கட்டுரைக் கடலில் நீந்தலாம் வாருங்கள் - 1

அ. குமரேசன், பத்திரிகையாளர்

கட்டுரை இலக்கியம் படைப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? கட்டுரையாக்கத்தில் சிறந்து விளங்கும் பல எழுத்தாளர்களின் வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று – கட்டுரைக்குத் தேர்ந்தெடுக்கும் கருப்பொருள். இன்னொன்று – இடையூறின்றியும் சுவையாகவும் வாசிக்கவைக்கும் எழுத்து நடை.

முதலாவதாகிய கருப்பொருள் அவரவர் கொண்டுள்ள சித்தாந்தம், கொள்கை, சமூகப் பார்வை, அரசியல் அக்கறை ஆகியவை சார்ந்தது. உதாரணமாக, சாதியமும் தீண்டாமையும் ஒரு சமுதாயக் குற்றம் என்ற பார்வை ஒருவருக்கு இருக்கலாம், அது பற்றிய ஆவேச உணர்வோடு அவர் எழுதலாம். சாதிப்பாகுபாட்டிலும் குல உயர்ச்சி-தாழ்ச்சியிலும் தவறு இல்லை என்ற பார்வை இன்னொருவருக்கு இருக்கலாம். அதைப்பற்றிய உறுத்தல் உணர்வு இல்லாமல் அவர் எழுதலாம்.


இரண்டாவதாகிய எழுத்துநடைதான் எந்தக் கண்ணோட்டத்தில் எழுதினாலும் அதைப் படிக்க வைக்கும். கவிதையும் கதையும் போலவே கட்டுரையும் நிறையப் படிக்கப்படிக்கத்தான் சொந்தப் படைப்பாக எழுதுகிற நேர்த்தி வசப்படும்.
கட்டுரை எழுதுவது என்பதைப் பொறுத்தவரையில், சில எளிய வழிகளை, அனுபவ அடிப்படையில், காட்டலாம் என்று கருதுகிறேன். இவ்வாறு வழிகாட்டுவது என்பது இதில் நான் ஒரு வல்லுநர் என்று நினைத்துக்கொண்டு எடுத்த முடிவல்ல. மாறாக, பல கட்டுரைகளைப் படிக்கிற அனுபவத்திலிருந்தேயாகும். அந்த அனுபவம் என்பது ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தும், பத்திரிகையில் வெளியிடக் கேட்டுக்கொண்டு வருகிற பல கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்கிற பணியிலிருந்தும் கிடைத்ததாகும். அருமையான உள்ளடக்கங்கள் இருந்தாலும், எளிமையான சில அடிப்படைகளைக் கூட அறியாமல், அறிந்துகொள்ள முயலாமல் எழுதப்படுவதைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அதையெல்லாம் சரிப்படுத்துவது என்பதிலேயே வெகுநேரம் விழுங்கப்படுகிறது.

ஆகவே இதைப் பகிர்ந்துகொள்வது ஒரு கடமையாகக் கருதுகிறேன். ஆற்றல் மிகு கட்டுரையாளர்கள் நமக்கு நிறையப் பேர் தேவைப்படுகிறார்களே!


எடுத்த எடுப்பில், எடுத்துக்காட்டாக ஒன்று: மேலே ஐந்தாவது பத்தியில் பார்த்தீர்களானால், “என்பது” என்ற சொல் நான்கு இடங்களில் வருகிறது. எதற்கெடுத்தாலும் இப்படி “என்பது” என்று சொல்ல வேண்டியதில்லை. “கட்டுரை எழுதுவது என்பதைப் பொறுத்தவரையில்….” என்று எழுதாமல், “கட்டுரை எழுதுவதைப் பொறுத்தவரையில்…” என்று எழுதுகிறபோது சொல் மிஞ்சும், வாக்கியத்தில் சுவை மிஞ்சும். அந்தப் பத்தியில் உள்ள மற்ற என்பதுகளை எப்படிக் கழற்றிவிடலாம் என்று யோசித்து எழுதிப்பாருங்கள். தேவையான இடத்தில் மட்டும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி, மற்ற இடங்களில் அதைத் தவிர்ப்பதில் உள்ள அழகு புரிபடும்.


அடுத்த சந்திப்பில், இவ்வாறு தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்ற இன்னொரு அனுபவப் பகிர்வு. அது என்ன என்பது…


(தொடரும்)


கருத்துரையிடுக

0 கருத்துகள்