இனிய நடையில் கட்டுரை எழுத எளிய வழிகள் -3

கேள்விகளும் கேள்விக்குறிகளும்

அ. குமரேசன்


பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா? மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா? பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா? புதிய பாதையை எப்படிப் போடுவது? என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது உலகத்தில் முதல் பாதை எங்கே? யாரால்? எதற்காகப் போடப்பட்டிருக்கும்? என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது.

அண்மையில் வந்த ஒரு புத்தக அறிமுகக் கட்டுரையின் முதல் பத்தி இது. பாதை என்ற சொல் தொடர்பாக ஒரு தத்துவத் தேடலின் சுவையான அனுபவத்திற்கு இந்தப் பத்தி நம்மைத் தயார்ப்படுத்துகிறது. அத்துடன், “உலகத்தில் முதல் பாதை எங்கே? யாரால்? எதற்காகப் போடப்பட்டிருக்கும்? என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது,” என்ற வரிகள் இனிய சொல்நயத்தோடும் அமைந்திருப்பதையும் சுவைக்க முடிகிறது.

பிடித்தமான கடலை மிட்டாய் சாப்பிடுகிறபோது, அதில் மணல் துகள்களோ, சின்னஞ்சிறு கற்களோ இருந்து பல்லில் அரைபடுமானால் அந்தச் சுகமான அனுபவத்தில் இடையூறு ஏற்படும் அல்லவா? அப்படிப்பட்ட இடையூறு மேற்படிப் பத்தியைப் படிக்கிறபோது ஏற்பட்டது. கடலை மிட்டாய் மணலாக இரண்டு முக்கியமான இடையூறுகள் அந்தப் பத்தியில் இருக்கின்றன.

வாக்கிய அமைப்பில் இடம்பெறுகிற முற்றுப்புள்ளி (.), காற்புள்ளி (,), அரைப்புள்ளி (;), முக்காற்புள்ளி (:), கேள்விக்குறி (?), உணர்ச்சிக்குறி (!), மேற்கோள்குறி (“) உள்ளிட்ட நிறுத்தற்குறிகள் முக்கியமானவையாகும். அவை உரிய இடத்தில் வர வேண்டும், தேவையின்றி வரக்கூடாது. மேற்படி பத்தியில் சின்னஞ்சிறு கற்களாகச் சுவையைத் தடுப்பவை, அதில் உள்ள கேள்விக்குறிகள். கேள்விக்குறி வருவது முற்றுப்புள்ளி போன்றதுதான். அதாவது, வாக்கியத்தில் ஒரு முற்றுப்புள்ளி வருகிறதென்றால் அந்த இடத்தில் அந்த வாக்கியம் முடிந்துவிடும். முற்றுப்புள்ளிக்கு அப்புறம் வருவது அடுத்த வாக்கியம்தான். அதே போலத்தான் கேள்விக்குறி, உணர்ச்சிக்குறி ஆகிய குறிகளும் வாக்கியத்தை முடித்துவிடுகின்றன. கேள்விக்குறிக்குப் பிறகு அல்லது உணர்ச்சிக்குறிக்குப் பிறகு வருவது அடுத்த வாக்கியம்தான்.

முதல் பத்தியில் “பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா? மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா? பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா? புதிய பாதையை எப்படிப் போடுவது? என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன்” என இருப்பதை ஒரே வாக்கியமாக எடுத்துக்கொள்வதா, அல்லது “பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா?“, “மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப் படுக்கப்படுகிறதா?”, “பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா?”, “புதிய பாதையை எப்படிப் போடுவது?” “என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன்” என ஐந்து தனித்தனி வாக்கியங்களாக எடுத்துக்கொள்வதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், “….. என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார்,” என்று இருப்பதால் அது ஒரே வாக்கியமாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என ஊகிக்க முடிகிறது. அதற்குக் காரணம் கடைசிக் கேள்விக்குறிக்குப் பிறகு வருகிற “என்ற” என்கிற சொல்தான்.

அதே போல், “அதைப் படிக்கிறபோது உலகத்தில் முதல் பாதை எங்கே? யாரால்? எதற்காகப் போடப்பட்டிருக்கும்? என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது,” என வருகிற இடத்திலும் “அதைப் படிக்கிறபோது” என முற்றுப்பெறாத சொற்கள் இருப்பதால், அதே வாக்கியம் தொடர்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. போதாதற்கு இதிலேயும் “என்ற” வந்து சேர்ந்திருக்கிறது.

ஒரே வாக்கியம்தான் என்று தெளிவாக உணரவைக்க வேண்டுமானால், கட்டுரையை எழுதியவர் என்ன செய்திருக்க வேண்டும்? நடுவில் கேள்விக்குறிகள் போடாமல் எழுதியிருக்க வேண்டும். கேள்வி வடிவத்தில் இருப்பதால் கேள்விக்குறியைப் போட வேண்டியதில்லை. ஒவ்வொரு கேள்விக்குறியும் வருகிற இடத்தில் காற்புள்ளி இட்டிருக்க வேண்டும். கேள்வி வடிவத்தில் இருப்பதால் கேள்விக்குறி இட வேண்டியதில்லை. இதோ திருத்தப்பட்ட வாக்கியங்களோடு அந்தப் பத்தி:

பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா, மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா, பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா, புதிய பாதையை எப்படிப் போடுவது என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது உலகத்தில் முதல் பாதை எங்கே, யாரால், எதற்காகப் போடப்பட்டிருக்கும் என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது.

சரி, கேள்விக்குறிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று எழுதுகிறவர் கருதுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது இந்தப் பத்தி இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும்:

பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா? மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா? பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா? புதிய பாதையை எப்படிப் போடுவது? இந்தக் கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது இப்படியொரு சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது: உலகத்தில் முதல் பாதை எங்கே போடப்பட்டிருக்கும்? யாரால்? எதற்காக?

இப்போது பற்களில் கல் அரைபடாமல் கடலைமிட்டாயைச் சாப்பிடலாம். 

இருங்க, இருங்க, இப்பவும் கூட கொஞ்சம் மணல்துகள் இருக்கு. அது என்னன்னு கேட்கிறீங்களா? யோசிங்கப்பா. அடுத்து சந்திக்கிறப்ப, யோசிச்சது சரிதானான்னு பார்க்கலாம்.

(நிறுத்தற்குறிகள் தொடரும்)கருத்துரையிடுக

0 கருத்துகள்