போரால் அழியவிருந்த நூலகத்தைப் போராடி காப்பாற்றிய ஆலியா முகமது பேக்கர்

இவள் பாரதி

வரலாறு சாதாரண செயல்களில் இருந்தே துவங்குகின்றன.  போருக்கு எதிராக உலகமே குரல் எழுப்பிக் கொண்டிருந்தாலும் போர் மேகம் சூழ்ந்தபடியே இருக்கும் நாடுகளில் ஒன்று ஈராக். ஈராக்கின் முக்கிய துறைமுக நகரமான பாஸ்ராவின் மத்திய நூலகத்தில் தலைமை நூலகராக பணிபுரிந்தவர் ஆலியா முகமது பேக்கர்.

பாஸ்ராவின் நூலகத்தின் ஏராளமான நூல்கள் இருந்தன.  அந்த நூலகத்தில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் வாசிப்பு குறித்தும், வாசிப்பின் பயணம் குறித்தும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அது 2003 ஆம் ஆண்டு.ஆலியாவுக்கு அன்று பதற்றம் தொற்றிக் கொண்டது.
 14 வருட நூலக அனுபவத்தில் அன்று நடந்தது போல அவருக்கு என்றும் நடந்ததே இல்லை. இனி நடக்கப் போவதுமில்லை. நகரத்தில் குண்டு வீச்சு நடக்கப் போகிறது  என்ற செய்தி வதந்தியாக வந்தது. பதற்றமான ஆலியா நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல ஆளுநரிடம் அனுமதி கேட்டார் ஆலியா. ஆனால் எந்த வித காரணமும் சொல்லாமல் அனுமதிக்க மறுத்துவிட்டார் ஆளுநர். 

புத்தகங்கள் ஒரு நாட்டின் செல்வம். அவை வெறும் காகிதங்களல்ல. வரலாற்று பொக்கிஷம் என்று நம்பிய ஆலியா வேறொரு முயற்சியை மேற்கொண்டார். நூலகத்திலிருந்து தன்னுடைய வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் காரில் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை எடுத்துச் சென்றார் ஆலியா. 

போர் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அந்த நூலகத்திற்கு அரசு ஊழியர்கள், போர் வீரர்கள் என நிறைய பேர் அடைக்கலத்துக்காக வந்திருந்தார்கள். ஆனால் நூலகத்திலும் தாக்குதல் நிகழலாம் என்ற நிலையில் அங்கிருந்த அனைவரும் நூலகத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர். ஆனால் ஆலியா மட்டும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து உடனடியாக செயலில் இறங்குகிறார்.
அருகில் இருந்த உணவக உரிமையாளரான அனீஸிடம் உதவி கேட்கிறார். ஏழடி உயரச் சுற்றுச் சுவருக்கு பின்னே இருக்கும் உணவகத்துக்கு நூலகத்திலிருந்த புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர். அனீஸின் சகோதரரும் உதவுகிறார். நூலகத்திலிருந்த புத்தகங்களை எடுத்துச் செல்ல அங்கிருந்த திரைச்சீலைகள், சாக்குகள், பெட்டிகள் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். அருகிலிருந்து இன்னும் சிலரும் உதவுகின்றனர். 

முக்கியமான புத்தகங்கள் பலவற்றையும் இரவோடு இரவாக அனீஸின் சேமிப்புக் கிடங்கில் மறைத்து வைக்கின்றனர். மறுநாள் நூலகம் குண்டுகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அடுத்த நாள் உணவகத்துக்கு போர் வீரர்கள் வந்து செல்கின்றார்கள். அதனால் போர் தாக்கம் குறைந்தவுடன் புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர் ஆலியாவும் அவரது கணவரும்.

ஒரு வாரத்திற்கு பின் போர் ஓய்ந்த நேரத்தில் ஒரு பெரிய ட்ரக்கில் புத்தகங்களை ஆலியாவும், அவரது கணவரும் எடுத்துச் செல்கின்றனர். நூலகத்திலிருந்த ஊழியர்கள் வீடு, நண்பர்கள் வீடு என நூல்களைக் கொடுத்ததுடன் தன்னுடைய வீட்டிலும் புத்தகங்களைப் பாதுக்காக்கத் தொடங்கினார் ஆலியா.

வீடு முழுக்க எங்கு திரும்பினாலும் புத்தகங்கள். புத்தகங்களால் கட்டப்பட்ட வீடுபோல் காட்சியளித்தது ஆலியா பேக்கரின் வீடு. போர் முடிந்ததும் மீண்டும் நூலகத்தைப் புதுப்பிக்க வேண்டும், பாதுகாத்த புத்தகங்களை எல்லாம் அங்கு சேர்க்க வேண்டும் என்கிற கனவில் இருந்தார்  ஆலியா. போரில் தீக்கிரையான நூலகத்தை நினைத்து அதிர்ச்சியில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் இதய அறுவை சிகிச்சையும் நடந்தது.

புத்தகங்களைப் பாதுகாக்க உதவியவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடம் செல்லாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், புத்தக அறிமுகமும் இல்லாதவர்கள். 30,000 நூல்களைப் பாதுகாத்த ஆலியா முகமது பேக்கர் ஒன்றை நினைவு கூர்கிறார். பாக்தாத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதேபோல போர் நடந்து 36 நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. மீண்டும் அது போலான சம்பவம். ஆனால் இந்த முறை ஆலியா என்கிற நூலகரால் அறிவுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட்டன. 1300 வருடங்கள் பழமையான நபிகள் நாயகத்தின் சுயசரிதை உள்ளிட்ட ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட குர் ஆன், பழங்கால நூல்கள்,ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அறிவுக் களஞ்சியங்களாக அங்கு பாதுகாக்கப்பட்டிருந்தன. 


நூலகத்துக்கு அருகில் உள்ள அந்த உணவகத்துக்கு வந்த ஒரு பத்திரிகையாளருக்கு அனீஸின் சகோதரர் இந்த உண்மையைச் சொல்ல அது நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தியாக வந்தது. அந்த செய்தியை படித்த ஜேனர் விண்டர் என்கிற எழுத்தாளர்  ஆலியாவைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் பாஸ்ராவின் தலைமை நூலகரான ஆலியாவை உலகம் அறியத் துவங்கியது.
 
ஒரு வரலாறு எப்போதும் எங்கும் தோன்றலாம். ஒரு பள்ளியில், ஒரு உணவகத்தில், ஒரு நூலகத்தில் என வரலாறு எப்போதும் தன்னைக் காத்துக் கொள்ள தக்கவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. அது போலொரு சமகால வரலாற்று நிகழ்வுதான் இந்த பெண் நூலகருடையதும்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்