நூல் அறிமுகம்: இவள் பாரதி எழுதிய ‘குட்டி மோச்சு’ – அ. குமரேசன்

தக்காளி நம் உணவில் இடம்பெறும் காய்கறிகளில் ஒன்று. அதனை நேரடியாகச் சாப்பிடுவோர் உண்டு, தக்காளிச்சாறாகப் பருகுவோரும் உண்டு. அந்தத் தக்காளிகளுக்கு, ஒரு சிறுமியின் மூலம் ஒரு கேள்வி எழுகிறது. “நம்மை எல்லோரும் பழமாகத்தானே சாப்பிடுகிறார்கள். ஆனால் நம்மைப் பழங்களோடு சேர்க்கவில்லையே? காய்கறிகளின் வரிசையில்தானே வைத்திருக்கிறார்கள். அப்படியானால் நாம் பழமா, காய்கறியா?” இதை ஒரு வழக்காகவே நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கின்றன. தீர்ப்பளிக்கப்படும் வரையில் தங்களை யாரும் சாப்பிடக்கூடாது என்று தடை விதிக்கின்றன. பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நீதிமன்றம் அளிக்கிற தீர்ப்பைத் தக்காளிகள் ஏற்கின்றன. இதனிடையே தக்காளி தின்னி என்று பெயரெடுத்த அந்தச் சிறுமி ஒரு முடிவெடுக்கிறாள். இப்படியொரு கதை எங்கே இருக்கிறது என்றால், கதை விரும்பியாகிய குட்டி மோச்சு வைத்திருக்கிற பெட்டியில் இருக்கிறது. பெட்டியைத் திறந்துவிட வேண்டாம், கதைகள் ஓடிவிடும் என்று பையன் சொல்லியிருந்தும், அம்மா வீடு பெருக்கும்போது பெட்டியை நகர்த்திவைக்க, அது திறந்துகொள்ள சில கதைகள் வெளியேறி ஒளிந்து கொள்கின்றன. பையன் திரும்பிவருவதற்குள் அந்தக் கதைகளைக் கண்டுபிடித்துப் பெட்டிக்குள் வைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மா அதற்காக ஓர் உத்தியைக் கையாளுகிறார். வெளியேறிய கதைகள் திரும்பி வருகின்றன. அப்படி வந்த கதைகளில் ஒன்றுதான் ‘தக்காளி பழமா, காயா’? அம்மா கையாண்ட உத்தி என்ன என்பதும், திரும்பி வந்த மற்ற கதைகளும் எங்கே இருக்கின்றன என்றால், இவள் பாரதி எழுதிய ‘குட்டி மோச்சு’ சிறார் நாவல் புத்தகத்தில் இருக்கின்றன. குழந்தைகளுக்காக ரசனையோடு கதை சொல்லும் பெரியவர்களுக்கு அந்நேரத்தில் ஒரு வண்ணமயமான மாற்று உலகப் பயணம் வார்ப்பது உறுதி. அதுவும் சொந்தக் கற்பனையாக இருந்துவிட்டால் கிடைக்கிற மாயவுலகப் பயணத்தின் சுகம் தனி ரகம். குழந்தைகளை மடியில் போட்டுக்கொண்டும் தோளில் சாய்த்துக்கொண்டும் கதை சொல்கிற அத்தகைய ஒரு சுகத்தைத் தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார் இவள் பாரதி. அதற்கு ஒவ்வொரு கதையும் சாட்சி. ஒரு செடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் தனது ஓவியத்தால் நட்பை ஏற்படுத்திக் கொடுக்கிறான் மோச்சு. அப்புறம் வண்ணத்துப் பூச்சிகள் ஒரு கோரிக்கையோடு அவனை மொய்ப்பதைக் கூறுகிறது ஒரு கதை. வானவில் தனது வண்ணம் மங்கிப்போனது ஏனென்று மோச்சு குடும்பத்தினருக்கு இன்னொரு கதையில் விளக்குகிறது. புத்தக அணிந்துரையில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் கூறியிருப்பது போல, கதைகள் குழந்தைகளுக்கானவை மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கூட. வறட்டு யதார்த்தமற்ற, அற்புதங்களும் ஆனந்தங்களும் நிறைந்த வனத்திற்குள் இட்டுச்செல்கின்றன. வானவில்லுக்கு மறுபடி ஏழு வண்ணங்களையும் மோச்சு, அவனுடைய அக்கா, அம்மா ஆகியோர் மீட்டுத்தருகிற கதை சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. வாடகை வீட்டுச்சுவரில் குழந்தைகள் ஓவியம் வரைந்திருந்தால் (அதாவது கிறுக்கியிருந்தால்) உரிமையாளர்கள் அதற்கு தண்டம் வசூலிப்பதைப் போகிறபோக்கில் விமர்சிக்கிறது ‘ஓவியங்களின் கதை.’ குழந்தைகளின் ஆடைகள் தொடர்பாகப் பலரிடம் இருக்கும் தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது ‘குட்டி மோச்சு பாப்பாவான கதை.’ வெளியே பதுங்கிய கதைகள் திரும்பிவிட்டாலும், ஒரு கதையை மட்டும் பெட்டிக்குள் வைக்க முடியவில்லை. நீரில் நனைந்து எழுத்துகள் அழிந்துவிட்டதால். ஆகவே அந்தக் கதையை அம்மா தானே எழுதுகிறார். அது என்ன கதை தெரியுமா என்ற புதிர் புத்தகத்துக்கு சுவை கூட்டுகிறது. “சில சம்பவங்கள் மிகப்பெரிய கேள்விகளை நமக்கு எழுப்புகின்றன” என்று உதயசங்கர் சொல்வது இப்படிப்பட்ட கதைகளைப் பற்றிதான் போலும். பெரியவர்களிடையே இவை பற்றிய விவாதங்கள் நடப்பதும், குழந்தைகள் மனங்களில் இத்தகைய கேள்விகள் முளைவிடுவதும் நல்லதுதானே. ஆறு தனித்தனிக் கதைகள். எல்லாக் கதைகளிலும் வருகிற ஒரு கதாபாத்திரம். இதனாலேயே ‘நாவல்’ என்று சொல்லிவிட முடியுமா என்ற விமர்சனம் எழக்கூடும். சிறாருக்கான படைப்பென்றாலும் இனி வரும் ஆக்கங்களில் இதனைப் படைப்பாளி மனதில் கொள்வார் என எதிர்பார்க்கலாம். ஆயினும் புத்தகத்தில் உள்ள கதைகளைக் குழந்தைகள் மொத்தமாக வாசிக்கவும் கொடுக்கலாம், தனித்தனியாகவும் சொல்லலாம். நிலவன் ஓவியங்கள் தாங்களும் சேர்ந்து அமர்ந்து கதை சொல்கின்றன. மோச்சுவின் பெட்டிக்குக் கதைகள் திரும்பி வந்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே குட்டி மோச்சுகளிடம் உள்ள பெட்டிகள் திறக்கப்பட வேண்டும், குழந்தை இலக்கிய உலகம் வளம் பெற வேண்டும். தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகளில் பெண்கள் குறைவு என்ற நிலைமையும் மாற வேண்டும். நூல்: குட்டி மோச்சு (சிறார் நாவல்) ஆசிரியர்: இவள் பாரதி வெளியீடு: நம் கிட்ஸ் பதிப்பகம் மின்னஞ்சல்: namtamilmedia@gmail.com ISBN – 9788 – 195 – 333899 தொடர்புக்கு: 9566110745 நன்றி - புக்டே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்