ரயில் - இந்திரஜித் நாவல் திறனாய்வு - பத்திரிகையாளர் அ.குமரேசன்


வரலாற்றுத் தடத்தில் அந்த ரயில் பாதையின் அதிர்வு


காலத்தின் பயணத்தில் வந்த நிகழ்வுகளை ஆற்றோட்டமாய்ப் பதிவு செய்வது வரலாறு. ஆனால் வரலாற்றின் பயணத்தில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிகழ்வுகள் நிறைய. அரசியல் ஆதிக்க சூழ்ச்சிகளோடு நடந்த மோசடிகள் அவை. அப்படி, தொடர்புடைய மக்களுக்கே தெரியவராமல் மறைக்கப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜப்பான் மன்னர் கட்டிய சயாம் ரயில் பாதைக்காக உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட மக்களின் கதை.கடுமையான போர்ச்சூழலில், ஆக்கிரமிப்புகளுக்குத் தோதாக அப்படியொரு ரயில் பாதைக்கு அன்று பிரிட்டிஷ் அரசாங்கமே திட்டமிட்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியை, பெரும் பொருட்செலவு கருதி நிறுத்திவைத்துவிட்டது. பணத்தை அல்லாமல் மனிதர்களை வைத்தே பணியை முடிக்கலாம் என்று கணக்குப் போட்டது ஜப்பான் ஏகாதிபத்திய அரசு. போர்க்கைதிகளாகப் பிடிபட்டவர்களும் கூலியடிமைகளும் எதற்காக இருக்கிறார்கள்? பர்மா, தாய்லாந்து, மலேசியா. சீனா என பல நாட்டவர்கள், வெள்ளையர்கள் கூட - அந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆயினும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள்தான். சொன்னபடி வேலை செய்தால் சோறு என்ற நிலையில், கூலிக்காகச் சென்றவர்களில் தங்கள் உயிரையே இழந்தவர்கள் நிறையப் பேர்.


ஏஜென்டுகளால் கூலி பேசி கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல, மிரட்டிக் கொண்டு செல்லப்பட்டவர்கள், எதற்கென்றே தெரியாமல் லாரியில் ஏற்றிக் கொண்டுசெல்லப்பட்டவர்கள் என்று அந்த அடிமைகள் சேர்க்கப்பட்டார்கள். கோவிலுக்குப் போகும்போது லாரியில் ஏற்றப்படுகிறான் ஒருவன். தாயிடமிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுகிறான் ஒருவன் – வலியைத் தாங்க முடியாமல் அவனே தன் தாயிடம் “என்னை விடு” என்று சொல்லி உதைத்துக்கொண்டு போகிற அளவுக்கு.


நேரடிச் சித்திரவதைகள் (அந்தச் சித்திரவதைளின்போது ராணுவ சிப்பாய்களின் முகங்களில் எவ்வளவு பேரானந்தம்), விபத்துகள், தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கிச் சூடுகள், திடீர் நோய்த்தாக்குதல்கள் என்று மடிந்த தமிழர்களின் எண்ணிக்கை 80,000 என்கிறார் ‘ரயில்’ நாவலைப் படைத்துள்ள சிங்கப்பூர் எழுத்தாளர் இந்திரஜித்.


ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன், ‘சயாம் பர்மா மர்ம ரயில் பாதை’ என்ற ஆவணப்படதைத் தயாரித்து வெளியிட்டிருந்தார் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன். ரயில் பாதை அமைப்பதில் ஈடுபடுத்தப்பட்டு உயிரோடு இருந்தவர்களில் சிலரது பேட்டிகள் உட்பட இணைத்து வந்த அந்த ஆவணப்படம் அதிர்ச்சியை விதைத்தது. ரயில் பாதைக்குச் சுரங்கம் தோண்டுவதை விடக் கடினமான முயற்சியாகத் தகவல்களைத் தேடித் தேடி, உரிய ஆவணங்களை ஒப்பிட்டு அந்த ஆவணப்படம் வந்தது. இதுபற்றிப் பதிவு செய்த வேறு சில தமிழ் நூல்கள் வந்துள்ளன. அதே போல் பர்மா, தாய்லாந்து, மலேசியா. சீன தொழிலாளிகள் அனுபவித்த துயரங்களும் அந்த மொழிகளில்  பதிவாகியிருக்கும். ஆயினும், தமிழ் மக்களிடையே அந்தக் கொடுமை விரிவாகப் பேசப்படவில்லை ஏன்? நினைவில் கொள்ளப்படவே இல்லையே ஏன்? கூலிக்காகச் சென்றவர்கள்தானே என்ற எண்ணமா, அல்லது எந்தத் தகவலுமே வந்து சேராமல் தடுக்கப்பட்டுவிட்டதா?


முந்தைய நூல்களும் ஆவணப்படமும் அந்த வரலாற்றை மீட்டுத் தருகின்றன. இந்திரஜித் வரலாற்றுப் பதிவுகளுக்குள் பெரிதாகச் செல்லவில்லை. அந்த வரலாறு சார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளாகக் கதாபாத்திரங்களை உலாவவிட்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார். வியர்வையும் ரத்தமுமாக துரை, சாம்பா, கிருஷ்ணன், முத்து என அந்தக் கதாபாத்திரங்கள் பேசுவதும் அனுபவிப்பதும் நம் மனங்களில் ரயில் பாதைக்காக உடைக்கப்பட்ட பாறைகளை ஏற்றிவைக்கின்றன. கதாபாத்திரங்களில் ஒன்று ஜப்பானிய சிப்பாய். கவிதையால் நிரம்பித் ததும்புகிற அவனுடைய மனம் நாடுவது அன்பையும் போரில்லா உலகத்தையும்தான். ஆனால் அவனுக்கு ஏற்படுகிற முடிவு ஒரு சோகக்கவிதை.


ஒரு தொழிலாளி எப்படி நடத்தப்பட்டார் என இந்த வரிகள் காட்டுகின்றன: “ஒரு தமிழ்க்கூலி சிப்பாய்களிடம் சிக்கியிருந்தான். அவர்கள் அவனை விளையாட்டுப்போல் அடித்துக்கொண்டிருந்தனர். ஏதோ ராணுவப் பயிற்சிமுகாமில் கிடைத்துவிட்ட மணல் மூட்டை போல அவன் அடிக்கப்பட்டான்.”


தப்பியோடிய முத்து இந்நேரம் கொல்லப்பட்டிருப்பான் என்று சாம்பா சொல்ல, ஏன் இப்படியே யோசிக்க வேண்டும். தப்பித்துப்போயிருப்பான் என்று நினைக்க வேண்டியதுதானே என்கிறான் துரை. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே தொழிலாளர்கள் தினமும் இப்படித்தான் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். காட்டு விலங்குகளை விரட்டுவதற்கு "குர்ர்ர்ரா" இன்று கூச்சல் எழுப்பப் பழகியிருந்தார்கள்.


முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தொழிலாளர்களுத் தெரியவில்லை. “எனக்கு நேத்து நடந்ததே இன்னைக்கு ஞாபகம் இல்லை. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கு. எல்லாச் சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கு.  கூடிய சீக்கிரம் நான் பைத்தியம் பிடிச்சு இங்க காடு மேடெல்லாம் சுத்தப்போறேன்,” என்கிறான் கிருஷ்ணன். அப்படிச் சிலர் சுற்றித் திரிய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எல்லோருமே அப்படிக் காடுமேடெல்லாம சுற்றிக்கொண்டிருக்க முடியவில்லை. ஏனெனில், “சிப்பாய்கள் சொல்வதைக் கேட்காமல் போகிறவர்கள் எல்லாமே சுட்டுத்தள்ளப்பட்டனர். அவர்களில் மனநோயாளிகளும் இருக்கலாம்.”


எல்லா அடிமைகளும் ஒரே மாதிரியாகப் பாகுபாடின்றி நடத்தப்பட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. வெள்ளையர்களைப் பொறுத்தவரையில், இறந்தவர்களை மதச்சடங்குப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். தமிழர்களின் சடலங்கள் மொத்தமாக எரிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன.


புதைப்பதற்குக் குழி தோண்டும் வேலை தரப்படுகிறது துரைக்கும் சாம்பாவுக்கும். சடலங்கள் வந்துகொண்டே இருக்க, பாறைகளை உடைத்து ரயில்பாதை அமைப்பதை விடவும் இது எவ்வளவு கடினமான வேலையென வியர்வையிலும் உடல் வலியிலும் உணர்கிறார்கள்.


தங்கவைக்கப்படும் இடத்திற்கு அருகில் ஆறு ஓடுகிறது. அதிலே இறங்கிக் குளித்தால் புத்துணர்ச்சியாக இருக்குமென நினைக்கிறான் துரை. ஆனால் ஆற்றில் இறங்க மனம் வரவில்லை – காரணம் அதில் எல்லாமே மிதந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்பட்டிருக்கிற இடத்தின் ஆறு வேறு எப்படி இருக்கும்?


வேறோர் இடத்தில், ஒரு தவிர்க்க முடியாத தருணமாக ஒரு கொரியப் பெண்ணின் காதல் கிடைக்கிறது சாம்பாவுக்கு.  காதலா அல்லது அதற்கு வேறு எதுவும் பெயர் இருக்கிறதா என்று எழுத்தாளரே கேட்கிறார். அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் நினைக்கிறான் சாம்பா. காரணம் அவள் பிடித்து வைக்கப்பட்டிருப்பது, சிமென்ட் மூட்டைகளை வைப்பதற்காகக் கட்டப்பட்ட கட்டடம். தற்காலிகமாகச் சிப்பாய்களின் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நாட்களில் சிமென்ட் மூட்டைகள் வந்து இறங்கியபின் அந்தப் பெண்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள். வேறு பல இடங்களுக்கும் நேரில் சென்று எழுத நினைத்திருந்தது, கோவிட் சூழலால் சாத்தியமின்றிப் போய்விட்டது என்று முன்னுரையில் தெரிவிக்கிறார் எழுத்தாளர்.


நாவல் வரலாற்றுக்குள் செல்லாதது போலவே அன்றைய அரசியலுக்குள்ளும் ஆழமாகச் செல்லவில்லை. நேதாஜி பற்றிய பதிவு அதற்கொரு எடுத்துக்காட்டு. ஜப்பான் அதிகாரிகளுடன் அவர் பேசுவார், தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும், தங்களுடன் பேசுவதற்கு வருவார் என்றும் தமிழ்த்தொழிலாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், “அன்று வேலை முடிந்ததும் இரவுதான் வந்தது. நேத்தாஜி வரவில்லை,” என்று அந்த அத்தியாயத்தையே முடித்துவிடுகிறார் இந்திரஜித்.


இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கட்டமாகத் தனக்கென ஒரு வழிமுறையை வகுத்துக்கொண்டு, பிரிட்டிஷ் படையை விரட்டியடிக்க இந்திய தேசிய ராணுவம் என்று அமைத்து, அதற்காக ஜப்பான் அரசின் உதவியையும் நாடியிருந்தார் நேதாஜி. அதற்கான பேச்சுவார்த்தைகளில் பிறநாட்டுத் தமிழ்த்தொழிலாளர்கள் நிலை பற்றிப் பேசுவதற்கும் தலையிடுவதற்கும் ஜப்பான் அரசு அனுமதித்திருக்குமா? எத்தகைய சூழலில் அவர் வரவில்லை? அது பற்றிய சிறு உரையாடல் கூட இல்லாமல் “வரவில்லை” என்று மட்டும் பதிவு செய்வது, வரலாற்றை வரலாறாக வாசிக்க வேண்டும் என்றாலும் கூட, இன்று எப்படிப்பட்ட எண்ணங்களை ஏற்படுத்தும்? இந்தப் பகுதியைக் கூடுதல் பொறுப்புடன் கையாண்டிருக்க வேண்டும்.


அன்றைய வரலாற்றோடு கலந்த வாழ்க்கை நிலைகளைப் பேசுவதுதான் படைப்பின் நோக்கம். அந்தப் பயணத்தை ‘ரயில்’ வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.


ஜப்பான் ராணுவம் சரணடைந்ததால் தொழிலாளர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். உயிரோடு திரும்புவோமா என்றிருந்த நிலையில் வீட்டுக்கு வந்து மனைவியின் கையால் தண்ணீர் பருகுவது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று துரை நினைப்பது இயற்கையான உணர்வு. மனைவி ரப்பேச்சா கையால்  தண்ணீர் பெற்றுப் பருகுகிறான் துரை. ஆனால்…


மண்ணாதிக்க மோகமும் போர்வெறியும் ஏற்படுத்தும் எந்தவொரு இழப்பைக் காட்டிலும் கொடியது எளிய மக்களின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சீர்குலைவுகளும் பிரிவுகளும். அதனை அழுத்தமாகப் பதிவு செய்கிறது நாவல். உலகில் எங்கும் காணக்கூடிய ஆதிக்கப் போர்வெறியர்களை, துரை போல “குர்ர்ர்ரா…” என்று கூச்சல் போட்டு விரட்ட வேண்டும் மனிதகுலம்.


“கரையை நோக்கி எழுந்து வந்தது கடல். கால் கணம் நின்று யோசித்தது. திரும்பிப் போய்விட்டது. ஏற்கனவே இதே போல் இங்கு வந்து விட்டு போனது போல் இருந்தது. அது வெறும் பிரமை என்று கடலுக்குத் தெரியும். இந்தக் கரைக்கு இதற்கு முன் வந்ததே இல்லை. முதல் முறை. அந்த வியப்போடு கரையை எட்டிப்பார்த்தது. தவித்தது. பிறகு திரும்பிச் சென்றது...-இப்படியான அழகியல் சித்தரிப்புகளும் ”  அந்த ஒட்டுமொத்த மானுட உணர்வுக்கு இட்டுச்  செல்கின்றன.


இன்று ஜப்பான் உட்பட அந்த நாடுகளுக்கிடையேயான உறவில் பல மாற்றங்களும் ஒத்துழைப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இலக்கியப் படைப்பின் நோக்கம் அன்றைய பகையைப் பேசுவதல்ல, இனியேனும் இப்படிப்பட்ட போர்ச்சூழல்களும் மானுடத் துயரங்களும் தொடரக்கூடாது, அதற்காகப் பாடுபடுகிற உலகம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே.


சயாம் ரயில் பாதையின் முழு வரலாற்றைத் தேடிப்படிக்க இந்தப் புனைவு ஒரு தூண்டுதலாக அமையும். படைப்பாளி இந்திரஜித்தும் வெளியீட்டாளர் ‘தங்கமீன்’ பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்.


நாவல்: ரயில்

எழுத்தாளர்: இந்திரஜித்


வெளியீடு: தங்கமீன் பதிப்பகம்

ISBN: 978-981-18-3295-6


பக்கங்கள் 152

விலை ரூ. 150

சிங்கப்பூர் டாலர் 20  
 


கருத்துரையிடுக

0 கருத்துகள்