இனிய நடையில் கட்டுரை எழுத எளிய வழிகள் – 5


அ. குமரேசன்

ஒற்றையும் இரட்டையுமாய் மேற்கோள் குறிகள்

இலக்கிய நதிக்கரை அமைப்பாளர்களிடம் நான் நாளைக்கு நான் நேராக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் மற்ற விசயங்களைப் பேசிக்கொள்வோம் என்றுதான் கவிஞர் சொன்னார் என்று தெரிவித்தேன்.இந்த வாக்கிய அமைப்பு எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள். குறிப்பிட்ட இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சிக்கு நேராக வந்துவிடுவதாகச் சொன்ன கவிஞர் வேறு, அவர் சொன்னதை அமைப்பாளர்களிடம் தெரிவித்தவர் வேறு. ஆனால், நான், வந்துவிடுகிறேன், தெரிவித்தேன் என்று அடுத்தடுத்து வருகிறபோது, எதை யார் சொன்னார் என்ற தெளிவில்லாமல் போய்விடுகிறது.

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கத்தான் மேற்கோள் குறிகளும் நிறுத்தற்குறிகளும் உதவுகின்றன.

இலக்கிய நதிக்கரை அமைப்பாளர்களிடம் நான், “நாளைக்கு நான் நேராக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் மற்ற விசயங்களைப் பேசிக்கொள்வோம் என்றுதான் கவிஞர் சொன்னார்,” என்று தெரிவித்தேன்.

-இப்படி இந்த வாக்கியத்தை எழுதினால் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். நாளைக்கு என்று தொடங்குகிற இடத்தில், தொடக்க இரட்டை மேற்கோள் குறி (“) வருகிறது. …. சொன்னார் என்று முடிகிற இடத்தில் ஒரு காற்புள்ளியும் (,) முடிப்பு இரட்டை மேற்கோள் குறியும் (”) வருகின்றன. சொன்னார் என்பதோடு  வாக்கியம் முற்றுப்பெறவில்லை. ஆகவே அந்த இடத்தில் காற்புள்ளி கண்டிப்பாக வர வேண்டும்.

இதில் ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை மேற்கோள் குறி வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் நம்மோடு பேசுகிறார் என்றால், அவருடைய பேச்சை இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையே கொண்டுவர வேண்டும். அதாவது அவருடைய பேச்சு தொடங்குகிற இடத்தில் தொடக்க இரட்டை மேற்கோள் குறி, முடிகிற இடத்தில் முடிப்பு இரட்டை மேற்கோள் குறி வர வேண்டும்.

இலக்கிய நதிக்கரை என்ற சொற்கள் ஒரு அமைப்பின் பெயரைக் காட்டுகின்றன இல்லையா? அத்தகைய  பெயர்ச்சொற்கள் புதிதாகக் காட்டப்படுகிறபோது அங்கே ஒற்றை மேற்கோள் குறிகள் வருவது உதவியாக இருக்கும். அவ்வாறு திருத்தப்பட்ட வாக்கியத்தை இப்போது காணலாம்:

‘இலக்கிய நதிக்கரை’ அமைப்பாளர்களிடம் நான், “நாளைக்கு நான் நேராக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் மற்ற விசயங்களைப் பேசிக்கொள்வோம் என்றுதான் கவிஞர் சொன்னார்,” என்று தெரிவித்தேன். ‘இலக்கிய நதிக்கரை’ என்ற சொற்களில் முடிப்புக்கான ஒற்றை மேற்கோள் குறி வருகிற இடத்திற்கு முன்பாக காற்புள்ளி இடம்பெறவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.

ஒருவரது பேச்சை மேற்கோள் காட்டுகிறபோது மட்டுமல்லாமல், வேறு புத்தகங்களிலிருந்தோ, கட்டுரைகளிலிருந்தோ சில பத்திகளை எடுத்துக் காட்டுகிறபோதும் இவ்வாறு இரட்டை மேற்கோள் குறிகளைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்து, ஒற்றை மேற்கோள் குறிகளோடு இரண்டு மூன்று சொற்கள் வருகிறபோது காற்புள்ளி இட வேண்டும் அல்லவா? அந்தக் காற்புள்ளியை எங்கே இடுவது? மேற்கோள் புள்ளிக்கு முன்பாகவா, பின்பாகவா? இரட்டை மேற்கோள் குறி முடிகிற இடத்தில் அதற்கு முன்பாகவே காற்புள்ளி வரும். ஒற்றை மேற்கோள் குறிகள் இடப்படும் சொற்களில், முடிப்புக்கான மேற்கோள் குறி இட்ட பிறகுதான் காற்புள்ளி வர வேண்டும். எடுத்துக்காட்டாக-

‘இலக்கிய நதிக்கரை’, ‘கவி மேடை’, ‘படைப்பு வனம்’, ‘தமிழ் மணம்’ ஆகிய அமைப்புகள் சேர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த வாக்கியத்தில் நான் என்ற சொல் உடனுக்குடன் வருகிறபோது ஒரு சிறு தடுமாற்றம் ஏற்படுகிறது அல்லவா? அதைத் தவிர்க்க இப்படி மாற்றி எழுதலாம்:

“நாளைக்கு நான் நேராக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் மற்ற விசயங்களைப் பேசிக்கொள்வோம் என்றுதான் கவிஞர் சொன்னார்,” என்று ‘இலக்கிய நதிக்கரை’ அமைப்பாளர்களிடம் நான் தெரிவித்தேன்.

இதைவிடவும் சிறப்பாக, இரண்டாவதாகவும் ‘நான்’ வருவதைத் தவிர்த்து இப்படி எழுதலாம்: 

“நாளைக்கு நான் நேராக நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறேன். அங்கே நாம் மற்ற விசயங்களைப் பேசிக்கொள்வோம் என்றுதான் கவிஞர் சொன்னார்,” என்று ‘இலக்கிய நதிக்கரை’ அமைப்பாளர்களிடம் தெரிவித்தேன்.

“தெரிவித்தேன்” என்று சொல்வதிலேயே “நான்” உள்ளடங்கிவிடுகிறது அல்லவா?

மேற்கோள் குறிகள் மற்றும் நிறுத்தற்குறிகள் பயன்பாடு பற்றிப் பார்த்தோம். ஒற்றை மேற்கோள் குறி அல்லது இரட்டை மேற்கோள் குறி பற்றியும் பார்த்தோம். இந்த இரண்டு வாக்கியங்களிலும் தவிர்க்கக்கூடிய இரண்டு சொற்கள் இருக்கின்றன. அடுத்த அமர்வில் அந்தச் சொற்களை விசாரணைக்கு உட்படுத்துவோம்.

(விசாரணை தொடரும்)


 கருத்துரையிடுக

0 கருத்துகள்