எழுத்தாளர் உமர் பாரூக் எழுதிய உணவோடு உரையாடு நூல் விமர்சனம்

இவள் பாரதி


உணவு உயிர்களின் ஆதாரம். உணவும் உடல்நலமும் வெவ்வேறான விஷயங்கள் அல்ல. உணவைச் சார்ந்தே உடல்நலமும் தீர்மானிக்கப்படுகிறது. உலகில் எதைப் பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தாலும் உணவு குறித்த சிந்தனைகள் எந்த காலத்திற்கும் அவசியமானதே. 

மலச்சிக்கல் ஏற்பட்டால் வாழைப்பழம் சாப்பிட சரியாகும் என்பது பொதுவான அறிவு. ஆனால் உடலில் புளிப்புச் சுவை அதிகரித்து ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கலை வாழைப்பழம் போக்காது என்று கூறுகிறது இந்நூல்.

நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்பதை சுவைகளை வைத்தே சொல்ல முடியும். சமச்சீர் உணவு என்று சொல்லப்படுவதைக் கடந்து உணவில் உள்ள அறுசுவைகளில் எது கூடினால் உடலுக்குத் தொந்தரவு என்று சொல்கிறார் நூலாசிரியர். 

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கசப்பு இவற்றில் உடல் சில நேரங்களில் கேட்கிற சுவையை வைத்தே உடலின் நோய்த் தன்மையை அறிய முடியும். ஒவ்வொரு உள்ளுறுப்புகளும் ஒவ்வொரு சுவையோடு தொடர்புடையது. 

இனிப்பு இரைப்பைக்கும், புளிப்பு கல்லீரல், பித்தப்பைக்கும், துவர்ப்பு மண்ணீரலுக்கும், காரம் நுரையீரல் மற்றும் பெருங்குடலுக்கும், உப்பு சிறுநீரக உறுப்புகளுக்கும், கசப்பு இதயம் மற்றும் சிறுகுடலுக்கும் என மருத்துவம் சொல்கிறது. அதாவது பெண்கள் கருவுற்ற காலத்தில் சிறுநீரகமும், கல்லீரலும், மண்ணீரலும் சிசு வளர்ப்பில் கவனம் செலுத்துகிறது. இதனால் உப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை கர்ப்பிணிகள் விரும்புகின்றனர். 

சுவைகளைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சுவைகள் இருப்பதை அறிய முடியும். உதாரணத்திற்கு ஆப்பிள் பழம் இனிப்பாக இருந்தாலும் அதன் தன்மை புளிப்பு. இப்படி எந்தெந்த உணவுகளில் என்னென்ன தன்மை இருக்கிறது என்பதைக் கூறுகிறது இந்த புத்தகம். 

அதே போல உணவில் அமிலத்தன்மை, காரத் தன்மை என்கிற இரண்டு தன்மைகள் உள்ளன.   இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு அமிலத்தன்மையானவை என்றும், காரம், உப்பு, கசப்பு காரத்தன்மையானது என்றும் சொல்கிறது. இவை இரண்டும் கலந்த உணவுகளை உண்ணும்போது உடலுக்கு ஊறு விளைவிக்காது. ஆனால் நாம் பெரும்பாலும் அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு தொந்தரவுகள் வருகின்றன. 

உதாரணத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, தயிர், கூட்டு, அவியல் ஆகியன அமிலம். ரசம், நீர் கலந்த மோர், பொறியல், அப்பளம் ஆகியன காரம். எந்த நாட்டு உணவை எடுத்துக் கொண்டாலும் அமில காரத்தன்மையோடு உணவுகள் இருப்பதைக் காண முடியும். 

சரி எப்படி உணவில் அமிலத் தன்மையைக் குறைத்து காரத்தன்மையை சமநிலைப்படுத்துவது என்பதற்கும் வழி கூறுகிறார் ஆசிரியர். பசித்திருக்கும் வயிறு காரத் தன்மையானது. எனவே நன்கு பசிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் சமநிலைக்கு வரும் என்கிறார். 

அதே போல நம்முடைய வேலைத் தன்மைக்கேற்ப உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். உணவிற்கு பின் வேலை செய்யவேண்டிய அவசியம் இருந்தால் நம்முடைய உணவு நீர்த்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும். அதேபோல உணவிற்குப் பின் ஓய்விற்கான நேரம் இருந்தால் நம்முடைய உணவு கடின உணவாக இருக்கலாம். உணவு உண்ட பிறகு கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற கருத்து உண்மையல்ல. 

உணவின் அளவும் நபருக்கு நபர் நேரத்திற்கு நேரம் வேறுபடும். இரண்டு பேரின் உணவு அளவை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க முடியாது. அவரவரின் உணவுத் தேவையைத் தனித்தனியாக அவரவரே உணர முடியும். 

நீர் விரதம், பழ விரதம், முழு விரதம் ஆகியன குறித்தும், ஒரு நபரின் சராசரி தேவை, கலோரி கணக்கீடு குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. 

 அதுமட்டுமின்றி பெண்களின் உடல்நலம் உணவு சம்பந்தப்பட்டதல்ல. ஏனெனில் அதிகாலையில் எழுந்துவிடும் பெண்களுக்கு உணவு வேளையில் அனைவருக்கும் முன்பாக பசி வர வேண்டும். ஆனால் அவர்களுடைய உணவு எல்லோருக்கும் கடைசியாக இருக்கும். இப்படி பெண்கள் உணவு குறித்து புரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான செய்திகளைச் சுவையாக சொல்கிறது இந்நூல்

உணவு குறித்த அக்கறை இருக்கிற அனைவரும் படிக்க வேண்டிய நூல்

வாருங்கள் உணவோடு உரையாடுவோம். புத்தகத்தின் பெயர் : உணவோடு உரையாடு
விலை : 50 ரூ
பதிப்பகம் : எதிர் வெளியீடு
தொடர்பு எண் : 99425 11302

கருத்துரையிடுக

0 கருத்துகள்