கட்டுரை எழுதுகையில் பிறமொழிச் சொற்களைக் கையாளலாமா?

அ. குமரேசன்

இனிய நடையில் கட்டுரை எழுதிட எளிய வழிகள்கட்டுரை எழுதுகையில் ஏற்படும் ஒரு முக்கியக் குழப்பம் தூய கலப்பற்ற தமிழில் எழுத வேண்டுமா, இல்லை பிறமொழிச் சொற்களைக் கையாளலாமா என்பது.


நடைமுறையில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் நம் வாழ்வில் வெகுவாகக் கலந்துவிட்டன. குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் உட்பட பிற மொழிச் சொற்கள் பரவலாகப் புழங்குகின்றன.  அவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு முழுமையாக  தூய தமிழில் எழுதுவது எளிதல்ல. மொழி ஈடுபாடு சார்ந்து கலப்பற்ற தமிழில் எழுதுவது ஓர் இனிமையான அனுபவம்.  ஆயினும்  அது கட்டாயம் அல்ல. 


மேலும் முழுக்க முழுக்க இலக்கணம் சார்ந்த தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறபோது படிப்பதற்கு அது கடினமாகிவிடும். எழுதியவரின் தமிழ்ப்பற்றைப் பாராட்டுவதற்கு மாறாக அவருக்குப் பழமைவாதி என்ற முத்திரை பதிக்கப்பட்டுவிடக்கூடும்.


கதை போன்ற இலக்கியப் படைப்பு முயற்சிகளில், உரையாடல்களில் ஒரு கதாபாத்திரத்தின் குணம் இவ்வாறு பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதுதான் என்றால் அதைச் செயற்கையாக மாற்றத் தேவையில்லை.


பிற மொழிச் சொற்களிலிலேயே எழுதிவிட்டு ஆங்காங்கே தமிழ்ச் சொற்களைப் போட்டுக் கொள்கிறவர்கள் உண்டு.  அதுவும்கூட சமூக வாழ்வில் சிலரது  பழக்கமாகத்தானே இருக்கிறது. வேண்டுமென்றே நமது பிற மொழித் திறமையை காட்டுவதற்காக எழுதுவதாக எண்ணமும் ஏற்பட்டுவிடக் கூடாதல்லவா?


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் ஒரு முடிவு எடுத்தோம் “பழகு தமிழில் எழுதுவோம்”  என்ற அந்த முடிவை நான் விடாமல் பின்பற்றி வருகிறேன்.


தவிர்க்கவே முடியாத இடத்தில், அதை எழுதினால்தான் பொருள் புரியும் என்கிறபோது, வாக்கியத்தில் அழகு சேர்க்கப்பயன்படும் என்ற நிலையில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். அது கட்டுரைக்கு ஓர் எதார்த்தத் தன்மையையும் கொடுக்கும்.


வெற்றிகரமான பல எழுத்தாளர்கள் இந்த வழியைத்தான் தங்களின் இயல்பான வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கையில் எடுத்துப் படிக்கிற புத்தகங்கள், கட்டுரைகளில் இதை நீங்களே கண்டுபிடித்து மகிழலாம். ஒரு கொள்கை உறுதியோடு இலக்கணத் தமிழில் எழுதுவது வேறு. அது போற்றத்தக்கது.

கட்டுரையோ கதையோ வேறு எழுத்தாக்கமோ பழகு தமிழில், கூடியவரையில் கலப்பற்ற எளிய தமிழில் எழுதிடும் பரவசத்தை அனுபவியுங்க்ள், வாசகரும் அதை அனுபவிக்கச் செய்திடுங்கள்.கருத்துரையிடுக

2 கருத்துகள்