’இந்தியாவின் நைட்டிங்கேல்’ - லதா மங்கேஷ்கர்; 36 மொழிகள்; 30,000 பாடல்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) இன்று காலை மறைந்தார்.கடந்த நான்கு வார காலமாக மும்பையில் உள்ள  தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். 
 
சிறந்த பின்னணி பாடகியாக மூன்று தேசிய விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.  ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று புகழப்படுபவர். 1948 முதல் 2019 வரை கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு மேலாக திரைப்படத்துறையில் பின்னனி பாடகியாக மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். 20 இந்திய மொழிகளில் 1948 முதல் 1974 வரை 25,000 பாடல்களை பாடியதற்காக 1974 கின்னஸ்  சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.  ‘பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் கழக விருது’களை பலமுறை பெற்றவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா இவருக்கு மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருதையும் பெற்றவர்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இசைக்கலைஞர்  தீனானந்த் மங்கேஷ்கருக்கு மகளாக பிறந்த லதா தனது 13 வயதில் தந்தையை இழந்தவர். தன்னுடன் பிறந்த ஐவரில் இவரே மூத்தவர் என்பதால் குடும்பத்தின் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய சவாலுக்கு உள்ளானர். இதனால் அந்த பதின் பருவ வயதில் 8 மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.  பின்னர் பாடகியாக மலர்ந்தவர் தனது வறுமையை தனது குரலின் வளமையால் தோற்கடித்தார். 36 மொழிகளில் பாடி இந்திய கலாச்சரத்தின் அடையாளமாக திகழ்ந்த லதா மங்கேஷ்கர்  திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர்.  பிரபல பாடகி ஆஷா போஸ்லேவும் இவரது சகோதரி ஆவார்.

தமிழில் இளையராஜா இசையில்  மூன்று பாடல்கள் பாடியுள்ளார். பிரபு, ராதா நடித்து வெளியான’ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற  ‘ஆராரோ ஆராரோ’ பாடல்தான்  தமிழில்  முதல் பாடல்  கமலஹாசன். அமலா  நடித்து வெளியான ’சத்யா’ படத்தில் ‘வளையோசை கலகலவென’பாடலை எஸ்.பி.பியுடன் பாடியுள்ளார்.கார்திக், சரண்யா பொன்வண்னன் நடித்த ‘என் ஜீவன் பாடுது’ படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’பாடலை இவர் தனியாகவும் மனோவுடனும் இணைந்து பாடியுள்ளார். 

இனி யாராலும் எட்டிவிட முடியாத சாதனைக்கு  சொந்தக்காரரான இசை தேவதை  லதா மங்கேஷ்கருக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உட்பட திரைத்துறை, அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இன்று மாலை  6.30 மணிக்கு  முழு அரசு மாரியதையுடன் இறுதி அஞ்சலி  செலுத்தப்படும்.

30,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் காலத்தால் அழியாத பாடல்களால் எப்போதும் நம் நினைவில் வாழ்ந்திருப்பார். 
கருத்துரையிடுக

0 கருத்துகள்