குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? - வழக்கறிஞர் அஜிதா

சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் பெரும்பாலான மக்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது. இரண்டு தினங்களின்போதும் கொடி ஏற்றப்படுவதும், இனிப்பு வழங்கப்படுவதும், அன்றைய தினம் விடுமுறை என்றும் தெரிகிறது. ஆனால் இரண்டையும் நாம் சரியாக தெரிந்துகொள்வது அவசியம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்தியா எனும் தனி சுதந்திர நாடாக நம்மை நாம் ஆட்சி செய்து கொள்ளப் போகிறோம் என்பதை அறிவித்த நாள்தான் சுதந்திரதினம் ஆகஸ்ட், 15, 1947. 

இந்தியாவை ஆளப்போகும் எல்லா தரப்புகளிலும் குறிப்பாக சட்டம் இயற்றும் அதிகாரம், நடைமுறைப்படுத்தும் அதிகார அமைப்பு, நீதித்துறை, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஆணையங்கள், ஒவ்வொரு மாநிலங்களுக்குமான உரிமைகள், மத்திய அரசுக்கு வரிகளின் மூலம் வரக்கூடிய வருமானங்கள் போன்ற விஷயங்களை எல்லாம் மிக தெளிவாக இந்தியா என்கிற நாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முழுமையான சட்டத்தை அதாவது அரசியல் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த நாள் ஜனவரி 26, 1950. அதைத்தான் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்தியா என்பது எப்படி இருக்க வேண்டும்? நம்மை ஆட்சி செய்பவர்களின் தன்மையும், நிலையும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் எப்படி பணி நியமனங்கள் செய்ய வேண்டும்? அலுவலகத்தை எப்படி அவர்கள் நடத்திச் செல்வது? மக்களாட்சி என்கிற விஷயத்தையும், அதற்கான செயல்முறைகளையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும்  நடைமுறைக்கு தகுந்த சட்டமாக உருவாக்கி  ஒவ்வொரு அரசும் தன் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்கிற கடமையை நடைமுறைக்கு கொண்டுவந்த நாள் என்றும் சொல்லலாம். 

நாம் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறினோம் என்பது சுதந்திரம், நம்மை நாம் எப்படி ஆண்டு கொள்ளப் போகிறோம் என்பதற்கான அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்துவிட்டது மக்கள்தான் அதனுடைய தலைவர்கள் என்பதைச் சொல்லக்கூடியதுதான் குடியரசு. 

அரசியல் ரீதியான சுதந்திரம், மக்களை மக்களே ஆண்டுகொள்ளும் முழுமையான அதிகார ஆவணத்தை அரசியல்  சாசனத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிய நாள்தான் குடியரசு. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தப்படும் ஆட்சியைக் குறிப்பதற்கான ஆவணம் நடைமுறைக்கு வந்த நாள்தான் குடியரசு தினம். 

குடியரசு தினத்தன்று இந்திய தலைநகர் புதுடெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி அந்த மரியாதையை ஏற்றுக்கொள்வார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு குடியரசுத் தலைவரும், வீர தீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்களும் பதக்கங்கள்  வழங்குவர். 

முப்படைகளின் அணிவகுப்பு என்பது நாட்டின் வீரர்களை நினைவுகூர்வதற்காகவும், நாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களை கெளரவிக்கும் விதமாகவும் நடத்தப்படுகிறது. அதேபோல அந்தந்த மாநிலங்களிலும் அணிவகுப்பு நடைபெறும். 

நம்முடையை இந்திய தேசியக் கொடியை கீழிருந்து மேலே ஏற்றி அதை பறக்க விடுதல் என்பது வழக்கம். பிரிட்டிஷ்காரர்களின் கொடியை இறக்கிதான் இந்திய கொடி மேலே ஏறியது என்பதை உணர்த்துவதற்காக சுதந்திர தினத்தின்போது கொடி ஏற்றப்படுகிறது. 

குடியரசு தினத்தன்று கொடி ஏற்றப்படுவதில்லை. கம்பத்தின் மேலே கட்டப்பட்டு இருக்கும் தேசியக் கொடி திறந்து பறக்கவிடப்படுகிறது. நாம் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். அது இன்னும் பட்டொளிவீசி பறக்க வேண்டும் என்பதை பறைசாற்றும் நாளாக அரசியல் சாசனத்தின் துவக்க நாளாக இருப்பதுதான் குடியரசு. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்