கூடவே வரும் நிலா - நூல் விமர்சனம்

இலக்கிய வடிவங்களில் கவிதையும் ஒன்று. எல்லா வகையிலுமான படைப்புகளும் உலகத்தைப் பேசுகின்றன என்றாலும் கவிதை ஒரு மாறுபட்ட உணர்வுக்குள் இட்டுச் செல்கிறது. வாழ்க்கையை அனைத்துக் கலைகளோடும் இணைத்துச் சொல்லலாம் என்றாலும் கவித்துவமாய் இருக்கிறது என்று சொல்கிறபோது அது தனித்துவம்  பெறுகிறது.

 

இயற்கையின் படைப்புகள் அனைத்துமே அழகானவை என்றாலும் நிலாவுக்கு ஒரு கவித்துவத் தனித்துவம் உணரப்படுகிறது. நிலாவைப் பற்றி எத்தனையோ கவிதைகள் புனையப்பட்டுள்ளன.பாப்பாக்களுக்காகப் பாடுவது முதல், காதல் மனநிலையைச் சித்தரிப்பது வரையில் நிலா  அழைக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் தெருவில் நடக்கிறபோது உயரே நம் வீடு வரையில் கூடவே வருகிற நிலாவைக் கண்டு வியக்கிறோம். பெரியவர்களாய் நம் உணர்வுகளுக்குத் துணையாய் அதே நிலா கூடவே வருகிறது.

 

கவிதைச் சிறகு விரித்து நிலாவோடு கூடவே செல்கிறார் கவிஞர் ஸ்ரீநிரா. நிலாவை அழகின் வடிவாய், குளுமையின் ஊற்றாய் சித்தரிக்கிற பல படைப்புகளுக்கிடையே, ஒரு தத்துவப் பெட்டகமாகக் காணும் கவிதைகளின் அணியில் இணைகிறது. அவருடைய ‘கூடவே வரும் நிலா.’ ஆகவே, இயற்கை, கடவுள், மனிதம், மதம், குழந்தை, முதியவர், பயணம், மரணம், காதல், தேடல் என எதைப்பற்றிய கவிதையிலும், நிலாவைப் பற்றிய  சொற்கள் இருக்கின்றனவோ இல்லையோ கூடவே நிலா இருப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

 

“போதி மரங்கள் எங்கோ இல்லை” எனக்கூறிப் பயணிக்கச் சொல்கிற முதல் கவிதையே பயணத்தின் உயிர்ப்பான விளைவை உணர்த்துகிறது. ஞானம் பெறுவதற்குப் போதி மரத்தடியைத் தேட வேண்டியதில்லை, உம்மாச்சி விளையாடும் குழந்தையோடு உரையாடினால போதும். ஏனென்றால் அவர்களுக்கு உலகில் எத்தனை கடவுள்கள் என்று தெரியாது என்றுரைக்கிறது ஒரு கவிதை.  விளையாடும் இடத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு மதம் பூசப்படுவதைச் சொல்கிறது அதே கவிதை. இவை கடவுள் மறுப்பு, மத வெறுப்பிலிருந்து வரும் கருத்துகள் அல்ல. மனித நேய நல்லிணக்கத்திலிருந்து வருபவை. ஓரிடத்தில் கடவுளுடனேயே பேசுகிறார் கவிஞர் - என்ன கேட்டார், கடவுள் என்ன பதிலுரைத்தார்? அப்படியானால் கடவுள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? ஐந்தறிவு ஜந்துக்கள் ஏன் மதம பிடித்து அலைவதில்லை என்றால் அவை கடவுள்களைப் படைக்கவில்லை என்று அறிவிக்கிறவர், கடவுளோடு பேசும்  கவிதையைப் படித்து ரசித்திடுக.

 

திருமணக் காண்டம் தொடங்கும் ஒரு குடும்பத்திற்குள் நுழையும் நிலா, தகப்பனின் சொத்துப் பத்திரங்கள் வேறோர் இடத்தில் நுழைய கடன் பத்திரங்கள் வீட்டிற்குள் நுழைவதைக் காட்டுகிறது. கட்டங்களை வைத்து இருவரது நிச்சயமற்ற திருமண வாழ்வை நிச்சயித்த சோதிடரால் அவர்களின் மனதைக் கணிக்க முடியாமல் போனதை அந்தக் கவிதை சொல்வதில் எவ்வளவு கூர்மையான சமூக விமர்சனம்!

 

பக்கத்து வீட்டு ராவுத்தர் மனைவி மிச்சமெனறு தூக்கிப்போட்ட பிரியாணியைக் கொத்தித் தின்றுவிட்டு, இவ்வீட்டுத் திதிக்கான சோற்று உருண்டைக்காகக் காத்திருக்கும் பறவை அறியுமோ இக்கதையை என்று கேட்கிறது நிலா. எக்கதையை? பலரும் சந்திக்க நேர்ந்திருக்கிற அக்கதையை அந்தக் கவிதையில் காண்க.

 

இக்கவிதைகள் வாழ்ந்தவர்களின் கதையைப் பேசுகின்றன என்றால், வாழவே முடியாதவனின் நிலையைப் பேசுகிறது மற்றொரு கவிதை. தொலைத்துவிட்ட எதையோ தேடி விரைந்துகொண்டிருக்க, சிக்னலில் காத்திருக்கிற அவன் முகத்தில் தெரிகிற அரை இஞ்ச் பரிகாசம் யாருக்கானது என்று கேட்கிறது நிலா. சுரண்டல் கட்டமைப்பால் மரத்துப் போய்விட்ட உலக சமுதாயம் என்ன பதில் சொல்லப் போகிறது? உயிருள்ள சமுதாயம் இவ்வாறு இருக்க, ஜடப்பொருள்கள் உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்கிறது இன்னொரு கவிதை.

 

 வாழ்க்கையின் இத்தனை பரிமாணங்களைப் புரிந்துகொள்ள மெனக்கிடாமல், எதிலும் குறைகண்டு சலித்துக்கொள்வோர் மனநிலையைப் பூடகமாய் விமர்சிக்கிறது ஒரு கவிதை. பூடகமாய்ப் பேசப்படுவதைப் புரிந்துகொள்வதும், ஏதோ புரிந்துகொள்வதும் ஒரு கவிதை அனுபவமே.

 

“நீ இப்போதும் எழுதுறாயா,” என்று கேட்கிறான் கவிதையெல்லாம் எழுதுகிற ஓர் ஆண்.  “உடல் மட்டும் எப்படி எழுதும்,” என்று பதில் கேள்வி வைக்கிறாள் ஒரு பெண். போதும் கவிதை என அவள் பேச்சை நிறுத்திவிடுகிறான் ஆண். கவிஞர் என்றாலே ஆண் உருவமே தோற்றுவிக்கப்பட்டிருக்கிற உலகளாவிய கலாச்சாரச் சூழலில், பெண்ணின் படைப்புச் சுதந்திரம் பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி உறுத்தலை ஏற்படுத்தும் கவிதை இது.

 

இரவுதோறும் அறையின் குழல் விளக்கில் முட்டி மோதும் விட்டில்பூச்சிகளாய்ப் பெண்கள் “பறக்கவிடப்பட்டிருக்கிறார்கள்.” யாரின்றிச் சிறக்காது இந்த உலகமோ, அந்தப் பெண்களின் ஒரு கையில் பூங்கொத்து கொடுத்துவிட்டு, இன்னொரு கையில் விண்ணப்பம் ஒன்றை அளிக்கிறார் நம் கவிஞர். “உங்கள் மகள்களுக்குச் சுதந்திரத்தின் எல்லைகளை அறிமுகப்படுத்துங்கள். சிறகு விரித்தது அவர்கள் விண்ணளாவட்டும்.” இந்த நியாயமான விண்ணப்பத்தை ஏன் பெண்களிடம் வைக்க வேண்டும்? பெண்கள் முனைந்தெழுந்து போராட வேண்டும். “இது ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் கனவு” என்று முடிகிற கவிதை, அந்தப் போராட்டத்தில ஆண்கள் பங்கேற்பதன் தேவையையும் முன்மொழிகிறதுதானே?

 

பல வினாக்கள் அணிவகுக்க ஒளிந்திருக்கும் விடை தேடி உய்வதே வாழ்வாங்கு வாழ்வதா என்ற மற்றொரு வினாவை எழுப்புகிறது மற்றுமொரு கவிதை. “ஆம் எனில், நாம் உயிர் வாழ்வது வாழும் வரை, சாகும் வரை அல்ல,” என்று அக்கவிதை தேடித் தரும் விடை எவ்வளவு அருமையானது!

 

உயிர் உண்டுதான் என வாதிட வரும் கவிதை, உயிர் எனத் தனியாக இருக்கிறதா என்று விளக்கவில்லை. காதலன்-காதலி உறவோடு நின்றுவிடுகிறது. “உடல்களில் உயிர் உண்டு. உயிர்தனில் ஜீவன் உண்டா’‘  என்று முடிகிறது, உயிரும் ஜீவனும் வேறு வேறா? ஒருவேளை உயிர்ப்பு என்ற பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் கவிஞர்.

 

“கண்ணீரின் வலியைத் தனிமை உணர்த்துமா, அன்பின் பெருமையை அகதிகள் அறிவாரோ, மொழியின் வலிமையை வாய்பேசாதோர் அறிவாரா,” என்று ஒரு கவிதையில் வரும் வரிகளைச் செதுக்கியிருக்கலாம். வாய்பேசாதோர் என்பதற்குச் சமூகத்தில் இன்னமும் புழங்குகிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம். சில வெளிப்பாடுகள் மேலோட்டமாக, அல்லது கவித்துவமின்றி இருக்கின்றன. இது ரசனை வேறுபாட்டால் ஏற்படும் எண்ணமாகவும் இருக்கலாம்.

 

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு. கூடவே வரும் நிலாவை, அது வெளிச்சம் பாய்ச்சுகிற வாழ்க்கையை உற்றுக் கவனிக்க வைத்துவிட்டார் ஸ்ரீநிரா. அரையிருட்டில் வெளிச்சம் பாய்ச்சிக் கூடவே வரத் தயாராக இருக்கும் முழுநிலாவை முகப்பு ஓவியமாக்கியிருக்கிற ஆர்.எஸ். ஸ்வேதா, யார் கூடவும் அனுப்ப மாட்டேன் என்று கயிறில் கட்டிப்போடும் கையை பின்னட்டை ஓவியமாக்கிறார் வி.பி.ஐஷ்வர்யா. இரு செல்விகளுக்கும் பாராட்டுகள். கவிதைகளுக்குரிய நேர்த்தியோடு புத்தகமாக்கியிருக்கும் அகநூல் பதிப்பகத்தாருக்குக் கைகுலுக்கல்கள்.

 

இப்படி இயற்கை, வாழ்க்கை, தத்துவம், அழகியல், சமுதாயம் என பன்முகச் சிந்தனைகளை ஏற்படுத்துகிற ஸ்ரீநிராவின் கவிதைகள் அந்தப் புதிய நிலாவோடு நம்மையும் செல்ல வைக்கின்றன.  நம்மோடும் கூட வருகிற நிலாவை அன்னாந்து அல்ல, உள்ளார்ந்து பார்க்க வைக்கின்றன.

 

அ. குமரேசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்