நீ பாதி நான் பாதி - திருமண உறவில் இணைகிற இணைந்திருக்கிற அனைவரும் படிக்க வேண்டிய நூல்

இவள் பாரதி


’வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள். வீட்டையாவது பிரச்சினை என்றால் விற்றுவிடலாம். ஆனால் திருமணத்தில் அது எத்தனை சிக்கல்களை கொண்டுவந்துவிடும்.

புத்தகத்தை திறந்ததும் நடிகர் சிவக்குமாரின் அணிந்துரை. அதில் ஓரிடத்தில், ‘குழந்தை பிறந்துவிட்டால் அந்தத் தொப்புள்கொடியின் மீது கைவைத்து சத்தியம் செய்துகொள்ளுங்கள். ஆயிரம் அபிப்ராய பேதங்கள் வந்தாலும் பிரியமாட்டோம் என்று. இல்லையெனில் இந்த மண் உங்களை மன்னிக்காது’ என்கிறார்.

நடிகர் விஜயின் தந்த எஸ்.ஏ.சி தனது அனுபவம் குறித்து கூறியது நெகிழ்ச்சி. தனது மகனுக்கு பால்பவுடர் வாங்க க‌ஷ்டப்பட்ட நிலையிலும் அவரது மனைவி ஷோபா தன் கணவர் மீது வைத்த அன்பும் நம்பிக்கையும்தான் இவ்வளவு வளர்ச்சிக்கும் அடிப்படை என்று கூறுகிறார்.

தனது நேர்மையால் ஏற்பட்ட பல இடர்களைத் தன் அன்பால் தாங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் மனைவி விமலா, கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கட்சிப்பணி, தொடர் போராட்டம், கூட்டம், சிறைவாசம் என தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காகவே சேவை செய்ய துணைநின்ற அவரது மனைவி ஆகியோரைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது நாமெல்லாம் எவ்வளவு சுகமான வாழ்க்கையை சுமையாக மாற்றிக்கொள்கிறோம் என்கிற எண்ணம் வாசகரைத் தைக்கவே செய்யும்.

ஆணோ பெண்ணோ திருமணம் என்பது உறவுக்கும், குழந்தைக்குமான விஷயமாக மட்டும் இல்லை. அதில் பெரும் பொறுப்பையும், பொறுமையையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆண் அப்படித்தான் இருப்பான் என்கிற காலமெல்லாம் கரையேறிவிட்டது.

திருமண உறவு என்பது எங்கே விரிசலைத் தரும்? கணவன் மனைவி சண்டையிடாமல் இருக்க முடியுமா? திருமணன்உறவு ஏதேனும் ஒரு காரணத்தால் அறுந்து போகச் செய்யாத நூலிழையைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கு விடையாக இந்த நூலில் பிரபலங்கள் தங்கள் மனைவி குறித்து பகிர்ந்திருக்கும் கருத்துக்கள் மிக ஆழமானவை.

 இந்த நூலில் நல்லகண்ணு, சிவகுமார், சாலமன் பாப்பையா, எஸ்.ஏ.சந்திரசேகர், சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர். நாராயணரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது மணவாழ்வின்  ரகசியங்கள் குறித்து  பகிர்ந்து


கொண்டுள்ளார்கள்.

மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள் குறித்து சொல்லக்கூடிய இந்நூலை ஒருமுறையாவது வாசித்துவிடுங்கள். எப்போதேனும் கணவன் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவனுக்கோ கோபம் தலைதூக்கும்போது ஓரிரு பக்கங்கள் எடுத்துப் புரட்டிப் பாருங்கள். துயரங்களும் சோகங்களும் கண்முன் கரைவைதைக் காண்பீர்கள்.


புத்தகத்தின் பெயர் : நீ பாதி நான் பாதி
விலை : 110 ரூ
பதிப்பகம் : அந்திமழை வெளியீடு
தொடர்பு எண் : 94432 224834

கருத்துரையிடுக

0 கருத்துகள்