துவிட்டு ரொட்டி துண்டை விட்டு எரியும் ஆணவத்தையும் வாசிக்க வாசிக்க ரெபேக்காவின் மனம் மரத்துப் போனது போல் என் மனமும் மரத்துப் போனது. ஒரு பெண்ணாய் அவள் அடைந்த அத்தனை வேதனைகளையும் என் உடலில் உணர்ந்தேன். என்னை சுற்றிலும் நான் துயரம் என கருதிய அனைத்தும் தூசாய் மாறி என்னை விட்டு சென்றதை உணர்ந்தேன். நாம் அனுபவிப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்று என் முன் பல கேள்விகள் எழுந்து திணரடித்தது. என்னை சுற்றிலுமிருந்த துயரங்கள் சுக்குநூறாய் போய், எனக்குள் ஒரு வலிமை பிறந்தது, நாஜிக்களின் முகாம்களில் நாமில்லாததே ஒரு பெரிய ஆறுதலாய் இருந்தது.

அனிதாவிற்கு ஏற்பட்ட அதே உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டது. அனிதாவை பாதுகாப்பால் சூழ்ந்த காலம், ஏன் ரெபேக்காவை துயர்மிகுந்த சூழலில் ஆழ்த்தியது? வாழ்க்கை விசித்திரமானதாய் படுகிறது.

தேடி தேடி அழைந்த தீரா தேடலால் சகோதரிகள் ஒன்றிணையும் தருணம் புத்தகத்தின் மையப்பகுதி என்றே உணர முடிகிறது. ஆம் அவர்கள் இணைய காரணமான யாத்வஷேம் எத்தனை குடும்பங்களை இப்படி இணைத்திருக்கிறதோ... மனம் நெகிழ்கிறது.

சகோதரிகளின் இணைவிற்கு பிறகுதான் நாஜி முகாமின் கொடுமைகள் வெட்ட வெளிச்சமாகிறது, கருப்பு வரலாற்றின் பக்கங்களை கழுவிய அராஜக உண்மைகள் வெடித்து சிதறுகிறது, யூதர்களின் மனதில் சூழ்ந்திருக்கும் வன்மங்கள் புரிகிறது.

அழுகை சுவர், செபல்கர் சர்ச், பாலஸ்தீன வரலாறு, யூதர்களின் வரலாறு, யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தொடக்கம் ஒன்றே என்ற வரலாற்று உண்மை,  ஒரே எருசலேம் மூவருக்கும் எப்படியெல்லாம் மாறிப் போயிருந்தது என்றும், என்.பி.சி போர் பற்றியும், புனிதப் போர்கள் என்று இத்தனை நாளும் நிகழ்ந்தவைகளை பற்றியும், இயேசுவின் மன்னிக்கும் மாண்பு பற்றியும், ஏன் எல்லாக் காலத்திலும் பெண்கள் தோற்கிறார்கள் என்றும், நடந்தது ஒன்றாயிருந்தும் இருவேறு மதமான  வரலாறையும் கதை நகர்வில் உணர்ந்து கொண்டே வந்தேன்.

மரண வலியை அனுபவித்தவர்கள் அதே வலியை பிறருக்கு தருவது நியாயமா? என்ற அனிதாவின் கேள்விக்குள் எத்தனை அர்த்தம் இருக்கிறது. தன் மக்கள் கொண்டிருக்கும் இந்த வெறியை கண்டு தன் நாட்டையே வெறுக்கிறாள். அனைவருக்குள்ளும்  ஊடுருவி இருக்கும் இனவெறியை கண்டு கலங்குகிறாள்.

உண்மைக்கு எத்தனை பரிமாணங்கள்... என்ற வரி என்னுள் நீண்ட மௌனத்தை ஏற்படுத்தியது. அந்த வரிகளை கடக்க முடியாமல் தவித்தேன். வாழ்க்கையின் நூறு கேள்விகளுக்கு விடை கிடைத்து, இந்த நிலத்தில் கிடைத்த நூறு கேள்விகளோடு செல்ல தயாராக இருக்கும் ஹ்யானாவிற்கு டேனி மூலம் சில பதில்கள் கிடைத்தன. தன் நாட்டைப்பற்றிய மனவேதனையோடு செல்லப் போகிறாளே என்ற என் உறுத்தலை உடைத்து நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறான் டேனி.

டெர்ரி மற்றும் ரெபேக்கா இருந்த அதே வீட்டில் உள்ள டேனி மாற்றி யோசித்தது, ஹ்யானாவின்  மனபாரத்தை மட்டுமல்ல என் மனபாரத்தையும் குறைத்தது. யூதர்களின் வன்மத்தை கைவிடுமாறு ஒரு கூட்டம் போராடுவதையும், ராணுவத்தில் சேராத இளைஞர்களையும், டேனிக்கும் பஷிருக்குமான நட்பையும், டேனியின் மனதில் ஏற்பட்ட புரிதலையும், குழலின் குரல் குழலோடு சேர்வதை ஒருமுறை கேட்க வேண்டும் என்ற டேனியின் ஒற்றுமை உணர்வின்  துடிப்பையும்  பார்த்த ஹ்யானாவிற்குள் எல்லாம் மாறும்  என்ற நம்பிக்கை வெள்ளம் பெருக்கெடுக்கிறது, நிம்மதியாய் நாடு திரும்புகிறாள். இங்கே வந்தவள் தன் சொந்த துயரில் இருந்து விலகி பொதுநல போராட்டங்களில் ஈடுபடுகிறாள். துயருற்றிருந்த அனிதா துடிப்பாய் மாறி, யாருக்காகவாவது போராடிக் கொண்டே இருக்கிறாள்.

"அறுபது இலட்சம் யூதர்களின் மரண வேள்வியை உலகம் நின்று பார்த்தது. உலகம் அதை எதிர்க்காமல் நின்று பார்த்தது" இந்த வரி என்னுள் குற்றவுணர்வை ஏற்படுத்திக் கூனிகுருகச் செய்தது. ஒரு சிறிய எதிர்ப்பு குரலையும் எழுப்பாமல் இன்றும் சுயநலத்தோடு பல அக்கிரமங்களை கண்டும் காணாதது போல் போகும் போக்கை எண்ணி தலைகுனிந்தேன்.

"போரில் யாரும் எப்போதும் வெல்லப்போவதில்லை" என்ற வரிகளின் ஆழம் ஆழ்ந்த சிந்தனைக்குள் தள்ளியது. குருச்சேத்ர போரில் நின்றிருந்தவர்கள் அனைவரும் உறவுகள், நாம் மீண்டும் மீண்டும் குருசேத்திரத்தில் நிற்கிறோம் என்ற வரிகளில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தது.

இறுதியாக ஒரே ஒரு அழுத்தம் மனதில் இருந்தது. இந்த ஹ்யானாவின் வாழ்க்கை அவளின் அடுத்த தலைமுறையான மகன் விசுவிடம் பகிரப்படவில்லையே என்ற அழுத்தம் அது. வரலாற்று நிஜங்கள் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கு பகிரப்பட வேண்டும். இறுதியில் அதுவும் தணிந்தது. தங்கள் வீட்டிற்கு வந்த தன் காதலியாக மாறிய சவித்தா, உண்மையில் சபீகா பானு என்பதை கண்டறிந்து கத்தி முழங்கியவன் தன் அம்மாவான அனிதா  ஹ்யானா என்ற யூதப் பெண் என்பதையும், அவள் கடந்து வந்த பாதைகளை தன் தந்தையின் மூலம் கேள்விப்பட்டபோது தன் வாழ்நாளின் கற்பிதங்கள் அனைத்தும் உடைபடுவதை உணர்ந்தான். மகன் விசுவும் டேனியைப் போல் அவளுக்குள் நம்பிக்கை ஒளியை பாய்ச்சினான்.

இப்படியாய் இந்த வரலாற்றுப் புதினம் பல கற்பிதங்களை என்னுள் ஏற்படுத்தி, என்னை வேறொரு நிலைப்பாட்டிற்கு அழைத்து வந்திருந்தது. "நான் நானாகவும், அவர்கள் அவர்களாகவும் இருந்தும் நாமாக ஒன்றாக இருக்க முடியும்" என்றும், ஹிட்லரின் நாட்டிலிருந்து காந்தி, புத்தர் பிறந்த நாட்டிற்கு வந்தேன் என்றும் உதித்த இந்தியாவை பற்றிய அனிதாவின் நம்பிக்கைக்கு பங்கம் வந்துவிடாமல் காக்கும் கடமை எனதாகியும் போயிருந்தது. இந்தியாவைப் பற்றிய பாதுகாப்பான சூழல் என்னை சூழ்ந்து இருந்தாலும் இன்றைய இந்தியாவின் புது புது சட்டங்களும், கொடுங்கோல் ஆட்சியும் ஹ்யானா கூறிய "ஹிட்லர் எங்கே இறந்திருக்கிறான் எல்லா இடங்களிலும் அவன் பிறந்திருக்கிறான்" என்ற வரியும் என் மனதை ஒரு அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. அனிதா சொல்வது போல் வரலாற்றுத் தவறுகள் மறுபடியும் திரும்பி விடாமல் ஏதாவது செய்ய வேண்டும். நெஞ்சத்தின் இருட்டுக்கு ஒளி வேண்டும். எதுவும் செய்யாமல் இருப்பதை விட சிறியதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற அனிதாவின் நிலைப்பாட்டைப் போல் மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்க வேண்டும்.
 
அனிதா தன் அக்கா ரெபேக்காவை யாத்வஷேமில் கண்டு பிடித்ததைப் போல்,  என்னை நான் இந்த "யாத்வஷேமின்" பக்கங்களில் தேடிக் கண்டு உணர்ந்தேன். எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஈடில்லா உழைப்பையும், அழகான கருப்பொருளை எழுத்துக்களால் கடத்திய நேர்த்தியையும், பொருத்தமான இடங்களில் மாற்றி மாற்றி கதைக்களம் விரிந்ததையும், எதுவும் எங்கும் துருத்திக் கொண்டிராமல் கதையோடு இசைந்த தன்மையையும்,  வரலாற்றுத் தரவுகளை வலுவாய் சேர்த்த விதத்தையும் கதையின் ஒவ்வொரு வரியிலும் உணர முடிந்தது. 'கதையை தேடி அலைந்த கதை' பகுதியில் ஆசிரியர் பகிர்ந்த விடயங்களால் அவரின் எழுதார்வமும், எழுத்து நேர்மையும் தீர்க்கமாய் வெளிப்பட்டது. எழுத்தாளரின் உழைப்பாலும், எழுத்தாழத்தாலும் இத்தனை முக்கிய தன்மை வாய்ந்த நாவலாக நம் கைகளிலும், நம் மனங்களிலும் தவழ்கிறது யாத்வஷேம்.  இப்படிப்பட்ட இந்த நாவலை அனைவரும் கடக்க வேண்டியது மிக அவசியம்.

இந்த அழகிய புதினத்தை படைத்த எழுத்தாளர் நேமிசந்த்ரா அவர்களுக்கும், அதை பக்குவமாய் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி அவர்களுக்கும் கூற நன்றியை தாண்டிய வார்த்தை ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறேன். கனகச்சிதமான மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன்.

யாத்வஷேம் புத்தகத்தை மூடி வைத்த பிறகும் என்னுள் மீண்டும் மீண்டும் புரட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது  யாத்வஷேமின் பக்கங்கள். என்னோடு கலந்துவிட்டது "யாத்வஷேம்".

புத்தகம்        -  யாத்வஷேம்.
எழுத்தாளர் -  நேமிசந்த்ரா.
தமிழில்.       -  நல்லதம்பி.
பதிப்பகம்    -  எதிர் வெளியீடு.
பக்கங்கள்.  -  358.
விலை.         -  399/-


- சு. இளவரசி, 
சிவகங்கை

கருத்துரையிடுக

0 கருத்துகள்