எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்

இவள் பாரதி
.

’சமைப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான வேலை. பெண்கள் மட்டுமே சமைத்து ஆண்கள் சாப்பிட மட்டுமே செய்யும் வாழ்க்கை ஆரோக்கியமற்றது’ என்று முதல் கட்டுரையின் கடைசி பத்தியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறும் வார்த்தைகள் வீரியமானவை.  

கல்லூரி படிப்பின்போதும், இராணுவத்தில் பணியாற்றிய காலத்திலும் தவிர்த்து இதுநாள்வரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனது வீட்டில் சமைத்து வருபவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் என்று நூலுக்குத் தலைப்பு வைத்திருந்தபோதும் நமது பாரம்பரிய உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை அழகாக எடுத்துக் கூறுகிறார். வெறும் சமையல் குறிப்புகளாக இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த உணவின் நுணுக்கங்கள் பேசப்படுகிறது.

வாழைக்காய் பொறியல் களியாக மாறாமல் எப்படி சமைப்பது? ரசத்தில் பல வகைகளை எப்படி முயற்சிப்பது? சத்துமாவு எப்படி அரைப்பது? தமிழர் வாழ்வில் கஞ்சியின் பங்கு, தின்பண்ட கதைகள், மரக்கறிக்கும், ஆட்டுக்கறிக்கும் இடையில் அல்லாடிய வாழ்க்கை, சமையலின் நவீனக் கருவிகள், சாம்பார், புளிக்குழம்பு, சட்னி வகைகள் என அனைத்து குறித்தும் கூறப்பட்டிருக்கும் குறிப்புகள் வாசகருக்கு பயன்மிக்கவை. 

புதுமைப்பித்தன், பூமணி, தொ.பரமசிவன் மற்றும் அவரே எழுதிய கதைகளில் உள்ள உணவு குறித்த விவரிப்புகளைக் கையாண்டிருக்கும் விதம் வாசகர்களை வேறு ஒரு தளத்துக்கு நகர்த்திச் செல்கிறது.  உப்பின் பயன்பாடு வந்தபின் ஏற்பட்ட மாற்றம், வெயிலில் வற்றல்கள் போட்டு காய வைக்கும் பழக்கம், பூப்போல மிருதுவான இட்லியின் பக்குவம், தோசைக்கு என்ன பக்குவம், உணவு குறித்த பழமொழிகள், கர்ப்ப காலத்து சாப்பாடு என உணவுக்குப் பின்னிருக்கும் காரணமும், விருப்பமும் குறித்தும் பேசுகிறது இந்நூல்
 
எஸ்.வி.ராஜதுரையின் வீட்டில் சாப்பிட்ட இட்லி, கி.ராஜநாராயணனின் வீட்டில் சாப்பிட்ட நீர்மோர் என பிரபல எழுத்தாளர்களோடு உணவருந்திய அனுபவத்துடன் கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, சுந்தரராமசாமி என எழுத்தாளர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட அனுபவப் பகிர்வும், அதனூடான நையாண்டி எழுத்தும் வாசிப்போரை உதடுவிரிக்கச் செய்கின்றன.  

உணவை விரும்புச் சாப்பிடும் ஒருவரால் நல்ல சமையலையும் படைக்க முடியும். இந்தப் பிறப்பே தேடிச் சோறு நிதம் தின்பதுதானா? என்கிற கேள்வியை எழுப்பும் அதே நேரத்தில் சமையலுக்குப் பின்னிருக்கும் மனநிலையும், உளவியல் பார்வையும், பொருளாதார சிக்கலும் கூட முக்கியமானவை என முன்வைக்கிறது இந்நூல்

எந்தெந்த ஊரில் என்னென்ன சாப்பாடு சாப்பிடலாம் என்றும் விவரிக்கிறது. இந்த நூல் சமையலை விரும்புபவர்களின் சுயமுயற்சிக்கு துணை நிற்பதுடன்  நல்லதொரு வாசிப்பனுவத்தினையும் தருகிறது.


சாப்பாட்டு பிரியர்களும், சமையல் பிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகம்

புத்தகத்தின் பெயர் : ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் 
விலை : 90 ரூ
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
தொடர்பு எண் : 9498002424

கருத்துரையிடுக

0 கருத்துகள்