இனிய நடையில் கட்டுரை எழுத எளிய வழிகள் – 6


கூறியது கூறலைத் தவிர்க்கிறபோது


அ. குமரேசன்


ஒரு கட்டுரையைச் சுவைபட எழுதுவதில் முக்கியமானதொரு நுட்பம், கூறியது கூறலைத் தவிர்ப்பதாகும். அதாவது ஏற்கெனவே எழுதிய சொற்களையோ, வாக்கியங்களையோ கூடியவரையில் மறுமுறை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.


அது புதிய சொற்களும் வாக்கியங்களும் இடம்பெறச் செய்யும். “அவன் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைவது கடினமாகவும் இருந்தது, வீட்டில் அப்படி நுழைவதற்குத் தயக்கமாகவும் இருந்தது,” என்ற வாக்கியம் இதற்கொரு எடுத்துக்காட்டு.


இந்த வாக்கியத்தில் வீடு, பூட்டியிருத்தல், நுழைதல் ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. இதை, எப்படி மாற்றி எழுதலாம்?


“அவன் வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அந்த நிலையில் உள்ளே நுழைவது கடினமாகவும் இருந்தது, தயக்கமாகவும் இருந்தது,” என்று எழுதிப்பாருங்கள். வாக்கியத்தில் ஒரு செறிவும் நேர்த்தியும் இருப்பது புரியவரும். வாசிப்பதற்குச் சுவையாகவும் இருக்கும்.


இதையே “அவன் வீட்டுக்கு வந்தபோது பூட்டியிருந்தது. அந்த நிலையில் உள்ளே நுழைவது கடினமாகவும் இருந்தது, இல்லத்திற்குள் அப்படிச் செல்வதற்குத் தயக்கமாகவும் இருந்தது,” என்றும் எழுதலாம். இல்லம் என்ற புதிய சொல் இணைகிறது.


இப்படியெல்லாம் எழுதும்போது ஏற்படும் மாறுபட்ட வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் வாய்க்கும், வாசகருக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். நம் கட்டுரையை விரும்பிப் படிக்க வைக்கும்.


கட்டுரையைக் கடகடவென்று படிக்கிற சுகத்திற்கு இவ்வாறு கூறியது கூறலைத் தவிர்ப்பது பேருதவியாக இருக்கும்.


சில பத்திகளை எழுதுகிறபோது ஏற்கெனவே சொன்ன சொற்களையோ வரிகளையோ மறுபடி சொல்ல வேண்டிய தேவை ஏற்படும். அப்போது அப்படியே எழுதிக்கொள்ளலாம்.


எங்கே தவிர்க்க வேண்டும், எப்போது மறுபடி அதே சொற்களை எழுதலாம்? கூறியது கூறலைத் தவிர்த்து எழுத முயலுங்கள், உங்களுக்கே இது பிடிபட்டுவிடும்.


(எளிய வழி தொடரும்)கருத்துரையிடுக

0 கருத்துகள்