தாக்க வருகிறதா மூன்றாம் அலை? தடுப்பு மருந்தாக வாழ்வியல் முறை! அ. குமரேசன்


கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலையை விட இரண்டாவது அலை  ஒரு வெறியாட்டத்தையே நடத்தியிருப்பதை இந்தியா பார்க்கிறது. தங்களது உற்றாரில் ஒருவரை, நேசத்திற்குரியோரில் ஒருவரை இழக்காதவர்கள் என ஒருவர் கூட இல்லை எனலாம். கொரோனா வாரிசுகளாக வந்துள்ள பூஞ்சைகளின் பாதிப்பிலும் பலர் வாடுகிறார்கள். குடும்பப் பொருளாதாரத்தில் விழுந்த பலத்த அடியால் பலர் வதங்குகிறார்கள். நெருக்கமானவர்களை நேரில் சென்று சந்திக்கிற நாளுக்காகப் பலர் ஏங்குகிறார்கள்.


இந்நிலையில் மூன்றாவது அலை பற்றிய எச்சரிக்கை வருகிறது. அது முந்தைய அலைகளை விட மோசமாக இருக்குமா அல்லது மட்டுப்பட்டதாக இருக்குமா என்ற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படி வந்தாலும் அதை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு வழிகாட்டும் பாடங்களை முதல், இரண்டாவது அலைகளே கொடுத்திருப்பதை அறிவியலாளர்களும் சமூக அக்கறையாளர்களும் எடுத்துக்காட்டுகிறார்கள். நாம் அந்தப் பாடங்களைக் கற்கத் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. நாம் என்றால் அது அரசாங்கத்தையும் குறிக்கும், பொதுமக்களையும் குறிக்கும்.


முதலாவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிற பாடம் தடுப்பூசி. தடுப்பூசிகள் அதிகக் காலதாமதமின்றி பெரும்பகுதி மக்களுக்குச் செலுத்தப்படுவது முக்கியம் என்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் குடிமக்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது, இந்தியாவில் 16 சதவீதம் வரையில்தான் எட்டப்பட்டிருக்கிறது. போதிய தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, அதற்குத் தகுதியுள்ள பிற நிறுவனங்களுக்கும் அனுமதியளிப்பது, நாட்டின் பொதுத்துறை சார்ந்த தடுப்பூசித் தயாரிப்பில் அனுபவமுள்ள பொதுத்துறை நிறுவனங்களை இறக்கிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கங்களும் அறிவியல் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. இப்போதாவது அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா?


தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. இன்னொருபுறம், தடுப்பூசியே தேவையில்லை, இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்ப்பதே நிலையான தடுப்பு என்ற கோணத்திலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் இட்டுக்கட்டுவதையும், மாற்றுக் கருத்துகள் வெளிப்படுத்துவதையும் ஒரே மாதிரியாகப் பார்க்கக்கூடாது. ஆயினும், இன்றைய உடனடித் தேவை, நிலைமையின் தீவிரம், மாற்று அணுகுமுறைகள் மக்களைச் சென்றடைவதற்கு உள்ள வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு யோசிக்கிறபோது, தடுப்பூசி வழங்குவதை முறைப்படுத்துக,, அதை நாடுகிறவர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துக என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


நடத்தைத் தடுப்பு மருந்து!


சமூகச் சிந்தனையாளர்கள் ஊசி இல்லாத, மருந்தும் இல்லாத இன்னொரு தடுப்பு சிகிச்சையை வலுவாகப் பரிந்துரைக்கிறார்கள். அதை ‘நடத்தைத் தடுப்பு மருந்து’ என்கிறார்கள். அதிகார அமைப்பின் நடத்தை, சமூகப் பண்பாட்டு நடத்தை, தனி மனித நடத்தை எல்லாமே இந்த சிகிச்சைக்குள் வரும்.


அதிகார அமைப்பைப் பொறுத்தவரையில், எங்கெல்லாம் பரிசோதனைகளில் தொற்று உறுதியாவது, உலக சுகாதார நிறுவனம் அபாய மட்டம் என்று எச்சரிக்கிற 5 சதவீத அளவைத் தொடுகிறதோ அங்கெல்லாம் பொதுமுடக்கத்தைச் செயல்படுத்த வேண்டும். சகட்டு மேனிக்கு எல்லா இடங்களிலும் முடக்க வேண்டியதில்லை, அதே போல் முன்யோசனையின்றி எல்லா இடங்களிலும் திறந்துவிட வேண்டியதுமில்லை.


பொதுமுடக்கம் தளர்த்தப்படுகிற இடங்களிலும், எல்லா வகையான அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகளுக்கும் ஒரே வகையான நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. அதுதான் பொதுமக்கள் அந்த நேரத்திற்குள் வேலைகளை முடித்துவிட வேண்டும், வேண்டியவற்றை வாங்கிவிட வேண்டும் என்று தெருக்களிலும் சாலைகளிலும் மொத்தமாகக் குவிவதற்கு இட்டுச் செல்கிறது. கதவைத் திறக்கவும், மூடவும் வேவ்வேறு குறிப்பிட்ட நேரங்களை வரையறுத்து அறிவிக்க வேண்டும். காய்கறிக்கடைகள் காலை 6 மணிக்கு, சில அலுவலகங்கள் 9 மணிக்கு, வேறு நிறுவனங்கள் 10 மணிக்கு, மற்ற பணித்தலங்கள் 11 மணிக்கு என்பதாக, அந்தந்த வட்டார நிலைமைகளுக்கேற்ப முடிவு செய்யலாம்.


நிறுவனங்கள் முடிந்த அளவுக்கு வீட்டிலிருந்தபடியே வேலை என்பதை இப்போதைக்குத் தொடரலாம். எல்லா நிறுவனங்களின் கட்டடங்களும் இயற்கையான வெளிச்சமும் காற்றும் கிடைப்பதற்கான கட்டமைப்புகளோடு இருப்பதாச் சொல்வதற்கில்லை. காற்றோட்டமில்லாத, வெப்பம் குறைந்த மூடிய கூடங்கள் கொரோனா நடமாட்டத்திற்கு வாகபான இடங்கள். ஆகவே, களப்பணிகள் சாராத அலுவல்களை வீட்டிலிருந்தே செய்வதற்குரிய வசதிகளை நிர்வாகங்கள் செய்யலாம். வீட்டிலிருந்தே பணியாற்றுகிறவர்கள் அலுவலகத்தை விடவும் அதிகமான நேரம் உழைக்கிறார்கள் என்கிற பிரச்சினை இருக்கிறது, அது தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.


சமூக நடத்தையைப் பொறுத்தவரையில், முதலில், சாலைகளின் தடுப்பு வேலிகள் நகர்த்தப்படுகிற ஒலி கேட்டவுடனேயே தங்களது வண்டிகளிலோ கால்நடையாகவோ திமுதிமுவென்று திரள்வதைத் தவிர்க்க வேண்டும். பொது நோக்கங்களுக்கான போராட்டங்களுக்கு இப்படித் திரண்டுவந்தால் எப்படி இருக்கும்! எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உறுதியாகிவிடுமே!


கும்பலுக்குத் தடுப்பு


பொருள்களை வாங்குவதற்காக அல்லது அவரவர் பணித்தல வினைகளுக்குப் போவதை மட்டுமல்ல, அவரவர் வழிபாட்டுத்தல விழாக்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அது மக்களுக்கும் நல்லது, வழிபடப்படும் கடவுள்களுக்கும் நல்லது. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், உறவினர்களின் இல்லத் திருமணங்கள், காதுகுத்துச் சடங்குகள், ஏன் இறுதிநிகழ்வுகளுக்காகவும் கூட கூட்டமாகச் சென்றாக வேண்டும் என்ற மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். பலர் இத்தகைய நிகழ்வுகளுக்குப் போகாவிட்டால் தப்பாக நினைப்பார்களே என்பதற்காகவே போகிறார்கள். தங்கள் வீட்டு நிகழ்வுக்கு எல்லோரும் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்டவர்களும் எதிர்பார்க்கக்கூடாது.


முகக்கவசம் முக்கியமானதொரு கேடயம்தான். அது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிற, பொருத்தமான கவசமாக இருக்க வேண்டும். விலை குறைவான முகக்கவசங்கள், சாலைகளில் கண்காணிக்கிற காவலர்கள் விசாரிப்பதை வேண்டுமானால் தடுக்க உதவலாம், கிருமி தொற்றுவதைத் தடுக்க உதவாது. இங்கே அரசுகள் தலையிட்டு, குடும்ப அட்டை உள்ளோருக்கெல்லாம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மருத்துவ முகக்கவசங்களை வழங்கினால் என்ன? பண உதவி, இலவசமாக மளிகைப் பொருட்கள் போல இதையும் வழங்கலாம். வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டிலிருக்கிற நேரங்களிலும், யாரேனும் வரும்போது அல்லது வாசலில் யாருடனாவது பேச வேண்டியிருக்கிறபோது முகக்கவசம் அணிவது ஒரு பழக்கமாகவே இப்போதைக்குத் தொடரலாம்.


“சோசியல் டிஸ்டன்சிங்” என்ற பதத்தை சமூக இடைவெளி என்று மொழிபெயர்த்திருக்கிறோம். சமூகத்தில் புழங்குகிறபோது இடைவெளி விட்டு நடமாடுதல் என்பதே இதன் பொருள். இங்கேதான் அந்தச் சாதியைத் தொடாதே, இந்தச் சாதியை விடாதே என்றெல்லாம் சமூக இடைவெளி இருக்கிறதே! தேவைப்படுவது தனி மனித இடைவெளிதான் – குறைந்தது இரண்டு மீட்டர்.


தூய்மைப் பராமரிப்பு முக்கியமானதொரு கடமை. தூய்மைப் பணியாளர்களின் கடமை மட்டுமல்ல, குடிமக்கள் ஒவ்வொருவரின் பொறுப்புமாகும். கைகளை, உடலைத் தூய்மையாக வைத்திருத்தல், வெளியே சென்று வந்தால் கிருமிநீக்கித் தூய்மைத் திரவம் பயன்படுத்துதல், நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புகையில் ஆடைகளைக் களைந்து உரிய கூடையில் போட்டுவிட்டு, ஒரு குளியல் எடுத்துக்கொள்ளுதல்… இப்படியாக அந்தப் பொறுப்பை நிறைவேற்றலாம்.


ஓர் ஊரின் வாழ்வியல்


தூய்மைப் பராமரிப்பை இத்தகைய சமூகப் பண்பாடாகவே வளர்ப்பதன் சிறப்பான வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு ஊரையே சுட்டிக்காட்டுகிறார் இந்த நடத்தைத் தடுப்பு மருந்து பற்றி எழுதியுள்ள பத்திரிகையாளர் பிரகாஷ் கே. தத்தா (இந்தியா டுடே). ஜார்க்கண்ட் மாநிலத்தின் தானா பகத் என்ற ஊரைப் பற்றிச் சொல்கிறார். அந்த மாநிலத்தில் மற்ற பகுதிகளில் கொரோனா நர்த்தனமாடிக்கொண்டிருக்க, ஓரான் என்ற பழங்குடி மக்கள் வாழ்கிற அந்த ஊரில் இது வரையில் ஒருவரைக் கூட அது தொற்றியதில்லை. அதற்குக் காரணம், அவர்களுடைய வாழ்வியல் முறைதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வீட்டையும் தெருவையும் தூய்மையாக வைத்திருப்பது, தேவையற்ற கூட்டத்தைத் தவிர்ப்பது, கண்டிப்பான உணவுப் பழக்கத்தைத் தொடர்வது எனக் கறாராகக் கடைப்பிடிக்கிறார்கள். இயற்கையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். மரங்கள் வெட்டப்படுவதை அனுமதிப்பதில்லை. வெளியூர் செல்ல நேரிட்டால், வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லும் உணவைத்தான் உண்பார்கள் அல்லது தானியங்களை எடுத்துச் சென்று தாங்களே சமைத்து உண்பார்கள், ஒருபோதும் அங்கே கிடைப்பதை வாங்கிச் சாப்பிட மாட்டார்கள்.


தானா பகத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. வெள்ளையர் ஆக்கிரமிப்பை எதிர்த்து, பழங்குடி மக்களையும் அவர்களது காடுகளையும் காப்பதற்குப் போராடியவர் ஓரான் இனத்து இளம் வீரர் தானா பகத். ஆக்கிரமிப்பாளர்கள் அவரை சூழ்ச்சியால்தான் கொல்ல முடிந்தது. அன்று வெள்ளையர் ஆதிக்கத்தைத் தடுக்கப் போராடியதன் தொடர்ச்சியாகத்தான் இன்று கொரோனா ஆதிக்கத்தைத் தடுப்பதில் அந்த மக்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். வாழ்வியல் முறைதான் தங்கள் மருத்துவ முறை என்பார்கள் அக்கு சிகிச்சையாளர்கள். இந்தப் பழங்குடி மக்கள் அதைத் தங்கள் மரபாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.


இப்படியான நடத்தைத் தடுப்பு மருந்துகள் இப்போதைய தேவை. கொரோனா ஓய்ந்து போய் மனிதர்களுக்கு விடுதலையளித்துப் பின்வாங்கிய பிறகு இன்னொரு நடத்தையைக் கொண்டுவர வேண்டும். அதுதான் அறிவியல் மனப்பான்மை என்ற நடத்தை. குறிப்பிட்ட மருத்துவம்தான் அறிவியல்பூர்வமானது, மற்றவை போலியானவை என்று சுண்டுவிரலால் ஒதுக்குகிற மனப்போக்கிலிருந்து விடுதலை பெறுவதோடு இந்த நடத்தை இணைய வேண்டும். ஒரு சாரார் எதையும் ஆய்வுகளுக்கு உட்படுத்த மறுப்பது மட்டுமல்ல, இன்னொரு சாரார் எதையும் விவாதிக்க மறுப்பதும், தமது முடிவே இறுதியானது என்று நின்றுபோவதும் கூட அறிவியலுக்கு எதிரானதுதான். அறிவியலைப் போலவே மருத்துவமும் மக்களுக்கானது என்ற உன்னதக் கோட்பாட்டை உள்ளத்தில் ஏந்திக்கொண்டு, அனைத்து முறைகளிலும் இருக்கிற அறிவியல் கூறுகளை எடுத்துக்கொள்வது, விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்துவது, அறிவியல்பூர்வமானதென நிறுவுவதற்கான புதிய ஆய்வு முறைகளை வகுப்பது, தேவைப்பட்டால் “பலனில்லை” என்றுகூட நிறுவுவது என்றெல்லாம் இந்த நடத்தை மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். மருத்துவ முறைகளுக்காக அல்ல, மனிதகுலத்திற்காக. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்