இனிய நடையில் கட்டுரை எழுத எளிய வழிகள் - 4

மேற்கோள் குறிகள் இல்லையென்றால் உங்கள் சரக்காகிவிடும்!

 அ. குமரேசன்


முற்றுப் பெறாத ஒரு வாக்கியத்திற்கு நடுவில் கேள்விக்குறிகள் இடுவது எப்படி அந்த வாக்கியத்தை இரண்டு மூன்றாக உடைத்துவிடுகிறது என்று பார்த்தோமா? அதைப் பாராட்டி ஒரு நண்பர் இவ்வாறு எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்:


“எனக்கு இந்தச் சந்தேகம் நீண்டகாலமாக இருந்துவந்தது. ஒரே வாக்கியத்திற்கு உள்ளேயே ஒரு கேள்வி வருகிறபோது கேள்விக்குறி இடலாமா, கூடாதா, இல்லையேல் அது ஒரு கேள்வி என்பதை எப்படி உணர்த்துவது என்ற எனது குழப்பம் தீர்ந்தது? நன்றி.”


அவருக்கு நான் அனுப்பிய பதிலில், இந்தக் குறுஞ்செய்தி வாக்கியத்திலேயே கூட, கேள்விக்குறியைப் பயன்படுத்துவதில் குழப்பம் தெரிவதைச் சுட்டிக்காட்டினேன். இதைப் படிக்கிற உங்களுக்கு அது என்னவென்று புரிகிறது அல்லவா? ஆம், நீங்கள் கண்டுபிடித்தது சரிதான். “ஒரே வாக்கியத்திற்கு உள்ளேயே ஒரு கேள்வி வருகிறபோது கேள்விக்குறி இடலாமா, கூடாதா, இல்லையேல் அது ஒரு கேள்வி என்பதை எப்படி உணர்த்துவது என்ற எனது குழப்பம் தீர்ந்தது?” –இப்படி அவர் கூறியிருக்கிறார். இதில் வாக்கியத்தின் முடிவில் எதற்காக அந்தக் கேள்விக்குறி? அந்த இடத்தில் கேள்விக்குறி வருகிறபோது, தனது குழப்பம் தீர்ந்தது என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில் என்ற எண்ணமே படிக்கிறவர்களுக்கு ஏற்படும். ஆகவே அந்தக் கேள்விக்குறி இல்லாமல் முற்றுப்புள்ளியிட்டு அந்த வாக்கியத்தை முடித்திருக்க வேண்டும்.


முந்தைய சந்திப்பில் விடைபெறும்போது, அந்த முதல் பத்தியில் “இப்பவும் கூட கொஞ்சம் மணல் துகள் இருக்கு,” என்று சொல்லி, அது என்னவென்று யோகிக்கக் கேட்டிருந்தேன். அப்போதே விடையைச் சொல்லியிருக்கலாம்தான் என்றாலும், கட்டுரையின் நீளம் கருதியும், நாமாக யோசித்துக் கண்டுபிடிக்கிற மகிழ்ச்சியை அனுபவிக்கலாமே என்ற நோக்கத்துடனும் அவ்வாறு முடித்திருந்தேன்.


அந்த முதல் பத்தியை மறுபடி பார்ப்போம்:


பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா? மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா? பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா? புதிய பாதையை எப்படிப் போடுவது? என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது உலகத்தில் முதல் பாதை எங்கே? யாரால்? எதற்காகப் போடப்பட்டிருக்கும்? என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது.


இதில் தேவையின்றி வருகிற கேள்விக்குறிகளை நீக்கி எவ்வாறு எழுதலாம் என்றும், கேள்விக்குறிகள் இருக்க வேண்டுமென்றால் எவ்வாறு எழுதலாம் என்றும் பார்த்தோம். கேள்விக்குறி மட்டுமல்லாமல், வாக்கியம் முடிவதற்குள் உணர்ச்சிக்குறி (!) வரலாமா என்பதற்கும் இது பொருந்தும் என விளக்க வேண்டியதில்லை.  திருத்தப்பட்ட இரண்டு கடலை மிட்டாய்களிலும் ஒட்டியிருக்கிற மணல் துகள் எது?


அந்தப் பத்தியில் மேற்கோள் குறிகள் இடம்பெறவில்லை. ஆகவே, புத்தகத் அறிமுகக் கட்டுரையை எழுதியவர், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்துக்காட்டுகிற வாக்கியம் எது, அவருடைய கருத்தை வெளிப்படுத்தும் வாக்கியம் எது என்று புரியவில்லை. அந்த வரிகள் எல்லாமே அவரே எழுதியது போலத் தோன்றுகிறது. மேற்கோள் குறிகளை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இந்தக் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.


“பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா, மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா, பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா, புதிய பாதையை எப்படிப் போடுவது,” என்ற கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது உலகத்தில் முதல் பாதை எங்கே, யாரால், எதற்காகப் போடப்பட்டிருக்கும் என்ற சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது.

கேள்விக்குறிகளைச் சேர்த்து திருத்தப்பட்ட பத்தியில் மேற்கோள் குறிகள் இவ்வாறு வர வேண்டும்:

“பாதையைக் கண்டுபிடித்து மனிதர்கள் நடக்கிறார்களா? மனிதர்கள் நடப்பதால் பாதை கண்டுபிடிக்கப்படுக்கப்படுகிறதா? பழைய பாதையில்தான் செல்ல வேண்டுமா? புதிய பாதையை எப்படிப் போடுவது?” இந்தக் கேள்விகளுடன் தனது முன்னுரையைத் தொடங்குகிறார் செந்தில் குமரன். அதைப் படிக்கிறபோது இப்படியொரு சிந்தனைப் பாதையில் மனம் நடைபோடுகிறது: உலகத்தில் முதல் பாதை எங்கே போடப்பட்டிருக்கும்? யாரால்? எதற்காக?


இரட்டை மேற்கோள் குறி தொடங்குகிற இடத்திற்கும், முடிகிற இடத்திற்கும் இடையில் உள்ள வரிகள் அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்துத்தரப்பட்டுள்ள என்றும், மேற்கோள் குறிகள் இல்லாத வரிகள் கட்டுரையாளருடைய சொந்த உணர்வின் வெளிப்பாடு என்றும் தெளிவாகப் பிடிபடுகிறது. கேள்விக்குறிகள் தவிர்க்கப்பட்ட முதல் திருத்தத்தில், “……புதிய பாதையை எப்படிப் போடுவது,” என ஒரு காற்புள்ளி போட்ட பிறகுதான் முடிப்பு மேற்கோள் குறி இடப்பட்டுள்ளது. அதையும் கவனித்தீர்கள்தானே?


மேற்கோள் குறிகளிலும் ஒற்றை மேற்கோள் குறி (‘......’), இரட்டை மேற்கோள் குறி (“......”’) ஆகிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதைப் பற்றிப் பேச அடுத்த சந்திப்புக்கு வாருங்கள்.


(குறி சொல்வது தொடரும்) கருத்துரையிடுக

0 கருத்துகள்