இனிய நடையில் கட்டுரை எழுதிட எளிய வழிகள் - 2

அ. குமரேசன்


கட்டுரை வழியாகக் கருத்துகளை வெளிப்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை, அறிமுகப் பதிவுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காட்டுகிறது. அந்த ஆர்வத்திற்கு முதலில் பாராட்டு.முந்தைய பதிவில் ஓர் எடுத்துக்காட்டாக, வாக்கியங்களில் தேவையின்றி “என்பது” என்ற சொல் பயன்படுத்தப்படுவது பற்றிப் பார்த்தோமா? அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது மிகப் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. முன்னணிச் சிந்தனையாளர்களுடைய கட்டுரைகளில் “என்பது’, “என்பது” என வந்துகொண்டே இருக்கிறது. ஆகவே அதைப் பற்றி இப்போதும் ஒரு முறை பார்ப்போம்.


முன்னணி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் படிப்பதற்குச் சுவையாகவும் புத்துணர்வு தருவதாகவும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் இந்தச் சொல் எங்கே, எப்போது வந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறார்களோ அப்போதுதான் பயன்படுத்துவார்கள். எந்தச் சொல்லையுமே அப்படித்தான் கையாளுவார்கள். இதற்கு இங்கே சான்றுகளையோ, மேற்கோள்களையோ இணைக்கத் தேவையில்லை. அத்தகைய படைப்புகளைப் படித்துப் பார்த்தாலே பு/ரிந்துவிடும்.


அண்மையில் எமக்கு வந்த ஒரு கட்டுரையிலிருந்து சில பத்திகளை (எழுதியவரின் ஒப்புதலோடு) இங்கே பகிர்கிறேன்:


“எளிமையான வாழ்க்கையை வாழ்வது என்பது, அதை அர்த்தமுள்ள வாழ்வியலாக மாற்றுவது என்பதோடு இணைந்ததாகும். சக மனிதர்களோடு உண்மையாக இருப்பது என்பது இதன் மற்றொரு கூறாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சார  உலகில், பெரும்பாலான பொருட்கள்  வாழ்க்கைக்குத் தேவைப்படுவதாக உணரப்படும் காலக்கட்டத்தில் எளிமை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே கேள்வியாக உள்ளது. முதலில் எளிமை என்பதைப் பொருள்களில் நாட்டமே இல்லாத துறவறம் என்பதாகப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. எளிமை என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மட்டத்தில் இருக்கும். 


பளபளவென்று கண்ணைப் பறிக்கும் பலவண்ண உடைகளை அணிவது என்பதைத் தவிர்ப்பது ஒரு வகையான எளிமையே. ஆனால், சில சமூகங்கள் வாழும் புவியியல் சூழல் சார்ந்தும் அவர்களது உடை வண்ணங்கள் அமையும். பாலைவனப் பகுதிகளில் வாழும் மக்கள் பளபள உடைகளை விரும்புவது என்பது அத்தகைய பின்னணியில்தான். எளிய பருத்தி உடை அணியலாம். ஆனால், பல நேரங்களில் கதராடை உள்ளிட்ட பருத்தி ஆடைகள் என்பதுதான் எளிமையான விலை அல்லாமல் மிக அதிக விலையில் விற்கப்படுவதாக இருக்கிறது. செயற்கையிழை உடை என்பது விலை குறைவாகவும், நீண்டகாலம் உழைப்பதாகவும் இருக்கிறது. ஆகவே எது எளிமை என்பது இத்தகைய புறச்சூழல் எவ்வாறு அமைகிறது என்பதைச் சார்ந்ததாகவும் அமைகிறது. 


இதேபோல் உணவுப்பழக்கம் என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். சுவையான உணவா, சத்தான உணவா என்பதான போராட்டம் எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. எளிய உணவு என்பதில் ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவு, வீணாக்கப்படாத உணவு, அதிகச் செலவு பிடிக்காத உணவு என்பதாக விவரித்துக்கொண்டே போகலாம். குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படும் எளிய உணவுப் பழக்கம் என்பதை, வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் கையாளலாமா என்பது முக்கியமான கேள்வியாக முன்னுக்கு வருகிறது.”


மேற்கண்ட மூன்று பத்திகளில், ‘என்பது’ எத்தனை இடங்களில் வருகிறது, எந்த இடங்களில் வருகிறது என்று கவனியுங்கள். கட்டுரையாளர் சொல்லவருகிற செய்தியை நோக்கி வாசகர்களை ஈர்ப்பதற்கு மாறாக, அத்தனை என்பதுகளைப் படிக்கிறபோது ஒரு அயர்வு ஏற்படும்.  என்பது என்ற சொல் திரும்பத்திரும்ப வருவதால்தான் அந்த அயர்வு ஏற்படுகிறது என்பதை வாசகர்கள் அறியாமலிருக்கக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட பத்திகளைப் படிப்பதில் ஏற்படுகிற அயர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகிறது.


அந்தப் பத்திகளை இவ்வாறு திருத்தலாம் என்று சொன்னபோது கட்டுரையாளர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். திருத்தப்பட்ட அந்தப் பத்திகள் இதோ:


“எளிமையான வாழ்க்கையை வாழ்வது, அதை அர்த்தமுள்ள வாழ்வியலாக மாற்றுவதோடு இணைந்ததாகும். சக மனிதர்களோடு உண்மையாக இருப்பது இதன் மற்றொரு கூறாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சார  உலகில், பெரும்பாலான பொருட்கள்  வாழ்க்கைக்குத் தேவைப்படுவதாக உணரப்படும் காலக்கட்டத்தில் எளிமையை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே கேள்வியாக உள்ளது. முதலில் எளிமை என்றால் பொருள்களில் நாட்டமே இல்லாத துறவறம் எனப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அது  நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மட்டத்தில் இருக்கும். 


பளபளவென்று கண்ணைப் பறிக்கும் பலவண்ண உடைகள் அணிவதைத் தவிர்ப்பது ஒரு வகையான எளிமையே. ஆனால், சில சமூகங்கள் வாழும் புவியியல் சூழல் சார்ந்தும் அவர்களது உடை வண்ணங்கள் அமையும். பாலைவனப் பகுதிகளில் வாழும் மக்கள் பளபள உடைகளை விரும்புவது அத்தகைய பின்னணியில்தான். எளிய பருத்தி உடை அணியலாம். ஆனால், பல நேரங்களில் கதராடை உள்ளிட்ட பருத்தி ஆடைகள்தான் எளிமையான விலை அல்லாமல் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன. செயற்கையிழை உடை  விலை குறைவாகவும், நீண்டகாலம் உழைப்பதாகவும் இருக்கிறது. ஆகவே எது எளிமை என்றால், அது இத்தகைய புறச்சூழல் அமைவதைச் சார்ந்ததாகவும் அமைகிறது. 


இதேபோல் உணவுப் பழக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். சுவையான உணவா, சத்தான உணவா என்ற போராட்டம் எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. எளிய உணவை ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவு, வீணாக்கப்படாத உணவு, அதிகச் செலவு பிடிக்காத உணவு என்றெல்லாம் விவரித்துக்கொண்டே போகலாம். குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படும் எளிய உணவுப் பழக்கத்தை, வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் கையாளலாமா என்பது முக்கியமான கேள்வியாக முன்னுக்கு வருகிறது.”


‘என்பது’ என்ற சொல்லை எப்போது கையாளலாம்? முதலிலேயே சொன்னது போல், கட்டுரையாக்கத்தில் முன்னணியில் உள்ளவர்களின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது அந்த வாசிப்பிலிருந்தே இதற்கான பயிற்சி இயல்பாகக் கிடைத்துவிடும். உடனடிப் பாடக் குறிப்பு போல வேண்டுமெனில், மேலே திருத்தப்பட்டுள்ள மூன்று பத்திகளை மறுபடி படியுங்கள். இந்தச் சொல் வருகிற இடங்களைக் கவனித்து இது பற்றிய ஒரு எளிய புரிதலுக்கு வர முடியும்.


(நீச்சல் தொடரும்)


கருத்துரையிடுக

0 கருத்துகள்