டுஜக் டுஜக் - குழந்தைகளின் பேச்சுலகத்திலிருந்து

அ.குமரேசன்

குழந்தைகளுடைய பேச்சின் இனிமை மழலைக் குரலால் மட்டும் ஏற்படுவதல்ல. சொற்களை அவர்கள் உச்சரிக்கிற விதத்திலும் அந்த இனிமை கொட்டிக்கிடக்கிறது. அவர்கள் தங்கள் தங்கள் தேவைகளை எப்படி முன்வைக்கிறார்கள், தங்கள் உரிமைக் குரலை எப்படி ஒலிக்கிறார்கள், தங்கள் ரசனையை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என எல்லாம் கலந்தது அவர்களின் பேச்சுலகம். அவர்கள் வளர வளர சமூகத்தின் பிழைதிருத்தம் செய்யும் பணி தொடங்கிவிடும். வளர்வதால் தாங்களேயும் கவனித்துப் பெரியவர் உலகத்திற்கான சொற்களாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

அந்தக் குழந்தைப் பேச்சு குடும்பங்களில் ரசிக்கப்படுகிற அளவுக்கு நினைவில் கொள்ளப்படுவதில்லை. பதிவு செய்யப்படுவதுமில்லை. அரிதாகச் சிலர் ஒலி/ஒளிப்பதிவு செய்து பரிசாக அளிப்பதுண்டு. எழுத்தாகப் பதிவு செய்வதோ அரிது. எழுத்துக்கே உரிய இலக்கணங்களால் அவர்களின் பேச்சுலகத்தை அப்படியே பதிவு செய்வது எளிதல்ல. அதற்கொரு முயற்சியில் ஈடுபட்டு பெருமளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறார் தேனி சுந்தர்.

அழுத்தமிகு சூழல்களில் மழலைப் பேச்சைக் கேட்பது தருகிற மகிழ்வையும் ஆறுதலையும் போன்றதொரு அனுபவம் இந்தப் புத்தகத்தை வாசிப்பதிலிருந்தும் கிடைக்கிறது. கதையோ கட்டுரையோ அல்ல என்பதால், ஒரு தகப்பனினின் டைரியாகத் தொகுக்கப்பட்டுள்ள புத்தகத்தின் எந்தப் பக்கத்தையும் திறந்து அந்த அனுபவத்தைப் பெறலாம்.

படியேறி வரும் பாப்பா ஒவ்வொரு படிக்கும் நம்பர் சொல்லிக்கிட்டே வராங்க. அவங்களை விட இரண்டு மாதம் சீனியர் பாப்பா சொல்லிக் கொடுத்ததாம். படிகளின் வரிசை ஒன், டூ, த்ரீ என இருந்தால் அதில் என்ன இருக்கிறது? டூ, சிக்சு, போர், நைன், செவன்… இப்படியொரு எண்ணிலக்கண மீறல். அதனாலேயே குழந்தைக் கவியுலகச் சாரல்.

விளையாட்டுகளில் குழந்தைகள் உருவாக்கிக்கொள்ளும் புதிய விதிகளுக்கு உட்படாவிட்டால் உங்களுக்கு அவர்களோடு விளையாடும் தகுதியே அடிபட்டுவிடும். இதிலேயும் கீத்தி, புலல் (கீர்த்தி, புகழ்) இருவரும் கண்ணாமூச்சி  ஆடுகிறார்கள். குறிப்பிட்ட இடத்தில்தான் ஒளிந்துகொள்ள வேண்டும் என்பது “சடி” என்று இருவராலும் ஏற்கப்பட்ட நிபந்தனை! நாளைக்கு என்றால் கடந்தகாலம், முந்தாநாள், நேத்து என்றால் எதிர்காலம் – இதுவும் அவர்களுக்கேயுரிய காலவரையரை!

சாக்லட் தின்னாலும் கொரானா வராதுப்பா என்று புரிய வைப்பதற்குப் பாப்பா முன்வைக்கிற வாதங்கள் மறுக்க முடியாதவை! கூட்டமாக இருக்கும் பூங்காவுக்குள் போக வேண்டாம், அங்கேதான் கொரோனா ஒளிஞ்சிருக்கும் என்று பாப்பா அண்ணனிடம் சொல்வது குழந்தைகள் நடப்பு நிலைமைகள் பற்றிய புரிதலை எப்படி வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதற்குச் சான்று.

தானாகவே சட்டை போட்டுக்கொண்டது, தானாகவே தண்ணீரைத் தூக்கி ஊற்றியது போன்ற செயல்களால் பெரியபிள்ளையாகிவிட்டதாக நிறுவுறாங்க பாப்பா. ஆனால் கடைக்குப் போகும்போது தூக்கிக்கொள்ளச் சொல்றாங்க. “நீதான் பெரியபிள்ளை ஆயிட்டம்ன… நடந்தே வா.’ --அப்பா.

“நானு இன்னும் பெரியபிள்ளையே ஆகலே,” என்று சாதிக்கிறாங்க. சும்மா இல்லை, “போப்பா லூசப்பா” என்ற முத்திரையோடு!

சூரியனைப் பிடிச்சுத்தரணுமாம் பாப்பாவுக்கு. ஏரோப்பிளேன்ல போனாத்தானேப்பா சூரியனைப் பிடிக்க முடியும்கிறாங்க அண்ணன். எதற்காக சூரியனைப்  பிடிக்க வேண்டுமாம்? “ம்ம்ம்… தொட்டியிலே போட்டுத் தூங்கவைக்கப்போறேன்.“ -இதைச் சூரியன் கேட்டிருக்குமானால் தானே இறங்கிவந்துவிடாதோ!

"அப்பாட்ட சொல்லிடவா" என்று கூறும் அண்ணனிடம் பாப்பா சொல்றாங்க, “நான்லாம் பயக்க மாட்டேன்.” யாருக்குமே பயக்க மாட்டாங்களாம். "சொல்லிக்க சொல்லிக்க" என்று சவால் விடுப்பது வேறு. குழந்தையுலகின் இந்த அச்சமின்மை வேறோரு காட்சியில் வேறு விதமாய் வெளிப்படுகிறது. தவறிக் கீழே விழுந்துவிட்ட பேனாவை எடுத்துத் தரச் சொல்கிறார் அப்பா. தரையில் தன் வேலையாக இருக்கும் அண்ணன்  எடுத்து நீட்டுறாங்க. அப்பாவுக்குக் கை எட்டவில்லை. இன்னும் உயர்த்தித்தரச் சொல்கிறார். இப்போதும் எட்டவில்லை. அப்பா கையை நீட்டியபடி இருக்கப் பையனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. “நாங்கதான் உங்க லெவலுக்கு வரணுமோ? கொஞ்சம் கூட எறங்க மாட்டீங்களோ?” 

“கேள்வி பேனா சம்பந்தப்பட்டது மட்டுமில்ல,” என்று முடித்து வேறு சிந்தனைகளுக்குள் இட்டுச் செல்கிறார் எழுத்தாளர்.

"நம்ம பாப்பாவ ஸ்கூல்ல விட்ட பிறகும் இதே மாரி இம்புட்டுப் பேச்சு பேசுமாங்க? அப்பதான் தெரியும் நம்ம பாப்பாவோட ரியாலிட்டி," என்கிறார் அம்மா. பாப்பாக்கள் நேரடியாக வராத கடைசிப் பக்கப் பதிவு இது.

"இல்ல இல்ல… அப்ப தெரியுது பள்ளிக்கூடங்களோட ரியாலிட்டி!"

இந்த பதில் பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது. ஒரு குழந்தை காலம் பூராவும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா? வயது கூடக்கூட அப்படியே இருந்தால் நாம் கவலைப்பட ஆரம்பித்து விடுவோமே! பள்ளிகள் குழந்தைகளை மாற்றாமலே இருக்க வேண்டுமா? மாறுவதற்காகத்தானே பள்ளியில் சேர்க்கிறோம்?

ஆம். மாற்றத்திற்காகத்தான் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறோம். எப்படிப்பட்ட மாற்றம்? குழந்தைகள் கேள்வி கேட்கிற தலைமுறைகளாகப் பரிணமிக்கிற மாற்றமா? பதில்களால் அடங்கிவிடுகிற மாற்றமா?

கல்வித் தளத்தில் நடந்து வருகிற விவாதத்திற்குத் தனது சிறப்பான பங்களிப்பாக இந்த வழியில் ஒரு புத்தகத்தை அளித்திருக்கிறார் தேனி சுந்தர். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

வெளியீடு:

புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை

தேனாம்பேட்டை

சென்னை - 600018

தொலைபேசி: 044 - 24332424, 24332429, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

வாட்ஸ்அப்: 

8778073949

பக்கங்கள்: 112 விலை: ரூ.100
கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. UNKNOWN5 பிப்ரவரி, 2022 அன்று முற்பகல் 8:02

    என்னுடைய நூல் குறித்து மிகச் சிறப்பான மதிப்புரை வழங்கிய பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய தோழர் அ.குமரேசன் அவர்களுக்கும் வெளியிட்டு உதவிய நம் தமிழ் மீடியா தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    அன்புடன் தேனி சுந்தர்

    பதிலளிநீக்கு