கடைசியாக களமிறங்கி முதல் தங்கத்தைப் பெற்ற நீரஜ் சோப்ரா

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா.

இந்தியாவின் சார்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட 124 பேரில் கடைசி நாளான நேற்று கடைசி விளையாட்டு வீரராக களமிறங்கி முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த இராணுவ வீரர் நீரஜ் சோப்ரா. 


யார் இந்த நீரவ் சோப்ரா?

நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலம், பானிபட்டைச் சேர்ந்த விவசாயி மகன். கல்லூரிப் படிப்பை சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் முடித்தார். இப்போது இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கம் வென்றிருக்கிறார். அதிலும் இந்தியாவிற்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார். 

இதற்கு முன்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்ற பெருமைக்குரியவர். 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் 37 வது பதக்கம். 8 வது தங்கம்.தனித்திறன் போட்டியில் 2வது தங்கம். இதற்கு முன் அபினவ் பிந்திரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2008ல் தங்கம் வென்று அசத்தினார். 

சிறுவயதில் உடல் பருமன் காரணமாக விளையாட்டுக் களத்திற்கு நகர்ந்தவர், பின்னர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஈட்டி எறிதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாய்ப்புகள்

ஈட்டி எறிதலில் முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்திலும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திலும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரத்திலும் ஈட்டியை எறிந்தார். நான்காவது வாய்ப்பு தோல்வியில் முடிந்தது. இதில் இரண்டாவது வாய்ப்பைக் கணக்கில் கொண்டு நீரஜ் சோப்ராவுக்குத் தங்கம் அறிவிக்கப்பட்டது. 

தனத் வெற்றியை முன்னால் விளையாட்டு வீரர் மறைந்த மில்கா சிங் அவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. 

குவியும் பரிசுத் தொகை

ஒலிம்பிக்கில் இந்த நூற்றாண்டின் முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. 

பிசிசிஐ 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 
மணிப்பூர் அமைச்சரவை சார்பில் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பைரன் சிங் அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநில அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ் சோப்ராவின் வெற்றி எண்ணான 87.58 என்ற எண் பொறித்த ஸ்பெஷன் ஜெர்ஸியை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இதுவரைக்கும் 11 கோடி ரூபாய் வரைக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. 

இதுமட்டுமின்றி ஆனந்த் மஹிந்திரா XUV7000 அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. 

130 கோடி மக்களின் வாழ்த்து

இந்தியா முழுதும் இருந்து நீரவ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நீரஜுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து மூன்று நிமிடங்களுக்கும் மேலாக பேசியிருக்கிறார். 

விளையாட்டுத் துறையைச் சார்ந்த ஆளுமைகளான பிடி உஷா, சச்சின் உள்ளிட்ட பலரிடமிருந்தும், இராணுவத் தளபதி உள்ள வீரர்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன. 

13 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் அரங்கில் ஒலித்த இந்திய தேசிய கீதம் இந்தியர்களை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. 

ஒரு வெற்றி என்ன செய்யும்? ஒரு நாளில், ஒரு நிமிடத்தில், ஒரு நொடியில் வாழ்வை மாற்றிவிடும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. 

அந்த வெற்றிக்குப் பின்னிருப்பது உழைப்பும், விடா முயற்சியும், நம்பிக்கையுமே. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்